நான் ஏன் பிறந்தேன் (15)
எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு கட்டுரை தொடர் ஜன., 17, 1917 - 2017வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்று பேசுவார், அபிராம செட்டியார். யாருக்கும் அஞ்சாமல் தான் நினைத்ததை பட்டென்று பேசிவிடக் கூடியவர். அதனாலேயே அவரிடம் யாரும் நெருங்கி பழக மாட்டார்கள்; அதற்காக அவரும் கவலைப்பட மாட்டார்.இதற்கு நேர்மாறானவர், நஞ்சப்ப செட்டியார். அடக்கத்தோடு இருப்பார்; யாராவது பேசினால் தான் பதில் பேசுவார். அவருடைய தோற்றமும் மரியாதையானதாக இருக்கும். உருவத்தில் மட்டுமல்ல, உள்ளம், நடத்தை மற்றும் பேச்சிலும் உயர்ந்தவராக இருந்தார், நஞ்சப்ப செட்டியார்.மருதாசலஞ் செட்டியாரோ, கண்டிக்க வேண்டியவர்களை கூட, பண்போடு கண்டித்து, திருத்தவோ, உதவவோ செய்வார். அரவணைத்து, ஆறுதல் கூறுவார்; உடன் பிறந்த சகோதரனை போல செயல்படும் குணம் கொண்டவர்.இத்தகைய சிறப்பு பண்புகளை பெற்றவர் களுடன், நாடக கம்பெனியை தவிர, வேறு ஒன்றும் தெரியாத, என் போன்றோர், சதி லீலாவதி படத்தின் மூலம் ஒருங்கிணைந்தோம். எனக்கு மட்டுமல்ல, என்னைப் போன்ற பலருக்கும், இதுவே, முதல் படம்.'நாளை, நடிகர் ஒருவர் வரவிருக்கிறார்... அவர் வந்து விட்டால், அவ்வளவு தான்... இவ்வளவு பெரிய வீடும் கலகலத்து போயிடும்; ஒருத்தர் கூட, சோம்பேறித்தனமாக உட்காந்திருக்க முடியாது...' என்று கூறினர். அப்படி கூறியவர்களில் எம்.வி.மணியும் ஒருவர்!மறுநாள், திடீரென்று ஒரே சிரிப்பு சத்தம்; அருகில் சென்றேன். எம்.வி.மணி மற்றும் அங்கிருந்தவர்களிடம் பேசியபடி இருந்தார் கலைவாணர். கணேசன் என்ற நண்பரிடம், 'எல்லாரும் எதுக்கு சிரிச்சீங்க?' என்று கேட்டேன்.'என்.எஸ்.கே., வந்ததும், 'ஏதாவது படப்பிடிப்பு நடந்ததா'ன்னு கேட்டார். 'இன்னும் ஆரம்பிக்கவே இல்ல'ன்ன மத்தவங்க பதில் சொன்னதும், 'ஓஹோ... அப்படின்னா, நீங்க எல்லாம் அன்ன சம்ஹாரமா'ன்னு கேட்டார். அதனால் தான் எல்லாரும் சிரிச்சோம்....' என்றார்.வேலை எதுவும் செய்யாமல் சாப்பிடு வோரை, 'சாப்பாட்டை கொல்பவர்கள்' என்று சொன்னால், வேலையின்றி இருப்பவர்கள், சிரிக்காமல் என்ன செய்வர்!'வாத்தியாரய்யா எங்கே?' என்று கேட்டார், என்.எஸ்.கே., எம்.கந்தசாமி முதலியாரை, வாத்தியார் என்று தான் எல்லாரும் அழைப்பர்.'அரக்கோணத்தில் இருக்கார்...' என்றார், ஒருவர்.'ஏன்... அவர் முழுக்கோணத்திலேயே இருக்கலாமே...' என்று என்.எஸ்.கே., கூறியதும், ஒரே சிரிப்பு. எனக்கு அவர் கூறியதன் அர்த்தம் புரியாததால், வாய் விட்டு சிரிக்கவில்லை; ஆனாலும், என் உதடுகள் சிறிது விரிந்தன.'ராதா அண்ணன் எங்கே?' என்று கேட்டார்.எம்.கே.ராதாவை, அண்ணன் என்று தான் குறிப்பிடுவார், கலைவாணர்.'அவரும் அங்கே நாடகத்தில் நடிக்கிறார்...' என்று கூறியதும், 'ஓஹோ... சினிமாவுல நடிக்கிறதுக்காக, நாடகத்தில நடிச்சு, ஒத்திகை பாக்கிறாரா... பரவாயில்லயே... ஒத்திகைக்கு ஒத்திகையுமாச்சு; பணத்துக்கு பணமுமாச்சு; பலே ஐடியா!'இப்படி பேசியவாறு, ஒவ்வொருவரிடமும் நலம் விசாரித்தவர், என்னை பற்றியும் விசாரித்தார்.நான், பாய்ஸ் கம்பெனியிலிருந்து வந்தவன் என்பதை அறிந்ததும், 'என்னப்பா... உனக்கு, சின்ன வயசிலேயே கொழா (குழாய்) ஊதிப் போச்சா...' என்றாரே பார்க்கலாம்.