உள்ளூர் செய்திகள்

தென்னை சாகுபடியில் வறட்சி நிர்வாகம்

தென்னை நன்கு செழித்து வளர்ந்து, நல்ல மகசூல் கொடுக்க நீர் நிர்வாகம் மிக முக்கிய பங்கினை வகிக்கிறது. சமீப காலமாக நிலவும் நீர் பற்றாக்குறையால் தென்னை மரத்தின் மகசூல் பாதிக்கப்படுவதோடு, மரத்தின் வளர்ச்சியும் மிகுந்த பாதிப்படைகின்றது. தென்னை மரங்களை வறட்சியிலிருந்து பாதுகாக்க சில தொழில் நுட்பங்களை கடைப்பிடிப்பது அவசியம்.* தென்னை மரத்தை சுற்றி 1.8 மீட்டர் ஆர வட்டப்பாத்தியில் தென்னையிலிருந்து கிடைக்கக்கூடிய இலைகள், உரி மட்டைகள், நார்க்கழிவு மற்றும் மட்டைகளை சிறுசிறு துண்டுகளாக்கி மண்ணிலிட்டு மூட வேண்டும். இவை மண்ணில் மேல் ஒரு பாதுகாப்பாக இருந்து நீர் ஆவியாவதை தடுக்கும். களைகளையும் கட்டுப்படுத்தும்.* வட்டப்பாத்தியில் பசுந்தாள் உரங்கள், பசுந்தழை உரங்கள், மட்கிய எருக்கள் போன்றவற்றை மண்ணில் இட்டு மூடி விட்டால் ஈரப்பதம் காக்கப்படும்.* வட்டப்பாத்தியினுள் உரித்த தேங்காய் மட்டைகளை அடுக்கி, மண்ணில் பதிந்து நீர் நிர்வாகம் செய்வதன் மூலம் நீர் எளிதில் ஆவியாகாமல் இருப்பதோடு, இந்த மட்டைகளை நீரை உறிஞ்சி சேகரித்து பின்னர் மரத்திற்கு கொடுக்கிறது.* குளத்துக் கரம்பை மற்றும் வண்டல் மண்ணை கோடை காலத்தில் கொண்டு வந்து வட்டப்பாத்தியில் இட்டால் நீரை உறிஞ்சி சேகரித்து கொள்ளும் தன்மையை அதிகரித்து கொள்ளும்.* தோட்டத்தில் மிகுந்த வறட்சி ஏற்பட்டால் மரத்தின் அடிப்பகுதியில் உள்ள வயதான ஓலைகளை வெட்டி விடுவதால் இலைகள் மூலம் நீர் ஆவியாகிப்போவதை தடுக்கலாம். மிகுந்த வறட்சி வந்து தண்ணீர் பற்றாக்குறையினால் மரம் பட்டு விடும் என்ற நிலை வரும்போது இம்முறையினை செயல்படுத்தலாம்.* தென்னை மர வட்டப்பாத்திக்குள் 2 கிலோ சாதாரண உப்பை பரவலாக துாவி விடுவதால் காற்றில் உள்ள ஈரப்பதம் மண்ணிற்கு கிடைக்கப்பெற்று குளிர்ச்சியாக இருக்கும்.* மழை குறைவான பகுதிகளில் கிடைக்கும் மழை நீரை சேமிக்கும் வகையில் தாழ்வான பகுதிகளில் பண்ணைக் குட்டைகள் அமைத்து நீரை சேமித்து நிலத்தடி நீரின் அளவை அதிகரிக்கலாம். தொடர்புக்கு 90470 54350.- சு.செந்தில்குமார்தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுனர்காந்தி கிராம கிராமிய பல்கலை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !