உள்ளூர் செய்திகள்

தனி ஒரு பெண் மணி - இயற்கையின் கண்மணி

இயற்கை விவசாயத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் வறட்சியிலும், ஈரம் வற்றாத பூமியாக மாற்றி மகசூலில் சாதித்து வருகிறார், சிவகங்கை மாவட்டம் கருக்கன்பட்டி யசோதா,65. தனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தையும், 600 தென்னை மரங்கள் அடர்ந்த தோப்பையும் ரசாயனம் இல்லா இயற்கை பூமியாக மாற்றியுள்ளார் இந்த சாதனை பெண்மணி.இயற்கை விழிப்புணர்வுகடந்த 22 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் விவசாயத்தை துவக்கினார். நெல், கரும்பு, பருத்தி, கடலை பயிர்களை சாகுபடி செய்தார். ''இயற்கை உரங்கள் தான் தன் நிலத்திற்கு இடுவேன்,'' என்பது யசோதாவின் கொள்கை. இதற்காக மண்புழு உரம் தயாரிக்க கற்று கொண்டார். தென்னை மற்றும் பயிர்களுக்கு தேவையான மண் புழு உரத்தை தனது நிலத்திலேயே தயாரித்து விவசாயத்தில் பயன்படுத்தி வருகிறார். ''வறட்சியிலும் நிலம் ஈரப்பதமாக இருக்க வேண்டுமா, எந்த பயிர் விளைவித்தாலும் அதிக மகசூல் அள்ள வேண்டுமா. எப்படியென்றால் நீங்கள் இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும்,'' என விவசாயிகளிடையே விழிப்புணர்வும் செய்து வருகிறார். மண் புழு உரம் தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கிறார். தரமான மண் புழு உரம் தயாரித்து விற்பனையும் செய்கிறார்.வெயிலால் பாதிக்காதுஅவர் கூறியதாவது: 2004 ம் ஆண்டு முதல் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறேன். 2006ம் ஆண்டு முதல் மண்புழு இயற்கை உரம் தயாரிக்கிறேன். எனது நிலத்தில் இதுவரை ரசாயன உரங்கள் பயன்படுத்தியது இல்லை. 70 சதவிகிதம் சாணம், 15 சதவிகிதம் தென்னை நார் துாள், 15 சதவிகிதம் கரும்பு கழிவு கலப்பில் மண் புழுக்கள் மூலம் 40 நாட்களில் டன் கணக்கான உரங்கள் தயாரிக்கலாம். மண் புழு உரத்தால் அதிக மகசூல் கிடைக்கும். வறட்சியிலும் கூட நிலங்களில் ஈரப்பதம் நீடிக்கும். தென்னைக்கும் மண் புழு உரம் தான் பெருமளவு பயன்படுத்துகிறேன். ஊடுபயிராக கத்தரி, தக்காளி விளைவிக்கிறேன். மழை காலத்தில் உரங்களுக்கு அதிக கிராக்கி இருக்கும். ஆர்டர்கள் குவியும். தற்போது வெயில் துவங்கிவிட்டதால் உர விற்பனை சுமார் தான். மண் புழு உரங்கள் வெயில் காலத்தில் பாதிக்காது. தென்னை மகசூலில் தற்போது சொட்டு நீர் பாசனம் பின்பற்றுகிறேன். ஆண்டிற்கு நல்ல வருவாய் கிடைக்கிறது. பாரம்பரிய விவசாயத்தை மீட்கவும், நிலத்தை காக்கவும் எந்த சூழலிலும் இயற்கை உரங்களை பயன்படுத்த விவசாயிகள் முன்வர வேண்டும். என்கிறார். இயற்கை விவசாயம் குறித்து பேச 95859 07119 ல் பேசலாம்.- கொ.காளீஸ்வரன், மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !