மணம் கமழும் குண்டு மல்லிகை பணமும் தரவல்லது
மல்லிகை சாகுபடியை துவங்கும்போது நம் கவனத்திற்கு வரவேண்டியது நட்ட மல்லிகைச்செடி தொடர்ந்து பதினைந்து வருடங்களுக்கு நமக்கு பூ மகசூலினைத் தரவேண்டும். பிறகுதான் பழைய தோட்டத்தை அழித்துவிட்டு புதிய தோட்டம் அமைக்க வேண்டும். மல்லிகை சாகபடிக்கு மணல் கலந்த செம்மண் ஏற்றது. மண்ணின் காரத்தன்மை 6 முதல் 8 வரை இருக்கலாம். செடி வளர்ச்சிக்கும் பூக்கள் உற்பத்திக்கும் சரியான வெப்பநிலை தேவை. சாகுபடி சமயம் செடிகளைத் தாக்கும் பூச்சிகளை அழிக்க வேண்டும். மல்லிகையில் தழைகள் நிறம் மாறுதல் இரும்புச்சத்து பற்றாக்குறையாகும். உடனே பரிகாரம் செய்ய வேண்டும். டி.ஏ.பி. உரங்கள் இடுவதற்கு பிரத்யேக கவனம் தரவேண்டும். பயிருக்கு அன்னபேதி உப்பு கரைசல் தெளிக்கலாம். சாகுபடியில் மகசூலினை அதிகரிக்க கவாத்து செய்தல் வேண்டும். பூக்கள் பெரியதாக போரான் சத்து அளிக்க வேண்டும்.நல்ல தரமான மல்லிகை பதியன்களை வாங்கி புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் நடலாம். வேர் ஆழமாக இறங்கி பூக்கள் பிடிக்க ஆவன செய்ய வேண்டும். ஆரம்பக்கட்டத்தில் வரும் புழு, பூச்சிகளை அழிக்க வேண்டும். சிலந்திகளையும் அழிக்க வேண்டும். மல்லிகைச்செடிகள் சோர்வு அடைந்தால் 'சைட்டோசைம்' என்னும் பயிர் ஊக்கியை அடிக்க வேண்டும். பலவித கரைசல்களை செடிகள் மேல் தெளிக்கும்போது திரவ சோப்பினை கலந்து தெளிக்க வேண்டும் (உதாரணம் சாண்டோவிட்). (குண்டு மல்லிகை கடுமையாக உழைக்கும் விவசாயிகளை விரும்புகின்றது) விவசாயியின் மேற்பார்வையில் பெண்கள் இருட்டில் அரும்புகளை (மலராத பூ) பறிப்பார்கள். பெண்கள் செடிகளின் மத்தியில் நின்று அறுவடை செய்யும்போது தங்களது விரல்களின் ஸ்பரிசத்தினால் அரும்புகளை கண்டுபிடித்து விடுகின்றனர். ஸ்பரிசம் இறைவன் இவர்களுக்கு கொடுத்த வரம். அரும்பு பறித்தல் விடியற் காலையில் முடிந்துவிடுகின்றது. இதனை உடனே விற்பனை செய்து மிக அதிகமான விலையை விவசாயி பெறுகிறார். நேரம் அதிகமாக அதிகமாக பூவின் விலை குறைந்துவிடுகின்றது. மல்லிகைப்பூ சாகுபடி செய்யும் திறமையான விவசாயி விடியற்காலம் மூன்று மணிக்கு தனது டிராக்டரை எடுத்துக்கொண்டு மேலும் அரும்புகள் அறுவடை செய்யும் பெண் ஆட்களை அழைத்துக்கொண்டு மல்லிகைத் தோட்டம் சென்றடைகிறார். விவசாயி காலை மூன்று மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை அதாவது 18 மணி நேரம் கடுமையாக உழைக்கிறார். இதோடு மட்டுமல்ல. வீட்டில் சிறிது நேரம் இருந்துவிட்டு மீண்டும் மல்லிகைத் தோட்டம் சென்று முக்கிய விவசாய வேலைகளாகிய உரங்கள் இடுதல், பாசனம் செய்தல், பயிர் பாதுகாப்பு போன்றவைகளை செய்கிறார். மல்லிகை சாகுபடியில் வெற்றியை தோற்றுவிப்பவர் விவசாயி ஆவார். மல்லிகை செடி விவசாயிக்கு தினமும் வருமானம் தருகின்றது. திறமையான விவசாயிகள் ஏக்கரில் ரூ.அரை லட்சம் வரை லாபம் எடுக்கின்றனர்.-எஸ்.எஸ்.நாகராஜன்.