பப்பாளியில் ரூ.57 லட்சம் சாதிக்கும் பெண் விவசாயி
சிவகங்கை, கன்னிமார்பட்டியை சேர்ந்தவர் மந்தையன். இவரது மனைவி மூக்கம்மாள், 40. இவர்களுக்கு, 2 மகன்கள். கணவர் சவுதி அரேபியாவில் உள்ளார். மகன்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில், இவரே தனக்கு சொந்தமான, 2 ஏக்கரில்,கிணற்று பாசனம் மூலம், விவசாயம் செய்கிறார். தற்போது பப்பாளி விவசாயம், லாபமாக உள்ளதால் பப்பாளி நடவு செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வாங்கி வரப்பட்ட, 'ரெட்லேடி', 'சிந்தாள்' வகை பப்பாளி கன்றுகள் நடப்பட்டுள்ளது. இங்கு விளையும், பப்பாளி கேரளாவிற்கு பழச்சாறு, சோப்பு, சாம்பு, வாசனை திரவியங்கள் தயாரிக்கவும், மருந்து பொருட்கள் தயாரிக்க வெளிநாடுகளுக்கும் செல்கிறது.பெண் விவசாயி மூக்கம்மாள் கூறியதாவது: பப்பாளி கன்று நடவு செய்து, மருந்து, தண்ணீர் பாய்ச்சுதல், பராமரித்தல் உள்ளிட்டவைகளுக்கு, ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் செலவாகிறது. எட்டு மாத வளர்ச்சிக்கு பின், பப்பாளி காய்களை அறுவடை செய்யலாம். வாரத்திற்கு ஒரு முறை, ஏக்கருக்கு 6 டன் (6,000 கிலோ) வீதம் பப்பாளி அறுவடை செய்யலாம். ஒரு பப்பாளி சுமார் 2 முதல் 2.5 கிலோ வரை இருக்கும். ஒரு கிலோ பப்பாளியை, கேரளா வியாபாரிகள் ரூ.20க்கு எங்களிடமிருந்து வாங்குகின்றனர். ஒரு ஏக்கரில் கிடைக்கும் பப்பாளி மூலம், வாரம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் லாபம் கிடைக்கும். மாதம் ரூ.4.80 லட்சமும், ஆண்டிற்கு ரூ.57 லட்சம் வரை லாபம் கிடைக்கும். நல்ல மழை, குளிர்ச்சியான சூழ்நிலை இருந்தால், இன்னும் விளைச்சல் அதிகரிக்கும். பலத்த காற்று அடித்தால் மட்டுமே, பப்பாளி கன்றுக்கு பாதிப்பு ஏற்படும். பப்பாளிக்கு, காற்று தான் முதல் எதிரி. கடும் வெயிலும், பூக்கள் வரவிடாது. இருப்பினும், கிணற்று பாசனம் மூலம், பப்பாளி நடவு செய்து வருவாய் ஈட்டி வருகிறேன், என்றார்.ஆலோசனை பெற: 90475 08375.-என்.வெங்கடேசன், சிவகங்கை