உள்ளூர் செய்திகள்

மகிழ்ச்சியோடு நெல் வயலில் பணி செய்யும் அறுவடை இயந்திரங்கள்

மதுரை பகுதியில் விவசாயிகள் நல்ல அனுபவத்தைப் பெற்றவர்கள். பண்ணைத்தொழிலில் காட்சி மாற்றம் என்பார்கள். அதுபோல விவசாயிகள் ஒரே தவணையில் பல்வேறு பணிகளை செய்து பயனடைந்து வருகிறார்கள். காரணம் இப்பகுதியில் பாசனம் அணைக்கட்டுகளிலும், மழையின் காரணத்தினாலும் பயிர் விளைகின்றது. இந்த வருடம் சென்ற வருடத்தைப் போலில்லாமல் மகசூல் அதிகமாக கிட்டி வருகின்றது. நல்ல ரகங்களான ஜேசிஎல், ஜே13, எடீடி 36, எடீடி39, எடீடி45, எஎஸ்டி 16 போன்ற நெல் ரகங்களை சாகுபடி செய்ததில் விவசாயிகள் நெல் அறுவடையைத் துவக்கி உள்ளார்கள்.அதிசயம் என்னவென்றால் 45லிருந்து 50 மூடை வரை மகசூல் எடுக்கிறார்கள். ஒரு மூடை (66 கிலோ) ரூ.850லிருந்து ரூ.1,000 வரை கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கிறார்கள். மேலும் கடந்த வருடத்தை விட வைக்கோல் ஒரு ஏக்கரில் ரூ.4,000லிருந்து ரூ.5,000 வரை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். குறிப்பாக ஜே13 வைக்கோல் நல்ல விலை போகின்றது. உழைக்கும் மாடுகளுக்கும், இதர பணிகளுக்கும் குறிப்பாக கறவை மாடுகளுக்கும் வைக்கோல் தேவை அதிகரித்து உள்ளது.மதுரை பகுதியில் பள்ள வயல் பகுதிகளிலும் அதிகப் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகின்றது. நெல் உற்பத்திக்கு பள்ள வயல்களும் தேவைப்படுகின்றது. பள்ள வயலில் விஞ்ஞான முறைகளை உபயோகித்து மண் பக்குவம் செய்யாவிடில் மகசூல் கணிசமான அளவில் குறைந்து விடும். விவசாயிகள் விஞ்ஞானிகளுடன் தொடர்பு கொண்டு அவர்கள் சிபாரிசுபடி பணிகளை செய்ய வேண்டும். பள்ளவயல் பகுதியில் ஜிங்க் சல்பேட் உபயோகிக்காத வயலில் நோய் தாக்குதல் அதிகம் கிடைக்கும். இச்சூழ்நிலையில் புகையான் தாக்குதல் இருக்கும். இம்மாதிரி பாதிப்பு இருக்கும் இடத்தில் வயலில் ஐந்து மூடை வரை குறைவாக கிடைத்து விடும்.நெற்பயிரை நன்கு கவனிக்க வேண்டும். பயிர் பாதுகாப்பு இலை சுருட்டுப்புழுவை அழிக்க மானோகுரோட்டோபாஸ் 36 இசி 400 மில்லி/ ஏக்கர் அல்லது குளோரிபைரிபாஸ் இசி 500 மில்லி/ஏக்கர் தெளிக்க வேண்டும். மதுரை மாவட்டத்தில் பள்ளவயலில் ஜிங்க் சல்பேட் விவசாய விஞ்ஞானிகள் சிபாரிசுபடி அடிக்க வேண்டும். இது முக்கியமான பரிகாரம் ஆகும். இவ்வாறு செய்யாவிடில் மகசூல் ஐந்து மூடை வரை குறைந்து விடும்.தொடர்ந்து நெல் சாகுபடி: நெல் சாகுபடியில் கை தேர்ந்த மதுரை விவசாயிகள் 45,000 ஏக்கர் நிலப்பரப்பில் வடகிழக்கு பருவமழையை நம்பி நெல் நாற்றங்கால் தயார் செய்து உள்ளார்கள். விவசாயிகள் வைகை அணை நிரம்பிய உடன் நெல் நடவு வேலையை ஆரம்பிப்பார்கள். அதிக அளவில் ஜே 13 நெல்லை நட தங்களை தயார் செய்து கொண்டிருக்கின்றனர். வைகை அணை நிரம்பும் காட்சியும், நிலங்களில் நடவு பணி நடப்பதும் பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இம்மாதிரியான காட்சியை மதுரையில் தான் பார்க்கலாம். இன்று மகிழ்ச்சியோடு நல்ல விலை கிடைக்கும் சூழ்நிலை நெல் கதிர் அடிக்கும் காட்சி அளிக்கும். விவசாயிகள் பார்க்க வேண்டிய இடம் இன்று மதுரையாகும்.- எஸ்.எஸ்.நாகராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !