புதுமைகள் செய்யும் புதுச்சேரி விவசாயி
கலை, அறிவியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் பல அறிஞர்களுக்கு இந்திய அர சால் வழங்கப்படும் பத்மஸ்ரீ விருதை, ஒரு விவசாயியும் வாங்க முடியும் என நிருபித்து காண்பித்தவர் புதுச்சேரி விவசாயி வெங்கடபதி.புதுச்சேரியை அடுத்த 6 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வெங்கடபதி. கடந்த 1970 ஆண்டுகளில் 10 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து நஷ்டம் ஏற்பட்டதால், வாழ்க் கையை முடித்து கொள்ளலாம் என தற்கொலை செய்ய முடிவு செய்தார். மனைவி அறிவுரையால் தற்கொலை முடிவைக் கைவிட்ட வெங்கடபதி, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தோட்டக்கலை பயிற்சி மையத்திற்குச் சென்றார். அங்குப் பணியாற்றிய தனது முன்னாள் தோழர் சம்பந்தமூர்த்தியை சந்தித்து, விவசாயத்தில் தோல்வி அடைந்ததால் வாழ்கைக்கு வழிகாட்டுமாறு கோரினார்.வெங்கடபதியின் கையில், 10 கனகாம்பரம் செடிகளை கொடுத்து அனுப்பினார் சம்பந்தமூர்த்தி. வழக்கமாக கனகாம்பரம் வெளிர் ஆரஞ்சு கலரில் இருக்கும். ஆனால், வெங்கடபதி வளர்த்த கனகாம்பரம் வித்தியாசமாக இருந்தது. வெங்கடபதி வளர்த்த கனகாம்பர பூவிற்கு மார்கெட்டில் கடும் கிராக்கி ஏற்பட்டது. இதனால், பெரிய அளவில் உற்பத்தி செய்ய முடிவு செய்து, வெங்கடபதி கனகாம்பர செடிகளை வளர்க்க துவங்கினார்.ஒரு லட்சம் செடி உற்பத்தி: அப்போது புதுச்சேரியில் அரசு நடத்திய மலர் கண்காட்சியில், தனது 10 கனகாம்பர செடிகள் தலா 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதைக் கண்ட வெங்கடபதி குறைந்த விலையில் 5 ரூபாய்க்கு கனகாம்பரம் செடிகளைத் தருவதாக தெரிவித்தார். வேளாண் துறையும் அடுத்த நாளே 1 லட்சம் கனகாம்பரம் செடிகளை உற்பத்தி செய்ய 5 லட்சம் ரூபாய் கொடுத்தது. திடீரென இவ்வளவு செடிகளை உற்பத்தி செய்ய முடியாததால் மீண்டும் பெரியகுளம் புறப்பட்டார் வெங்கடபதி. அங்கு ஒரு செடியில் 3 கிளையில் பதிகம் செய்தால், மூன்று செடிகளை உற்பத்தி செய்ய முடியும். ஆனால் செடியின் ஒவ்வொரு கணுவிலும் பதிகம் செய்யும் முறை அறிந்து, ஒரு லட்சம் செடிகளைத் தயார் செய்து கொடுத்தார்.வண்ண வண்ண கனகாம்பரம்: ஒரே மாதிரியான நிறத்தில் கனகாம்பரம் ஏன் பூக்க வேண்டும் என்ற எண்ணம் உதித்தது வெங்கடபதிக்கு. மீண்டும் பெரியகுளத்திற்குப் புறப்பட்டார். அங்கு, பல நிறங்களில் கனகாம்பரம் செடிகளை உற்பத்தி செய்வது எப்படி என அறிந்து கொண்டார்.கனகாம்பரம் செடிகளின் மூலக்கூறுகளில் மாற்றம் செய்ய வேண்டும், அதிற்கு காமா கதிர்வீச்சை பயன்படுத்த வேண்டும் என அறிந்தார்.காமா கதிர்களை வழங்க கல்பாக்கம் அணு உலை உதவியது.முதலில் காமாக்கதிர்களைப் பாய்ச்சிய போது, செடிகள் அனைத்தும் அழிந்துவிட்டது. பின்பு, ஒவ்வொரு செடிக்கும், ஒவ்வொரு அளவில் காமாக்கதிர்களை பாய்ச்சும் போது, ஒரு செடி மட்டும் பல வண்ண மலர்களை பூக்க ஆரம்பித்தது.அந்த புதிய கனகாம்பரம் செடியில் இருந்து, கலப்பினம் செய்து சிவப்பு, கரும் சிவப்பு, ஆரஞ்சு, நீலம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பல வண்ண நிற இனங்களை கண்டறிந்தார். இவரது கனகாம்பர செடி கண்டுபிடிப்பிற்கு நாடு முழுவதும் இருந்து வாழ்த்துகள் குவிந்தன.மரத்தின் மீது ஆர்வம்: பூப்பறிப்பதிற்கு ஆட்கள் பற்றாக்குறையால், பூச்செடியில் புதிய இனங்களைக் கண்டுபிடிப்பதை விடுத்து, மரத்தின் மீது ஆர்வத்தைத் திருப்பினார். அப்போது, சாதாரணமாக ஒரு ஏக்கரில் பயிரிடப்படும் சவுக்கு மரம் 40 டன் அளவில் மகசூல் தரும். ஆனால் சவுக்கு மரத்தில் ஆண்,பெண் மரங்களைக் கண்டறிந்து, வெங்கடபதி, அதில் பல கலப்பினம் செய்து வீரிய ரக சவுக்கு மரத்தைக் கண்டுபிடித்தார்.இந்த சவுக்கு மரத்தை ஒரு ஏக்கரில் பயிரிட்டால், 200 டன் அளவு மகசூல் தரக்கூடியது. இந்தியாவின் பல பகுதியில் தற்போது பயிரிடப்பட்டு வருகிறது.புதிய கண்டுபிடிப்புகள்: பேரிக்காய் சுவை கொண்ட கொய்யா இனத்தையும், நெய்மணம் கமழும் மிளகாய் என இவரது கண்டுபிடிப்பு பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. தொடர்ந்து பல ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார். மத்திய அரசு 2012ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கியது.இவரது ஆராய்ச்சி பணியில் மகள் லட்சுமி பெரும் பங்காற்றி வருகிறார். லட்சுமியின் முயற்சியால், மூணாறு மலைப்பகுதியில் கிடைத்த காரம் மிகுந்த, மிளகாய் ரகத்தைக் கொண்டுவந்து, நாட்டு மிளகாய் இனத்துடன் கலப்பினம் செய்து, நெய் மணம் கமழும் மிளகாய் இனம் கண்டுபிடிக்கப்பிடிக்கப்பட்டுள்ளது.