உள்ளூர் செய்திகள்

உரச்செலவை குறைக்கும் பசுந்தாள் உரங்கள்

தமிழகத்தில் தற்போது பொழிந்துள்ள மழை கோடை உழவுக்கு போதுமானது. இப்பொழுது கோடை உழவு செய்து பசுந்தாள் உரங்களாகிய தட்டைப்பயறு, கொழுஞ்சி, சணப்பை ஆகியவற்றை ஒரு எக்டேருக்கு 30 - 40 கிலோ என்ற அளவில் பயிரிடலாம். இதன் மூலம் மண்ணின் ஈரத்தன்மையை பாதுகாத்து மற்ற களைகளையும் கட்டுப்படுத்தலாம். இந்த பசுந்தாள் உரங்களை அறுபது நாட்கள் கழித்து மடக்கி உழவு செய்யும்போது சணப்பை சுமார் எக்டருக்கு 133 கிலோ தழைச்சத்து உரமும், தட்டைப்பயிறு எக்டருக்கு 74 கிலோ தழைச்சத்து உரமும், கொழுஞ்சி எக்டருக்கு சுமார் 134 கிலோ தழைச்சத்து உரமும் அடுத்த பயிறுக்கு கிடைக்கும் விதம் மண்ணில் சேர்த்து மண் சத்துக்களை மேம்படுத்துகிறது. பயிர்களுக்கு தேவையான நுண்ணுாட்டச் சத்துக்களும் கிடைக்கிறது.இதனால் அடுத்து நடவிருக்கும் பயிருக்கு மிக குறைவாக உரமிட்டாலே போதும். இதனால் விவசாயிகள் உரத்திற்காக செலவழிக்கும் இடுபொருள் செலவை குறைத்து, வருமானத்தையும் அதிகரிக்க முடியும். மண்ணின் வளத்தையும் பாதுகாக்கலாம். மேலும் கோடை உழவு செய்வதால் மக்காச்சோள படைப்புழுவையும் கட்டுப்படுத்தலாம். படைப்புழுவின் கூடுகள் அழிக்கப்படுவதுடன் கூட்டுப்புழுக்கள் உழவின் போது நிலத்தின் மேல் மட்டத்திற்கு கொண்டு வரப்பட்டு சூரிய ஒளி மற்றும் பறவைகளால் அழிக்கப்படுகிறது. எனவே, கோடை மழையை கொண்டு கோடை உழவு செய்து பசுந்தாள் உரச் செடிகளை விதைப்பது பயன் தரும். தொடர்புக்கு 94439 90964.- த.விவேகானந்தன், வேளாண் துணை இயக்குனர்நீர் மேலாண்மை பயிற்சி நிலையம், மதுரை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !