விசேஷம் இது வித்தியாசம்!: நெல் பொறுக்கி முனிவர்!
உஞ்சவிருத்தி என்னும் சொல்லை கேள்விப்பட்டிருப்பீர்கள். பெரும்பாலோர், இதற்கு 'பிச்சை எடுத்தல்' என்று பொருள் சொல்வர். பிச்சை எடுப்பவருக்கு, எல்லா வகை சமைத்த உணவும் கிடைக்கும். ஆனால், உஞ்சம் என்றால், 'நெல்லைப் பொறுக்குதல்' என்று பொருள். அரிசியை தானமாகப் பெறுவதும், உஞ்சவிருத்தியே. விருத்தி என்ற சொல்லுக்கு, பெருகுதல் என்ற பொதுப்பொருள் இருந்தாலும், இந்த இடத்தில், உயிர் வாழ்தல் அல்லது ஆயுளை தக்க வைத்துக் கொள்ளல் என்று பொருள் கொள்ளலாம். துறவிகள் எடுக்கும் யாசகமே, உஞ்சவிருத்தி. இவர்கள், அரிசியை தானமாகப் பெற்று, அதை கஞ்சியாக்கி பகவானுக்கு சமர்ப்பித்து, பின் உண்பர்.நெல் அடிக்கும் களத்தில், விவசாயிகள் கொண்டு சென்றது போக, சிதறிக் கிடக்கும் நெல்மணிகளைப் பொறுக்கி எடுத்து, அதை குத்தி அரிசியாக்கி, கஞ்சி வடித்து காலமெல்லாம் சாப்பிட்டார், ஒரு முனிவர். அவரது பெயர், மவுத்கல்யர் என்னும் முத்கலர். கற்புக்கரசி நளாயினியின் கணவர். தன் கணவரை, கூடையில் வைத்து, தலையில் சுமந்து சென்றவள், நளாயினி. ராஜகுமாரியான நளாயினி, தவமுனிவர் ஒருவரைத் திருமணம் செய்ய ஆசைப்பட்டாள். அந்த சமயத்தில் அரண்மனைக்கு வந்தார், முத்கலர். எதன் மீதும் ஆசை கொள்ளாமல், பொறுக்கி எடுத்த நெல்லை கஞ்சியாக்கி குடித்த அவரை விட சிறந்த கணவர், தனக்கு அமைய முடியாது என, நினைத்தாள். திருமணமும் நடந்தது. கணவரின் மனம் கோணாமல் நடந்தாள். தன் மனைவியின் புகழை மேலும் அதிகரிக்க, எண்ணம் கொண்டார், முனிவர். தனக்கு தொழுநோயை வரவழைத்தார்.ஒரு கூடையில் அமர்ந்து, தான் செல்லும் இடமெல்லாம் துாக்கிச் செல்லும்படி மனைவிக்கு கட்டளையிட்டார், முனிவர். நளாயினியும் சளைக்காமல் நடந்தாள்.ஒருமுறை, தாசி வீட்டுக்குப் போக ஏற்பாடு செய்யுமாறு, மனைவிக்கு கட்டளையிட்டார். அதையும் செய்தாள், நளாயினி.தாசி வீட்டுக்குள் சென்ற முனிவர், 'சகோதரியே! நான் தவறான நோக்கத்தில் வரவில்லை. என் மனைவியின் புகழை ஊரறியச் செய்யவே வந்தேன். கணவர் சொல் தட்டாத பெண் என்ற புகழ், இந்த உலகம் உள்ளளவும் அவளுக்கு நிலைக்க வேண்டும் என்பதே, என் நோக்கம்...' என்றார். நெகிழ்ந்து போனாள், தாசி.முத்கலருக்கும், தமிழகத்திற்கும் தொடர்பு இருக்கிறது.ஒருமுறை சிவன், உடும்பு வடிவில் மாறி, பூலோகம் வந்து விட்டார். செண்பகவனம் ஒன்றில் வாழ்ந்தது, அந்த உடும்பு. அந்த வனத்துக்கு வந்தார், முத்கலர். அவருக்கு தரிசனம் தந்தார், சிவன். அந்த இடத்தில் சிவனுக்கு கோவில் அமைந்தது.சிறுகுன்றின் மீது அமைந்துள்ளது, ஓசூர் சந்திர சூடேஸ்வரர் கோவில். இந்த கோவிலின் நுழைவாயிலில் முத்கலருக்கு சன்னிதி உள்ளது. அவருடன் உச்சாயிணர் என்ற முனிவரும் உள்ளார்.உடலுடன் சொர்க்கம் சென்றவர் என்ற பெருமையும் முத்கலருக்கு உண்டு. வேறு யாருக்கும் இந்த பாக்கியம் உலகில் கிடைக்கவில்லை.தம்பதிகள் ஒற்றுமையுடன் வாழ, முத்கலரை வணங்குவோம்.* சாதனைகள் நடைபெறுவது, ஆழ்ந்த மவுனத்தின் போது தான்.எமர்சன்