நெல்லில் செம்பேன் கட்டுப்பாடு
நெல் முக்கியமான உணவுப்பயிராகும். ஆனால் இப்பயிரில் பூச்சி நோய் தாக்குதலினால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. சாறு உறிஞ்சும் பூச்சியான செம்பேன் நெற்பயிரின் இலைகளின் அடிப்புறத்தில் இருந்து சாற்றை உறிஞ்சுவதால் இலைகளின் மேற்பரப்பில் பழுப்பு மஞ்சள் மற்றும் வெள்ளி நிறத்தில் புள்ளிகளும் மெல்லிய வரிகளும் ஏற்பட்டு நாளடைவில் இலைகள் வெளிறி கருகிவிடும். நாற்றங்காலிலும் நடவு வயலிலும் இதன் பாதிப்பால் 25 சதம் வரை மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. வெப்பமான மழைக்காலத்தை ஒட்டி இதன் தாக்குதல் அதிகம் தென்படும் வயற்பரப்பில் அதிகமான ஈரப்பதமும் வெப்பமும் இருத்தல்; நெருக்கமான நடவு போதுமான காற்றோட்டமும் சூரிய வெளிச்சமும் இல்லாதது களைகள் மண்டிக்கிடப்பது தேவையில்லாமலும் தேவைக்கு அதிகமாகவும் விஷப்பூச்சி மருந்துகளைத் தெளித்து இயற்கை எதிரிகளை அழிப்பது போன்றவை இந்த செம்பேன்களின் அதிவேகமான இனப்பெருக்கத்திற்கு முக்கிய காரணங்களாகும். எனவே இக்குறைபாடுகளை நிவர்த்திசெய்ய கீழ்க்காணும் ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளைக் கடைபிடித்து சிறந்த முறையில் கட்டுப்படுத்தலாம் என்று விநாயகபுரம் நீர் மேலாண்மை பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் எஸ்.ஐ.காதிரி தெரிவிக்கிறார்.* சூடோமோனாஸ் புளோரசன்ஸ் ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் கலந்துவிதைநேர்த்தி செய்தல்.* வயலில் களைகளை அகற்ற வேண்டும்.* செம்பேன்கள் பாதித்த பாகங்களை சேகரித்து அழித்தல் வேண்டும்.* எதிர்ப்புத்திறன் உள்ள நெல் ரகங்களைக் கண்டறிந்து பயிர் செய்ய வேண்டும்.* தழைச்சத்து அதிகம் இடுவதைத் தவிர்க்கவும். தழைச்சத்தை யூரியா வடிவில் வேப்பம் புண்ணாக்குடன் 5:1 என்ற விகிதத்தில் கலந்து இடவேண்டும்.* பயிர் சுழற்சி முறையைக் கடைபிடித்தல்.* ராஜராஜன் 1000 சாகுபடி முறையைப் பின்பற்றும்போது செம்பேன் மற்றும் இதர பூச்சிகளின் தாக்குதல் வெகுவாக குறையும்.* செம்பேன்களின் எண்ணிக்கை இலைக்கு 10 என்று மிகும்பொழுது நனையும் கந்தகம் 80% (அல்லது) 6.25 கிராம்/லிட்டர் புரபனாபாஸ் 2 மிலி/லி (அல்லது) 3% வேப்ப எண்ணெய் கரைசல் தெளித்து கட்டுப்படுத்தலாம். பூச்சி மருந்து தெளிக்கும் போது ஒட்டும் திரவம் 0.5 மிலி/லி என்ற அளவில் சேர்க்கவும்.எஸ்.ஐ.காதிரி, பி.எஸ்ஸி(வே)விநாயகபுரம்.