முன்பின் அறியாத என்னை, அவர் கேலி செய்ததை என்னால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. 'கொழா ஊதி விட்டது...' என்றால், சின்ன வயதில் உள்ள குரல் மாறி, மில்லில் சங்கு ஊதுவரே, அதுபோல, என் குரல் ஒலி மாறி விட்டது என்று பொருள்.அதற்கும் எல்லாரும் சிரித்தனர். எனக்கோ எரிச்சலாக இருந்தது.தூரத்தில், யாரையும் கவனியாது, புத்தகத்தில் ஆழ்ந்திருந்த என் அண்ணனை பார்த்த என்.எஸ்.கே., 'அங்கேயும், ஒரு அன்ன சம்ஹாரமா...' என்று கூறியபடி, அவர் அருகில் சென்று, புத்தகத்தை பறித்தார்.அண்ணன் ஏதும் பேசாது, அவரையே பார்ப்பதை பார்த்து, 'மன்னிச்சுடுங்கோ... தெரியாம உபத்திரவம் செய்துட்டேன்; எனக்கு உதவி செய்ய உங்கள போல ஒருத்தர் கிடைப்பாங்கன்னு நான் நினைக்கல...'மெட்ராஸ் சரக்கு உயர்ந்ததுன்னு கேள்விப் பட்டிருக்கிறேன்; உங்ககிட்ட இருக்கிறது சண்முகம் பட்டணம் பொடியா இல்லே வேறு ஏதாவது ஸ்பெஷல் பொடி வச்சிருக்கீங்களா?' என்று கேட்டார்.'திருதிரு'வென விழித்தார், அண்ணன். சில மாதங்களாகத் தான் அவருக்கு மூக்குபொடி போடும் பழக்கம் ஏற்பட்டிருந்தது. அதை மிக ரகசியமாகவும் வைத்திருந்தார்.இப்போது தான் வந்த இவர், அதை எப்படி தெரிந்து கொண்டார் என்பதே, அண்ணனுக்கு ஏற்பட்ட திகைப்பு!என் அண்ணனின் அருகில் உட்கார்ந்த என்.எஸ்.கே., அவரின் மூக்கை துடைக்கச் சொன்னதுடன், பலவந்த மாக அவரிடமிருந்து பொடி மட்டையை எடுத்து, தானும் போட்டு, மட்டையை தானே வைத்து கொள்வதாகவும், தேவையானால், கூச்சப் படாமல் தன்னிடம் கேட்டு வாங்கிக் கொள்ளலாமென்றும் சொல்லி சிரித்தவாறு, குளிப்பதற்கு போனார்.இப்படி, இவர்களிருவரும் முக்குப் பொடி சினேகிதர்களாக அறிமுகமானாலும், இரு வருக்கும் இடையில் ஏற்பட்ட நட்பு, ஈடுபாடு வியப்பாகவே இருந்தது. ஏனெனில், அவர்கள் இருவரும் எப்போது பார்த்தாலும், எங்காவது ஒரு இடத்தில் நின்று பேசியபடியே இருப்பர்.என் அண்ணனிடம், ஒரு குணமுண்டு. யாரிடமும் வலிய போய் பேச மாட்டார்; மற்றவர்களிடம், யாரை பற்றியும் தன் கருத்தை தேவையில்லாமல் வெளியிட மாட்டார். அவர், பிறரை பற்றி என்ன கருதுகிறார் என்பதை, எவரும் அவ்வளவு எளிதில் தெரிந்து கொள்ள முடியாது.'நமக்கெதற்கு பிறரை பற்றிய பேச்சு... அவரவர்களுக்கு எத்தனையோ பிரச்னைகள் இருக்கும்; அவற்றை பற்றி முடிவு கூற, நாம் யார்...' என்று கருதி, ஒதுங்கியிருப்பவர் என் அண்ணன்.அத்தகைய குணாதியசம் கொண்ட என் அண்ணனை, நண்பனாக்கி, சகோதரனாக்கிக் கொண்டார் என்றால், என்.எஸ்.கே.,யின் திறமை என்னவென்பது!கலைவாணருக்கு அப்படத்தில், இரண்டொரு காட்சிகளோடு முடிவடையும் கதாபாத்திரம். அதில் நடித்து, புகழ் பெற முடியாது என்பதால் அதுபற்றி என் அண்ணனிடம் ஆலோசனை கேட்க, அவரின் யோசனைப்படி, இருவரும் அரக்கோணத்திற்கு போய், வாத்தியாரை பார்த்து பேசுவதென்று முடிவெடுத்தனர்.தனக்கு பொருத்தமான வேடத்தை உருவாக்கி கொள்வது என்ற முடிவோடு, என்.எஸ்.கே.,யும், என் வேடத்தை பற்றிய பிரச்னையும் இருந்ததால், நாங்களும் அரக்கோணத்திற்கு புறப்பட்டோம்.— தொடரும்.நன்றி: கண்ணதாசன் பதிப்பகம், சென்னை.