உள்ளூர் செய்திகள்

விலைமதிப்பு பொருளாக மாறும் விளைபொருட்கள்

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே மெட்டூரை சேர்ந்தவர் சி.ஐ.ஜெயகுமார். டிப்ளமோ பட்டதாரி.இவருக்குரிய 9 ஏக்கர் நிலத்தில் பெரும்பாலும் நாவல் பழம் மரங்களை நட்டு வளர்க்கிறார். அவற்றுக்கு இடையே சீனி கொய்யா, முருங்கை, நெல்லி, சப்போட்டா மரங்களை ஊடுபயிராக வளர்க்கிறார். மத்திய அரசின் மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைத்து அதன் வழியே செடிகளுக்கு தண்ணீர் கொடுக்கிறார். செயற்கை உரங்களுக்கு மாற்றாக அழுகும் வேளாண் பொருட்களால் (திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை, சப்போட்டா, அன்னாசிப் பழச்சாறு) தயாரிக்கும் பஞ்சகாவ்யம் மட்டுமே மரங்களுக்கு உரமாக கொடுக்கிறார். பூச்சி மற்றும் நோய் தாக்குதலில் இருந்து மரங்களை காப்பாற்ற காய்ந்த மிளகாய், வெள்ளை பூண்டை அரைத்து தெளிக்கிறார். விளைந்த பொருளுக்கு விலையில்லை என்றதும் குப்பையில் கொட்டுவதையே விவசாயிகள் பலரும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஆனால் இவர் அவற்றை மதிப்பு கூட்டுப் பொருளாக்கி வெளிநாடுகளுக்கு அனுப்புகிறார்.விளைபொருட்களை உலர்த்துவதற்கு வசதியாக சோலார் உலர்த்தி குடில் அமைத்துள்ளார். அதனுள் 24 மணி நேரமும் ஒரே மாதிரியான சீதோஷ்ண நிலை இருக்கும். பத்து நிமிடம் மட்டும் வெயில் பட்டால் போதும். மழைக்காலத்திலும் அதே சீதோஷ்ண நிலை இருக்கும். இதனுள் நெல்லி, முருங்கை இலை, வல்லாரை, சீத்தா, ஏலக்காய், திராட்சை போன்றவற்றை உலர்த்த முடியும்.மதிப்பு கூட்டுதல் எப்படிமுருங்கை இலையை உலர்த்தி பவுடர் தயாரிக்கிறார். சிறுமலை மலை நெல்லிக்காயில் தேன் நெல்லி, நாட்டு சர்க்கரை, சர்க்கரை சேர்த்து நெல்லி மிட்டாய் தயாரிக்கிறார். முள் சீத்தா பழத்தை உலர்த்தி பவுடர், வல்லாரை கீரைகளை உலர்த்தி பவுடர் தயாரிக்கிறார்.நிறம், சுவைக்காக எந்த கலப்படமும் செய்வதில்லை. பவுடர்கள் 2 ஆண்டு வரை கெடாமல் இருக்கும். ஜூஸ் 3 மாதம், தேன் நெல்லி, நெல்லி மிட்டாய் 6 மாதம் கெடாமல் இருக்கும். இவர் தயாரிக்கும் அத்தனையும் இயற்கை முறையில் விளைவிக்கப் பட்டவை.இவரால் மதிப்பு கூட்டு செய்யப்பட்ட பொருள், காய்கறிகள் மாதந்தோறும் சிங்கப்பூருக்கு விமானத்தில் பறக்கின்றன. நம்மூர் பாரம்பரியமும், விளைபொருட்களின் மதிப்பும் நமக்கு தெரியாமல் இருக்கலாம். அதனை வெளிநாட்டினர் நன்கு அறிந்து வைத்திருக்கின்றனர். இயற்கை முறையில் விளைந்த பொருட்கள் என்பதால் சிங்கப்பூரில் சிறுமலை நெல்லிக்கு அத்தனை மவுசு உள்ளதாம். இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டதால் உடலுக்கு தீங்கு இல்லை. திண்டுக்கல் காய்கறிகளா என்றே பலரும் கேட்டு வாங்குகின்றனராம்.ஜெயகுமார் கூறியதாவது: விளைபொருட்களை மதிப்பு கூட்டுதல் செய்வது தொடர்பாக கருத்தரங்குகள், பயிற்சிகளுக்கு சென்று கற்றுள்ளேன். மத்திய, மாநில அரசின் மானியத்தால் தான் இவ்வளவு செய்ய முடிந்தது. சிறந்த இயற்கை விவசாயி விருதை மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமிடம் இருந்து வாங்கியிருக்கிறேன், என்றார்.தொடர்புக்கு: 98659 25193-ஆ.நல்லசிவன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !