நானா போனதும் தானா வந்ததும்! (19)
அந்த காலத்தில், சைக்கிளின் பின் சீட்டில் உட்கார்ந்து செல்வது, எனக்கு பிரயாசையான செயலாக இருந்தது.ஓட்டுபவரைச் சாய்த்து, கீழே தள்ளி, தானும் விழுந்து, சைக்கிளும் விழுந்து, 'முப்பெரு விழு விழா'வை நடத்தி விடுவார் பின்சீட் ஆசாமி, பாலன்ஸ் செய்து உட்காரவில்லையென்றால்.சிலர் ஒருக்களித்து உட்காருவர்; ஸ்டைல் மாதிரி இருக்கும். உண்மையில் விபத்து ஏற்பட்டால், சட்டென்று இறங்கி தப்பித்துக் கொள்ளலாம் என்ற ஜாக்கிரதை உணர்வே இதற்குக் காரணம்.இன்னொரு மூட நம்பிக்கையும் உண்டு. ஒருக்களித்து உட்கார்ந்தால், ஓட்டுபவருக்கு கனம் கொஞ்சம் குறைவாக தெரியும் என்பதாக, ஒரு தவறான கருத்து. உண்மையில், ஒருக்களித்து உட்காருவதற்கு அனுபவம் வேண்டும். தொங்கப் போட்ட கால்களை, இஷ்டப்படி ஆட்டினால், பாலன்ஸ் கெட்டு, ஓட்டுகிறவர் மண்ணைக் கவ்வி விடுவார்.சென்னைக்கு நான் குடிபெயர்ந்த நோக்கம், பத்திரிகாசிரியர்கள் (இதழாசிரியர்கள்) வீடுகளுக்கெல்லாம் சென்று, அவர்களுக்கு, ஒரு கும்பிடு போட்டு, என் மரியாதையைத் தெரிவித்து, கையோடு ஒரு கதையையோ, கட்டுரையையோ செருகிவிட்டு வருவதே.என் வயசு இருபதே தவிர, பட்டணத்து வெலாவரி தெரியாத பட்டிக்காட்டுப் பிரகிருதியாக இருந்ததால், எந்த பஸ்சை பிடிப்பது, பட்டணத்து இண்டு இடுக்களில், ஆசிரியர்கள் எங்கெல்லாம் இருப்பர், அவர்கள் எப்படி நிற்பர், உட்காருவர், எழுதுவர், எப்படி பேசுவர் என்பதெல்லாம் ஒன்றுமே தெரியாது. அது ஒரு மகிழ்ச்சியான, கவலை நிரம்பிய, புதிராக இருந்தது.நான் அப்போது, உத்தியோக பருவத்தில் இருந்தேன். (வேலை தேடும் பருவம்.) இஷ்டத்துக்கு செலவு செய்ய முடியாது; ஊர் சுற்ற முடியாது.அப்படியே சுற்றத் தயாராக இருந்தாலும், பத்திரிகை ஆசிரியர்கள், இன்னின்ன இடத்திலிருப்பர் என்ற விவரம் தெரியாதே. குறிப்பிட்ட பத்திரிகை ஆபீஸ் போய் விசாரித்தால், ஆசிரியர், இந்த அருமை தம்பியைப் பார்த்து, மிரளுவாரே தவிர, மகிழ்ச்சி ஏற்படாது.'சில மாதம் முன் வெளியான கதைக்கு, சன்மானம் கேட்டு, தம்பி நேரில் வந்திருக்கிறான் போலிருக்கிறது...' என்று எண்ணி, 'ஆசிரியரா... அவர் இப்போவெல்லாம் வர மாட்டார். நீ வேணுமானால் அடுத்த வாரம் வந்து பாரேன் தம்பி...' என, தட்டி (முதுகில் அன்பாகத் தட்டி) கழித்து விடுவார்.பஸ்சுக்கு காசு கொடுத்துக் கட்டுப்படி ஆகாத நிலையில், அடித்ததய்யா பெரிய அதிர்ஷ்டம்.என் காரியர் நிறைவேற, ஒரு சைக்கிள் காரியர் கிடைத்தது.