உள்ளூர் செய்திகள்

கோடைகாலத்தில் கறவை மாடுகளுக்கான தீவன மேலாண்மை - நவீன தொழில்நுட்பம்

கோடைகாலத்தில் கறவை மாடுகளை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலில் மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது.பசுந்தீவனம், கலப்புத்தீவனம் கொடுக்கும் அளவை அதிகரித்து உலர், நார் தீவனம் அளிக்கும் அளவை குறைக்க வேண்டும். பசுந்தீவனங்களை பகல் வேளையிலும் உலர் தீவனங்களை இரவு நேரங்களிலும் வழங்க வேண்டும். நார் தீவனங்களை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொடுப்பதன் மூலம் உடல் வெப்பம் தணியும்.உலர் தீவனங்களான வைக்கோல், தட்டை ஆகியவற்றின் மீது உப்பு கலந்த தண்ணீர் அல்லது நாட்டு சர்க்கரை கலந்த தண்ணீர் தெளித்து பதப்படுத்தியபின் வழங்க வேண்டும். கோடை காலத்தில் போதிய அளவு பசுந்தீவனங்கள் கிடைக்கவில்லையெனில் மர இலைகள், பீர் நொதி, மரவள்ளிக்கிழங்கு திப்பி போன்ற ஈரப்பதம் அதிகமுள்ள தீவனங்களை பயன்படுத்தலாம். 1000 கிலோ (1 டன்) பீர் நொதிமீது ஒரு கிலோ சமையல் உப்பு, ஒரு கிலோ சோடா உப்பைக் கலந்து கொடுக்க வேண்டும்.வெயில்காலத்தில் வியர்வை மூலம் வெளியேறும் தாது உப்புக்களின் இழப்பை சரிக்கட்ட தாது உப்புக்கலவையை 50 சதவீதம் அதிகரித்து கொடுக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு 15லிட்டர் அல்லது அதற்கு மேல் பால் கறக்கும் மாடுகளுக்கு தினமும் 20-30 கிராம் தாது உப்புக்கலவை, 50 முதல் 100 கிராம் சமையல் உப்பு, 30-50 கிராம் சமையல் சோடா சேர்த்து கொடுக்க வேண்டும்.கோடைகாலத்தில் தீவனம் உட்கொள்ளும் அளவு குறையும். எனவே நாள் ஒன்றுக்கு 15 லிட்டருக்கு மேல் கறவை மாடுகளுக்கு பருத்திக்கொட்டை, வறுக்கப்பட்ட சோயா, இதர எண்ணெய்வித்துக்களை 500 கிராம் முதல் ஒரு கிலோ வரை கூடுதலாக கொடுக்க வேண்டும்.மாட்டுக்கொட்டகையில் நீர் தெளிப்பான், மின் விசிறி அமைத்து உடல் வெப்பத்தைக் குறைப்பதன்மூலம் தீவனம் உண்ணும் அளவை அதிகரிக்க முடியும். கறவை மாடுகளுக்கு எப்போதும் குளிர்ந்த குடிநீர் கிடைக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். கோடையில் வெப்ப அயற்சியைத் தணிக்க கலப்பு தீவனத்தில் மாடு ஒன்றுக்கு 5 முதல் 10 கிராம் வரை பேக்கரி ஈஸ்ட் கலந்து கொடுக்கலாம். மேலும் புண்ணாக்கு, தவிடு ஆகியவற்றை 12 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து கொடுக்கலாம்.தற்காலத்தில் கோடை அயற்சியைத் தணிக்கவல்ல மூலிகை மருந்துகள் அல்லது நெல்லிக்காய், துளசி, அஸ்வகந்தா போன்ற மூலிகைகளை மாடுகளுக்கு கொடுக்கலாம். தவிர தினமும் 100 முதல் 200 கிராம் வரை அசோலாவைத் தீவனத்தில் கலந்து கொடுக்கலாம். மேலும் செலினியம், குரோமியம் ஆகியவற்றை தீவனத்தில் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி அதிகரித்துக் கொடுக்கலாம். (தகவல்: பெ.வசந்தகுமார், கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல்-637 002. 94439 40903)-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !