கொய்யா வளர்ப்பில் சவால் திட்டமிட்டால் சாதனை
நம் ஊரில் எளிதில் கிடைக்க கூடிய பழங்களில் கொய்யா பழமும் ஒன்றாக இருக்கிறது. ஆனால், கொய்யா சாகுபடி செய்வது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. முறையாக உரமிட்டு, தண்ணீர் ஊற்றி கவனமாக வளர்த்தால் தான் சத்துள்ள கொய்யாக்கள் கிடைக்கும்.கொய்யாவில் மெக்னீசியம் மற்றும் போரான் சத்து குறைபாடு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. மெக்னீசியம் குறைபாடு வந்துவிட்டால் முதிர்ந்த இலைகளில் நரம்பிடை சோகை முதலில் தோன்றும். பின், இலை நரம்புகளுக்கு இடையில் உள்ள திசுக்கள் மஞ்சள், சிவப்பு நிறமாக மாறிவிடும். ஆனால், இலை நரம்புகள் பச்சையாகவே இருக்கும். தீவிர நிலையில் அறிகுறிகள் இளம் இலைகள் மேல் தோன்றும். இதனால், இலைகள் முதிரா நிலையில் உதிர்ந்துவிடும். அறிகுறிகள் அதிகமாக அமில நிலங்களில் தோன்றும். இந்த நிலங்கள் அதிக அளவிலான சாம்பல் சத்து அல்லது சுண்ணாம்பு சத்தை ஏற்கும் தன்மையில் இருக்கும். இந்த சத்து குறைபாட்டு பிரச்னையை நிவர்த்தி செய்ய 20 கிராம் மெக்னீசிய சல்பேட்டை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் கொய்யா மரங்களில் தெளிக்கலாம்.போரான் சத்து குறைபாடு வந்துவிட்டால் இளம் இலைகளில் வளரும் நுனிப்பகுதிகளில் அறிகுறிகள் தோன்றும். இலைகள் தடித்து உடைந்து விடும் நிலைக்கு மாறிவிடும். பழங்களில் கருப்புத் திட்டுக்கள் ஆங்காங்கே தோன்றும், கிளைகளில் வெடிப்பு ஏற்படுவதுடன் கிளைகள் காய்ந்தும் போகும். இதை நிவர்த்தி செய்ய 5 கிராம் போராக்சை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் இலைகள் மீது தெளித்து கட்டுப்படுத்தலாம்.- இரா.விமலா, தலைவர்பருத்தி ஆராய்ச்சி மையம்ஸ்ரீவில்லிபுத்துார்.