திண்ணை!
எழுத்தாளர், பி.எஸ்.ராமையா எழுதிய, சாகித்திய அகாடமி விருது பெற்ற, 'மணிக்கொடி காலம்!' என்ற நுாலிலிருந்து: எழுத்தாளரும், 'மணிக்கொடி' இதழின் ஆசிரியராகவும் இருந்த, பி.எஸ்.ராமையா, காங்கிரஸ் கட்சிக்காக பிரசாரம் செய்தபோது நடந்த சம்பவத்தை அவரே எழுதியது: திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தென்காசியிலிருந்து, 10 கி.மீ., துாரத்தில் உள்ள, இலஞ்சி என்ற ஊரில், இரவு 9:00 மணிக்கு பிரசார கூட்டம். மாலை 4:30 மணிக்கு அங்கு போய் சேர்ந்து விட்டேன். நேரம் அதிகம் இருக்கவே, பக்கத்து கிராமத்துக்கு சென்று பிரசாரம் செய்யலாமே என்று, நினைத்தேன். பிரசாரம் செய்யும் அறிவிப்பை கிராமத்தில் தெரிவிக்க வேண்டுமானால், தண்டோரா அடித்து தான் தெரிவிக்க முடியும். ஆனால், தண்டோரா அடிக்க அன்று ஆள் கிடைக்கவில்லை. அதனால், நானே ஒரு டப்பாவின் மேல் சிறு குச்சியால் அடித்தபடி, கிராமத்தின் மூன்று தெருக்களின் முனைகளிலும் நின்று, 'இன்றிரவு 7:00 மணிக்கு பெருமாள் கோவில் முன் நடக்கும் கூட்டத்தில், சென்னை மணிக்கொடி ஆசிரியர், பி.எஸ்.ராமையா, 'காங்கிரசும், மக்கள் கடமையும்!' என்பது பற்றி பேசுவார்...' என்று அறிவித்தேன். இரவு, 7:00 மணிக்குக் கூட்டம் துவங்கியது. என்னுடன் வந்த தொண்டர் எழுந்து, 'இப்போது மணிக்கொடி ஆசிரியர் ராமையா அவர்கள் பேசுவார்!' என்று அறிவித்தார். நான் பேச எழுந்தவுடன், கூட்டத்தின் முன் வரிசையில் உட்கார்ந்திருந்த ஒரு சிறுவன், 'டேய், இவர்தான்டா சாயங்காலம் டப்பாத் தட்டினார்...' என்றான். கூட்டத்தினர், 'கொல்'லென்று சிரித்தனர். நான் ஒரு நிமிடம் ஏதும் பேச தோன்றாமல் மவுனமாக நின்றேன். ****** ஒடிசாவின் முதல்வராக இருந்தவர், பிஜுபட்நாயக். அவருக்கும், ஆசிய கண்டத்தில் அமைந்துள்ள இந்தோனேஷிய நாட்டின், அதிபராக இருந்த, சுகர்னோவுக்கும் இடையே மிக நெருக்கமான நட்பு உண்டு. பிஜுபட்நாயக் சிறப்பாக விமானம் ஓட்டுவார். சுகர்னோவுக்கு பெண் குழந்தை பிறந்ததை கேள்விப்பட்டதும், ஒரு சிறிய விமானத்தை, தானே ஓட்டிக்கொண்டு, இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தா நகருக்கு சென்றார், பிஜு. அப்போது, குழந்தைக்கு என்ன பெயர் சூட்டுவது என, குழம்பிக்கொண்டிருந்தனர், சுகர்னோ குடும்பத்தினர். பிஜுபட் நாயக்கிடம் ஆலோசனை கேட்டார், சுகர்னோ. அதற்கு அவர், மேகத்தை குறிக்கும், மேகவதி என்ற பெயரை கூற, உடனே, அந்த பெயரை, தன் மகளுக்கு சூட்டினார், சுகர்னோ. உயர்ந்த மனிதர்களுக்கு மதம் என்பது, நண்பர்களை உருவாக்கிக் கொள்ளும் ஒருவழி. அற்பத்தனமானவர்களுக்கு மதம் என்பது சண்டை போட்டுக் கொள்வதற்கான ஒரு ஆயுதம் என, அப்துல்கலாம் கூறியது இங்கு நினைவுகூரத்தக்கது. ******* ராஜாஜியை ஆசிரியராகவும், கல்கியை துணை ஆசிரியராகவும் கொண்டு, கடந்த, 1929ல், சேலம் மாவட்டம் திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்திலிருந்து, 'விமோசனம்' என்ற தமிழ் மாதப் பத்திரிகை வெளிவந்தது. இதன் ஆண்டு சந்தா, ஒரு ரூபாய். தனிப் பிரதியின் விலை, ஓர் அணா. 'விமோசனம்' ஒன்பதாவது இதழ் வெளியான போது, பர்மாவிலிருந்து(தற்போதைய மியான்மர்), சாமிநாதன் என்பவர், நான்கு ஆண்டுகளுக்கு சந்தாத் தொகையாக, நான்கு ரூபாய் அனுப்பி வைத்தார். எத்தனை ஆண்டுகள் பத்திரிகை வரும் என்பது, நிச்சயம் இல்லாமல் இருந்தபடியால், அந்த நான்கு ரூபாய் சந்தாத் தொகையை ஏற்க மறுத்து, வாசகர் சாமிநாதனுக்கே அத்தொகையை திருப்பி அனுப்பினார், ராஜாஜி. நடுத்தெரு நாராயணன்