பறவைகள் பல விதம்... ஒவ்வொன்றும் ஒரு விதம்...
செல்லப்பறவைகளின் பட்டியலில் புறா, வாத்து, காதல் பறவைகள் என பட்டியல் நீண்டது. அமைதியின் அடையாளமாக புறா அழைக்கப்படுகிறது. நீண்ட காலமாக புறா மனிதனால் வளர்க்கப்படும் பறவையினம். காட்டில் வாழ்வது மணிப்புறா, மாளிகைகள், கோபுரங்களில் வாழ்வது மாடப்புறா, வீடுகளில் வளர்க்கப்படும் புறா ஒரு ரகம். மாடப்புறா வீட்டுப்பறவை போல் மனிதர்களோடு பழகி வாழாது. அரசர்கள் துாது விடுவதற்கு புறாக்களை பயன் படுத்தினர். சராசரி ஆயுட்காலம் 15 ஆண்டுகள். காரணு, சிங், சுவிஸ் மான்டைன், பிரெஞ்ச் மான்டைன், ேஹாமர் என்பவை புறாக்களில் நீண்ட துாரம் பறக்கக்கூடியவை. ஆயிரம் மைல் துாரத்தை இரு நாட்களில் கடந்து விடும் திறன் கொண்டது. இவ்வகை புறாக்களில் எந்த வகை நிற புறாக்களையும் தேர்வு செய்யலாம். ஆனால் வெள்ளை நிற புறாக்கள் வல்லுாறுகளால் எளிதில் தாக்கப்பட்டு விடும். இளம் புறாக்களை 100 மைல் துாரம் மட்டுமே பறக்க விடுவது நல்லது. பயிற்சி பெற்ற வளர்ந்த புறாக்கள் மட்டும் 500 மைல் தொலைவில் இருந்து எளிதில் வீடு திரும்பி விடும். புறாக்கள் காலை தொடங்கி மாலை இருட்டும் வரை பறக்கும். பின்னர் இருட்டிய பின் ஏதாவது மரக்கிளையில் தங்கி விடும்.பயப்படும் வாத்துவாத்துக்களும் செல்லப்பறவைகளாக வளர்க்கப்படுகின்றன. இதன் முட்டைகளோ, கறியோ இறைச்சி பிரியர்கள் மத்தியில் விரும்பி ஏற்கப்படாத சூழ்நிலையிலும் வாத்து வளர்ப்பு என்பது ஆதாயமாக இருப்பதற்கு காரணம், கோழி போல் நோயினால் வாத்து இறப்பு ஏற்பட்டது இல்லை. நாட்டுக்கோழிகளை விட வாத்துக்கள் அதிக முட்டையிடுகின்றன. வீட்டில் 5 முதல் 10 வாத்து வரை வளர்க்கலாம். பயந்த சுபாவம் கொண்டவை. அதிக சந்தடி, சத்தம் அவை முட்டையிடுவதை பாதிக்கும். வாத்துகளுக்கு தீவனத்தை ஈரமாகவே வைக்க வேண்டும். நெல், சோளம் போன்றவற்றை தண்ணீருக்குள் போட்டு வைக்க வேண்டும். வாத்துகளுக்கு கோழிகளை போல் மொத்த தீவனத்தையும் ஒரே நேரத்தில் வைக்கக்கூடாது. காலை, மாலை தரலாம்.சுதந்திரம் பறிப்புசெல்லப்பறவைகளாய் நாம் வளர்க்கும் உயிரினங்கள் காடுகளில் சுதந்திரமாக திரியும் ஜீவன்கள். அவை ஒரு நாளின் முக்கால் வாசி பகுதியை உணவைத்தேடி அலைவதில் பொழுதை கழிப்பவை. அவ்வாறு சுதந்திரமாக இரை தேடும் பறவைகளை நாம் கூண்டுகளில் அடைத்து வளர்க்கும்போது, அவை மனதளவிலும், உடலளவிலும் சோர்வைடைகின்றன. எனவே சூரியன் உதயமான அரை மணி நேரத்துக்குள், மாலையில் 5:00 மணிக்குள் அவற்றுக்கு உணவு தர வேண்டும். செல்லப்பறவைகளுக்கு கூண்டுகளில் வைக்கும் உணவு பொருட்கள் 24 மணி நேரத்துக்கு மேல் கூண்டுகளில் இருக்கக்கூடாது. இந்த கால அளவு நீடித்தால் உணவுப் பொருட்கள் அழுகி விடக்கூடிய சூழ்நிலை உருவாகும். இதனால் செல்லப்பறவைகளின் உடல் நலம் பாதிக்கப்படையும். அவற்றின் வயிற்றில் 'சால்மெனல்லா' எனும் பாக்டீரியா இருக்கிறது. தவறுதலாக பறவைகளின் எச்சம் மனித வயிற்றில் புகுந்து விட்டால் டைபாய்டு நோய் வரும். மேலும் வாந்தி, பேதி, வயிற்று வலி ஏற்படும்.முத்தம் அபாயம்செல்லப்பறவைகளை தங்கள் வீடுகளில் வளர்ப்போர் பறவைகளின் கூண்டு, உணவு பாத்திரம் இவற்றை தொட்ட பின் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். காதல் பறவைகளை வளர்ப்பவர்கள் அவற்றை முத்தமிடுவதோ, முகத்திற்கு அருகே வைத்து கொஞ்சுவதை தவிர்க்க வேண்டும். செல்லப்பறவைகளுக்கு சாக்லெட், காபி, உப்பு, டீ, வெங்காயம், ஆப்பிள் விதைகள், காளான்கள் போன்ற உணவு பொருட்களை கொடுக்கக்கூடாது. செல்லப்பறவைகள் பட்டியலில் கிளிகள் நீக்கப்பட்டு விட்டன. சமீபத்தில் வீடுகளில் வளர்க்கப்படும் கிளிகளை மீட்டு வனத்துறையினர் காடுகளில் விட்டு வருவது குறிப்பிடத்தக்கது. பறவைகள், விலங்குகளை கூண்டில் அடைத்து வளர்ப்பதை தவிர்க்க வேண்டும். அவற்றை சுதந்திரமாக விட்டு விடுவதே மனித நேயம். தொடர்புக்கு 94864 69044.- டாக்டர் வி.ராஜேந்திரன்முன்னாள் இணை இயக்குனர்கால்நடை பராமரிப்புத்துறை, நத்தம்.