உள்ளூர் செய்திகள்

முதல் முறையாக ஏ.எஸ்.18 ரக நெல் சாகுபடி

தமிழகத்தில் செல்லப் பொன்னி, கர்நாடக பொன்னி, சீரகச்சம்பா என பிரபல நெல் ரகங்களின் பெயர்களை கூறி அரிசியை சிலர் அதிக விலைக்கு விற்கின்றனர். கடைக்காரர் கூறுவதை நம்பி அதிக விலை கொடுத்து அரிசியை வாங்கி சென்றாலும், அதன் ருசி, புசித்த பின் தான் தெரிய வரும். 'விதை ஒன்று; சுரை வேறு' என்றில்லாமல், அந்தந்த ரகத்தை விளைவித்து, அதன் பெயரிலேயே விற்பனை செய்கின்றனர் மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த முன்னோடி வேளாண் சகோதரர்கள் தர்மராஜ், ஆறுமுகசாமி. ஆண்டுதோறும் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று, அங்கு விளைவிக்கப்படும் முன்னணி ரக நெல் விதைகளை வாங்கி மதுரையில் தங்களின் 25 ஏக்கரில் இயற்கை முறையில் விளைவித்து சாதனை படைத்து வருகின்றனர். இந்தாண்டு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் விளைவிக்கப்படும் 120 நாள் பயிரான 'ஏ.எஸ்.18' ரக நெல் விதையை கொள்முதல் செய்தனர். இதை முதல் முறையாக மதுரையில் தங்களது நிலத்தில் 100 நாட்களுக்கு முன் நடவு செய்தனர். தற்போது கதிர்களில் பால் பிடித்து செழிப்பாக வளர்ந்துள்ளது. இதை 120வது நாளில் அறுவடை செய்ய உள்ளனர்.புது நெல்லு... புது நாத்து...வேளாண் சகோதரர்கள் தர்மராஜ், ஆறுமுகசாமி கூறியதாவது: பொதுவாக நெல்லில் குட்டை ரகங்கள் அதிகம். புதிய ரகமான ஏ.எஸ்.18 ரகம் மூன்றரை அடி முதல் நான்கரை அடி வரை உயரம் இருக்கும். சூரிய ஒளி, காற்றோட்டமான சூழ் நிலையில் செழிப்பாக வளரும். இதன் தோகை ஒரு இன்ஞ் அகலத்துடன் முக்கால் அடியில் இருந்து ஒரு அடி நீளம் வரை இருக்கும். மிகவும் சன்னரகம். அதிக ருசி கொண்ட ஏ.எஸ்.18 ரகம் சாப்பாடு, பிரியாணிக்கு ஏற்றது. பருவ நிலைக்கு ஏற்ப உரம் குறைவாக இட வேண்டும். இதன்படி, அடியுரமாக ஏக்கருக்கு ஒரு மூடை டி.ஏ.பி., பொட்டாஷ் அரை மூடை இட வேண்டும். மேலுரமாக ஏக்கருக்கு 25 கிலோ பொட்டாஷ், 15 கிலோ யூரியா, வேப்பம் புண்ணாக்கு 15 கிலோ இட வேண்டும். பூச்சி தாக்குதல் இல்லை. இயற்கை முறையில் விளைவிப்பதால் மகசூல் அதிகளவு உள்ளது. பொதுவாக சன்ன ரக அரிசியை செல்லப்பொன்னி, கர்நாடக பொன்னி என விற்கின்றனர். எங்களை பொறுத்தமட்டில் எந்த ரகம் விளைவிக்கிறோமோ, அதன் பெயரிலேயே விற்பனை செய்ய வேண்டும். இதன்படி, ஏ.எஸ்.18 ரகத்தின் பெயரிலேயே அரிசியாக்கி விற்கவுள்ளோம். 65 கிலோ கொண்ட நெல் மற்ற ரகங்களில் ஏக்கருக்கு 30 முதல் 35 மூடைகள் கிடைக்கும். ஏ.எஸ்.18 ரகத்தில் ஏக்கருக்கு ஐந்து முதல் ஆறு மூடைகள் கூடுதல் மகசூல் கிடைக்கும். 65 கிலோ 1,000 ரூபாய் முதல் 1,100 ரூபாய் வரை விலை உள்ளது. ஏனைய ரகம் 65 கிலோ 800 ரூபாய் மட்டுமே, என்றனர். தொடர்புக்கு 93624 44440.- கா.சுப்பிரமணியன்மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !