காராமணி சாகுபடி
காய்கறி வகையில் காராமணி சாகுபடியானது சற்று சுலபமானது. தனது வேர் முடிச்சுகளில் மணிலா போல் சுற்றியுள்ள தழைச்சத்தினை தனது வேர் முடிச்சுகளில் சேகரித்து வைத்துக்கொள்ளும் திறன் பெற்றது. இக்காரணத்தினால் இப்பயிருக்கு அதிக அளவு எரு, உரங்களை இடவேண்டிய கட்டாய நிலை கிடையாது. இப்பயிரை பூச்சிகளோ வியாதிகளோ பாதிப்பதில்லை.சாகுபடி முறைகள்: பயிரை ஆவணியில் துவங்கலாம். சாகுபடிக்கு தேர்ந்தெடுத்த மண் நல்ல வடிகால் வசதியைக் கொண்டிருக்க வேண்டும். நிலத்தை கட்டிகள் இல்லாமல் உழுது இயற்கை உரங்களை இடலாம். இயற்கை உரங்களை இடுவதற்கு முன் அவைகளில் உள்ள கண்ணாடிகளை அகற்றிவிட்டு உரத்தினை நன்கு பொடிசெய்துவிட்டு சாகுபடி நிலத்தின்மீது சீராகத் தூவ வேண்டும். உடனே எருக்கள் நிலத்தில் மண்ணோடு நன்கு கலக்க வேண்டும். நிலத்தை உழுவது மிக ஆழமாக இல்லாமல் எருவினை மண்ணோடு நன்கு கலக்கும்படி செய்யப்பட்டிருக்க வேண்டும். விவசாயிகள் தாங்கள் சொந்தமாக தயாரித்த உரங்களை ஏக்கருக்கு ஐந்து டன் வரை இடலாம். நிலத்தை உழவு செய்துவிட்டு இரண்டு அடி இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும். பாரில் அரை அடி இடைவெளியில் விதையினை ஊன்ற வேண்டும். விதை சீராக முளைப்பதற்கு பாசனம் செய்வதோடு அடுத்துவரும் பாசனங்களை கவனமாக கொடுக்க வேண்டும். நிலத்தில் தண்ணீர் தேங்காதபடி பாசனம் செய்ய வேண்டும். பாசனத்தை வாரத்திற்கு இருமுறை செய்ய வேண்டும். வயலில் வெகு சுத்தமாக களையெடுக்க வேண்டும். செடிகளை பாத்தியில் அப்படியே விடலாம். விதை நட்ட 60 நாட்களுக்கு பிறகு அறுவடைக்கு வரும். அதாவது விதைத்த 40-45 நாட்களில் பூக்கள் பிடித்து 60வது நாளில் காய்கள் அறுவடைக்கு வரும். காய்கள் கணிசமான அளவிற்கு நீளமாக இருக்கும்.பொருளாதாரம்: விதை கிரயம் ரூ.1,200, நிலம் தயாரிப்பு ரூ.750, தொழு உரம் ரூ.1,000, ரசாயன உரம் ரூ.300, பார் அமைக்க ரூ.300, விதைத்தல் ரூ.200, களையெடுத்தல் ரூ.300, அறுவடை ரூ.2,000. மொத்தம் ரூ.6,650.அரை ஏக்கரில் மகசூலின் மதிப்பு - ரூ.12,000. அரை ஏக்கரில் கிடைக்கும் லாபம் ரூ.5,350.நல்ல பயிர்: சாதாரணமாக மண்வளத்தை பெருக்குவதற்கு விவசாயிகள் பசுந்தாள் உரச்செடிகளை விதைத்து அவைகளை மடக்கி உழுவார்கள். செடியில் அறுவடை முடிந்தவுடன் காராமணி செடிகளை பூமியில் மடக்கி உழலாம். பூமி நல்ல வளம் பெற்றுவிடும். படத்தில் காராமணியின் வளர்ச்சியையும் செழிப்பாக இருக்கும் கொடிகளையும் காணலாம். செடிகளை மடக்கி உழுதால் பூமி வளம்பெறும். வாழை சாகுபடி செய்த தோட்டத்தில் காராமணியை சாகுபடி செய்தால் காய் அறுவடை செய்தபின் செடியை பூமியில் மடக்கி உழலாம்.-எஸ்.எஸ்.நாகராஜன்