நான், நண்பர்கள் சிலருடன், நாலில் ஒரு பங்கு வாடகையான, ஐந்து ரூபாய் கொடுத்து, ஓர் அறையில் ஒண்டிக் கொண்டிருந்தேன்.வீட்டின் பின் போர்ஷனில், ஒரு விகடக் கச்சேரிக்காரர் ஒண்டிக் கொண்டிருந்தார். பின் போர்ஷினில் குடியிருந்த வீட்டுக்காரர், அல்வா மனம் படைத்தவர். (ரொம்ப இளகிய மனம் படைத்தவர்; இனிமையானவர்.)விகடக் கச்சேரிக்காரரை, தன் வீட்டில் வைத்து, சாப்பாடு போட்டு வந்தார். என்றாவது ஒரு நாள், இந்த கஜகர்ணம், உலகம் மெச்சும் கலைஞனாக மலர்வார் என்ற (தப்பான) எண்ணத்தில்.எனக்கு அவர் அறிமுகமானார். கற்றோரை கற்றாரே காமுறுவர் மாதிரி, வேலையவற்றவரை வேலையற்றாரே விரும்புவர். அவர் ரொம்ப சுவாரசியமான, ஆனால், அதிர்ஷ்டம் மோந்து பார்க்காத கலைஞர்.நாய், பூனை, தவளை, ரயில் ஊதல், இது மாதிரி சாதா விகடங்கள் மட்டுமில்லாமல், புதுமையாக ஓரங்க நாடகம் போன்றவற்றையே, ஒண்டி ஆளாக நடத்திக் காட்டுவார்.நாடகத்தின் எல்லாப் பாத்திரங்களுமாக, அவர் ஒருத்தரே பேசி நடித்து, அமர்க்களப் படுத்துவார். பாவம் அதிர்ஷ்டம் தான் கிடையாது.அவர் ஒரு, 'லொடலொட' சைக்கிள் வைத்திருந்தார். அது இரும்பாலானது என்பதை, சொல்ல வேண்டியதில்லை. ஆனால், காரியர் மட்டும் தகரத்தால் செய்து, பிற்சேர்க்கையாக இணைக்கப் பட்டது.மேற்படி சைக்கிள் காரியரில், கஜகர்ணம் உட்கார மாட்டார்; அவர் தான், ஓட்டுனர் சீட்டில், சவுகரியமாக அமர்ந்து கொள்வாரே... ஆகவே, காரியரில் உட்கார்ந்து வரும் ஆசாமி பற்றி, அவர் கவலைப்பட மாட்டார். நான் தான் பின்னால் உட்கார வேண்டிய துரதிர்ஷ்டசாலி.நான் பாதுகாப்பு கருதி, காலை ஒரே பக்கமாகப் போட்டு உட்காராமல், குதிரை சவாரி போல், காரியரின் இரு பக்கமும் தொங்க விட்டு அமர்வேன்.கஜகர்ணம் சைக்கிளை ஓட்டிக் கொண்டே, அவ்வப்போது, 'யோவ் ஜராசு... காலை சக்கரத்திலே விட்டுடாதீர். ஜாக்கிரதை...' என எச்சரித்தவாறு சைக்கிளை ஓட்டுவார்.என்னை சைக்கிளில் வைத்து, சென்னை நகரில் பல பகுதிகளுக்கு, சலிக்காமல் மிதித்து சென்ற அந்த நகைச்சுவை நண்பரை, எப்படி மறக்க முடியும்?'மயிலாப்பூரில், ஒரு தமிழ் அறிஞர் இருக்கிறார். அவர் பிரபல மாதப் பத்திரிகை ஒன்றில் வேலை செய்கிறார். அவரிடம் உங்களை அறிமுகம் செய்து வைக்கிறேன்...' என்று அழைத்துச் சென்றார்.கலைமகள் பத்திரிகையில், அறிவியல் கட்டுரைகள் எழுதி வந்த, ச.கு.கணபதி ஐயர் தான், அந்த அறிஞர்.'ஓர் அறிஞரை சந்திக்கப் போகிறோம். அதுவும் பத்திரிகை ஆசிரியர்...' என்று, எனக்குப் பெரும் பூரிப்பு.