இறக்கை லிங்கம்!
சிவலிங்கத்திற்கு இறக்கை இருக்கிறது என்றால் அது ஆச்சரியம் தானே!கோவை - சத்தியமங்கலம் சாலையில், 32 கி.மீ., தூரத்திலுள்ளது, அன்னூர்; ஒரு காலத்தில், இப்பகுதி, வள்ளிக்கிழங்கு செடிகள் நிறைந்த வனமாக இருந்தது. அன்னி என்ற வேடன் இங்கு வேட்டையாட வருவான்.உயிர்களைக் கொல்வது பாவம் என்று தெரிந்தாலும், வேறெந்த வேலையும் தெரியாத காரணத்தால், வேட்டையாடி வந்தான். ஒருநாள் விலங்குகள் எதுவும் சிக்கவில்லை; பசி தாங்காமல் வள்ளிக்கிழங்கை வெட்டி சாப்பிட்டான்.கிழங்கை வெட்டிய பின்பும், அது, அளவில் குறையாமல் அப்படியே இருந்தது. ஆச்சரியத்துடன் மேலும் கிழங்கை வெட்ட, கிழங்கின் நீளம் குறையவே இல்லை. கிழங்கின் முழு நீளத்தையும் அறியும் ஆவலில், மிக ஆழமாக வெட்டவே கிழங்கில் இருந்து ரத்தம் வெளிப்பட, அதிர்ச்சியடைந்தான். அப்போது 'இனி, உயிர்களைக் கொல்லும் கொடிய பாவத்தை செய்யாதே... இதுவரை நீ செய்த பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விட்டது' என்று அசரீரி ஒலித்தது.மன்னனிடம் சென்று நடந்ததை தெரிவித்தான், வேடன். உடனே, ரத்தம் வந்த இடத்தில் தோண்டச் சொன்னன் மன்னன். மண்ணிற்கு அடியில் ஒரு லிங்கம் இருந்தது; ஆனால் அதை எடுக்க முடியவில்லை.அன்றிரவு மன்னின் கனவில் தோன்றிய சிவன், 'நான் அவ்விடத்திலேயே குடியிருக்க விரும்புகிறேன். அதனால், வேறு இடத்திற்கு கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டாம்...' எனக் கூறினார். எனவே லிங்கம் இருந்த இடத்தில் கோவில் கட்டினான், மன்னன்.அன்னி எனும் வேடனுக்கு அருள்புரிந்ததால், அன்னீஸ்வரர் என்றும், பாவச்செயலை செய்த வேடனை மன்னித்ததால், மன்னீ்ஸ்வரர் என்றும் பெயர் பெற்றார் சிவபெருமான். மேலும் இத்தலம் அன்னியூர் எனப்பட்டு, அன்னூர் என, திரிந்து விட்டது. கல்வெட்டுகளில் இவ்வூர் 'மேற்றலைத் தஞ்சாவூர்' என குறிப்பிடப்பட்டுள்ளது.பெங்குவின் பறவையைப் போன்று, லிங்கத்தின் இருபுறமும் இறக்கை வடிவம் உள்ளது. கருடன் தன் இறக்கைகளை மடக்கி அமர்ந்திருப்பது போன்றும் தெரியும். எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், கீழே இருக்கும் மிகச்சிறிய பொருளையும் கவனிக்கக்கூடியது, கருடன். அதுபோல், யாருக்கும் தெரியாது என்றெண்ணி நாம் செய்யும் தவறுகளையும், பாவங்களையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார் சிவன் என்பதை, இந்த வடிவம் நமக்கு உணர்த்துகிறது.அத்துடன், பாவங்களை உணர்ந்து திருந்தி, 'இனி பாவம் செய்ய மாட்டேன்...' என இவரது சன்னதியில் உறுதி எடுத்தால், இதுவரை செய்த பாவங்களை மன்னித்து விடுவார், சிவன்.பொதுவாக, சிவன் கோவில்களில், லிங்கம் கிழக்கு நோக்கியே இருக்கும்; ஆனால் இங்கு மேற்கு நோக்கி உள்ளது.அம்பாள் அருந்தவச் செல்வி என்ற பெயரில் அருளுகிறாள்; இவளுக்கு வௌ்ளிக்கிழமைகளில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. திருமணத்தடை நீங்க, இந்நீளில் அம்பாளை வழிபடுவர். தலவிருட்சத்தின் கீழுள்ள சர்ப்பராஜர் சன்னிதியில், ஏழு நாகங்கள் உள்ளன. ராகு - கேது எனப்படும் நாகதோஷம், மாங்கல்ய தோஷம் நீங்க இங்கு வேண்டிக் கொள்வர்!- தி. செல்லப்பா