கடந்த, 1930ல், சிறை வாசத்தில் இருந்த காந்திஜிக்கு, சபர்மதி ஆசிரமத்திலிருந்த சிறுவர், சிறுமியர், வாரம் ஒருமுறை கடிதம் எழுதுவர். காந்திஜியும், தனக்கே உரித்தான நகைச்சுவையோடு, சுருக்கமாக பதில்களை எழுதி அனுப்புவார். அவரது சுருக்கமான பதில்கள், சிறுவர், சிறுமியருக்கு திருப்தி அளிக்கவில்லை. ஏனெனில், அவர்கள் விரிவான பதில்களையே எதிர்பார்த்தனர். 'பாபுஜி, அர்ச்சுனன் விடுத்த சிறு சிறு வினாக்களுக்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணன், அத்தியாயம், அத்தியாயமாக விடை தந்தருளினார். தங்களது பதில்கள் மட்டும் சுருக்கமாக, ஓரிரண்டு சொற்களாக உள்ளனவே!' என்று எழுதி, தங்கள் குறையைத் தெரிவித்தனர். காந்திஜியும், இவ்வாறு பதில் எழுதினார்: என் அன்புக் குழந்தைகளே, ஸ்ரீகிருஷ்ணனுக்கு இருந்தது ஒரே ஒரு அர்ச்சுனன் மட்டுமே! எனக்கோ, ஒரு கூட்டமே இருக்கிறதே, என்ன செய்வது? எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் என். சொக்கன் எழுதிய, 'குஷ்வந்த் சிங்!' என்ற நுாலிலிருந்து: எ ழுத்தாளர் குஷ்வந்த் சிங், 'இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி'யின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றதும், அதன் விற்பனை படிப்படியாக அதிகரித்து, மற்ற இதழ்களை முந்திச் சென்றது. ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில், அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா மற்றும் அவருடைய மகன் சஞ்சய் ஆகியோருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இந்திராவையும், சஞ்சையையும் பலமாக ஆதரித்து எழுதினார், குஷ்வந்த் சிங். இந்த நிலைமையில்தான், நெருக்கடி நிலையை அறிவித்தார், இந்திரா. பத்திரிகையாளர்களுக்கு, தணிக்கை முறை அமல்படுத்தப்பட்டது. என்றாலும், இந்திராவின், 'எமர்ஜென்சி' முடிவு சரியானதுதான் என்று ஆதரித்து எழுதினார், குஷ்வந்த்சிங். அடுத்து வந்த தேர்தலில், இந்திரா காங்கிரஸ் தோற்று, மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா கட்சியின் ஆட்சி அமைந்தது. அதுவரை, இந்திராவுக்கு ஜால்ரா தட்டிக் கொண்டிருந்த பல பத்திரிகைகள் சட்டென்று திசை திரும்பி, அவரை கடுமையாக விமர்சிக்க துவங்கின. ஆனால், குஷ்வந்த் சிங் எப்போதும் போல இந்திராவையும், சஞ்சயையும், அவருடைய ஆசிரியர் பக்கங்களில் ஆதரித்து எழுதி வந்தார். நாட்டின் முக்கியமான வார இதழ், எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு ஆதரவாக எழுதுவதை, ஆளும் கட்சியினரால் பொறுக்க முடியுமா? குஷ்வந்த் சிங்கை உடனடியாக பணி நீக்கம் செய்யும்படி அவருடைய பத்திரிகை முதலாளியை வற்புறுத்தினார். இதே சமயத்தில், குஷ்வந்த் சிங்கின் இரண்டாவது பணி ஒப்பந்தமும் முடிவுக்கு வந்ததால், 'இந்த முறை உங்கள் ஒப்பந்தம் நீட்டிக்கப்படாது; நீங்கள் வேறு பத்திரிகைக்கு மாறிக் கொள்ளுங்கள்...' என, கண்டிப்பாக சொல்லி விட்டது, பத்திரிகை நிர்வாகம். குஷ்வந்த் சிங்கிற்கு ஏமாற்றமும், வருத்தமும் ஒரே நேரத்தில் தாக்கின. வேதனையை விழுங்கியபடி, டில்லி திரும்புவதற்கான ஏற்பாடுகளில் இறங்கினார். ஒப்பந்தப்படி, குஷ்வந்த் சிங்கின் பதவி காலம் முடிவடைய இன்னும், பத்து நாட்களே மீதமிருந்தபோது, நிர்வாகத்தினரிடம் யாரோ ஒரு புது வதந்தியை கிளப்பி விட்டனர். 'வீக்லியில் தன் கடைசி தலையங்கமாக ஒரு காரசாரமான கட்டுரையை எழுதினார், குஷ்வந்த் சிங். அதில், ஜனதா கட்சியையும், அவர்களது ஆட்சியையும் கண்டபடி திட்டித் தீர்த்திருக்கிறார். அந்தக் கட்டுரை மட்டும் வெளியானால், அரசாங்கம் உங்களை சும்மா விடாது. அவர் போய் விடுவார், நீங்கள் மாட்டிக் கொள்வீர்கள். யோசியுங்கள்...' இதுதான் அந்த வதந்தி. பதற்றத்தில், இந்த வதந்தியின் பின்னே கொஞ்சமாவது உண்மை இருக்கிறதா, இல்லையா என்று கூட யோசிக்கத் தோன்றாமல், சட்டென்று, குஷ்வந்த் சிங்கை பதவி நீக்கம் செய்து விட்டது, பத்திரிகை நிர்வாகம். அதாவது, ஓய்வு பெறுவதற்கு ஒரு வாரம் முன், 'டிஸ்மிஸ்!' உண்மையில் அப்படியொரு கட்டுரையை, குஷ்வந்த் சிங் எழுதவே இல்லை. ஆனால், அந்தப் பதவி நீக்கம் செய்தி அவரிடம் தெரிவிக்கப்பட்டபோது, அவர் எந்த மறுப்பும் சொல்லாமல், தன்னுடைய குடையை எடுத்துக் கொண்டு, அலுவலகத்திலிருந்து வெளியே நடந்தார். அவருடைய ஒன்பதாண்டு கால, வண்ணமயமான 'இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி' வாழ்க்கை அவமானத்தின் வலியோடும், வேதனையோடும் முடிவுக்கு வந்தது. நடுத்தெரு நாராயணன்