மயிலாப்பூரில் எளிமையான அமைதியான வீடு, ச.கு.க., ஐயரது இல்லம். சிறு ஹாலில், ஓரிரு நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. உயரமான புத்தக அலமாரி, தரையில் நின்றிருந்தது. மேல் படித் தட்டுகள், கண்ணாடி அணிந்திருந்தன. கீழே இரு வரிசையில், எளிதில் எடுக்கக் கூடிய விதத்தில் நிறைய பத்திரிகைகளும், புத்தகங்களும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.அவ்வளவு புத்தகங்களையும், பத்திரிகைகளையும் பார்த்த எனக்கு, ஒரே த்ரில்.அலமாரி அருகே தரையில், சப்பளங்கால் போட்டு உட்கார்ந்து விட்டேன். அலமாரியிலிருந்து பலவகைப் பத்திரிகைகளையும் உருவி, புரட்டி புரட்டி பார்த்து, மெய்மறந்து போனேன்.கூட வந்த கஜர்கணம், (காது கொஞ்சம் அகலமாக இருந்ததால், வேடிக்கையாக கஜகர்ணம் என்று, ஒரு புனைப் பெயரைத் தானே சூட்டிக் கொண்டிருந்தார்.) 'சார்... சார்...' என்று குரல் கொடுத்தார்.இரண்டு நிமிடத்தில், வெள்ளை நிற கதர் ஜிப்பாவும், நாலு முழ வேட்டியும் அணிந்த, எளிமையான மனிதர், வெளியில் வந்தார். நான் பத்திரிகைகள் பார்ப்பதிலேயே ஆழ்ந்திருந்தேன்.கஜகர்ணம் பரபரப்பாக, 'யோவ் ஜராசு... மாமா... மாமா...' என்றார்.பரபரப்புடன் போட்டது போட்டபடி விட்டுவிட்டு, அவசரமாக எழுந்து வினயமாக, 'நமஸ்காரம்...' என்றேன் நான்.பதில் ஏதும் சொல்லாமல், ஒரு புன்னகையுடன் என்னை பார்த்தார் அறிஞர்.'புத்தகம்னா உனக்கு ஆசையா?'மவுனமாக தலையை அசைத்தேன்.அவர் சொன்ன அடுத்த வாக்கியம்...'யார் வீட்டுக்குப் போனாலும், அவர் வீட்டுப் பொருள் எதையும் எடுப் பதற்கு முன், அவர்களுடைய அனுமதி கேட்க வேண்டும்...'என் மண்டையில், ஓங்கி குட்டினாற் போல் இருந்தது.நான் செய்த தவறை, அவர் சுட்டிக் காட்டியது ஏன் என்பதையும் நான் கேட் காமலேயே, அடுத்தாற்போல் கூறினார்...'எனக்குப் பரவாயில்லை... ஆனால், நீ வேறு இடத்திற்குப் போகும் போது, இந்த புத்திமதி உனக்கு உபயோகமாக இருக்கும்...' என்றார்.அறிஞர்கள் எது சொன்னாலும், அதில் ஓர் பயனுள்ள கருத்து இருக்கத்தான் öŒ#கிறது.அதன் பின், யார் வீட்டுக்குப் போனாலும், அங்குள்ள சோபாவில் உட்காருவதற்கு கூட, 'நான் இங்கே உட்காரலாமா?' என்று, கேட்டு விட்டுத்தான் உட்காருகிறேன். 'ரொம்ப மரியாதை தெரிந்தவன்...' என்று, என்னை யாராவது பாராட்ட நினைத்தால், மறைந்த அறிஞர், ச.கு.க.,க்கே, அந்தப் பாராட்டு உரியதாகும்! — தொடரும்.பாக்கியம் ராமசாமி