வருமானம் தரும் களைகள்
பயனற்ற செடிகளே களைகள் என்று அழைக்கப்படுகிறது. ஓர் குறிப்பிட்ட பயிர்களிடையே காணப்படும் மற்ற தாவரங்களே களைகள் எனப்படும். இந்த களைகள் நாம் வளர்க்கும் பயிர்களுடன் மண்ணில் உள்ள சத்துக்கள், சூரிய ஒளி மற்றும் அமைவிடத்திற்காக போராடுகின்றன. மேலும் சில களைகள் தாவரம் மற்றும் விலங்குகளுக்கு ஒவ்வாத நச்சுப் பொருட்களை மண்ணுக்குள் கசியவிடுகின்றன. அது மட்டுமின்றி விவசாய உற்பத்தியின் அளவு மற்றும் தரத்தைக் குறைக்கின்றது.எனவே களைகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் நீக்குவது முக்கியமாகும். ஆனால் நாம் பயன்படுத்தும் களைக்கொல்லி மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் மண்ணின் இயல்பைக் கெடுப்பதுடன் மனிதனுக்கும் பல்வேறு உடல் உபாதைகளை உண்டாக்குகிறது. பெரும்பாலான நேரங்களில் களை நிர்வாகத்திற்கு நாம் செலவழிக்கும் பணம் அந்த பயிரின் விளைச்சலால் கிடைக்கும் வருமானத்தைவிட அதிகமாகிவிடுகிறது. ஆனால் அந்தக் களைகளே நமக்கு வருமானத்தை ஏற்படுத்தித் தரமுடியும் என்பது நம்மில் பலருக்கு தெரியாது. அத்தகைய வருமானம் ஈட்டித்தரக்கூடிய களைகளை காண்போம்.* கரப்பான்: இது நெல் வயல் மற்றும் நீர் தேங்கும் கரிசல் மண் பகுதியில் காணப்படக்கூடியது. வெள்ளைக் கரிசலாங்கண்ணி என்றும் அழைக்கப் படுகிறது. இது எக்லிப்டா ஆல்பா என்ற பெயருடன் அஸ்டரேசி என்ற தாவரவியல் குடும்பத்தில் காணப்படுகிறது. இது குடல்புண்ணை குணப்படுத்தவும், நரையை நீக்கும் கூந்தல் தைலங்களிலும் பயன்படுகிறது.இவை வேருடன் பிடுங்கப்பட்டு கழுவி 2 அல்லது 3 நாட்களுக்கு காயவைக்க வேண்டும். இது நீர்ச்சத்து அதிகம் உள்ள தாவரமாக இருப்பதால் பூஞ்சை ஏற்படாதவாறு காயவைக்க வேண்டும். காய்ந்த பின் விற்பனைக்கு அனுப்பலாம். இன்று விளாத்திகுளம் பகுதியில் அதிகமான மக்களால் சேகரிக்கப்பட்டு விருதுநகர் நாட்டு மருந்துக்கடைகளில் விற்பனை செய்கிறார்கள். தற்போது பெங்களூருவில் உள்ள நிறைய மூலிகை கம்பெனிகளால் அதிக அளவில் கொள்முதல் செய்யப்படுகிறது.* சாரணைக்கொடி: மூக்கிரட்டை அல்லது சாரணத்தி என்று அழைக்கப் படுகிறது. இது பாச்சட்டை மற்றும் வட்ட சாரணத்தி என்ற பெயரால் கிராமங்களில் அழைக்கப்படுகிறது. இது போயர்கேவியா டிப்யூசா என்ற தாவரவியல் பெயரில் நிக்டாஜினேசி என்ற குடும்பத்தில் காணப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேதத்தில் பலவிதமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.உடலில் புதிய செல்களை உருவாக்க இது பயன்படுவதால் புனர்னாவா என்ற வியாபார பெயராலும் அழைக்கப்படுகிறது. இத்தாவரமானது தென்னைமர தோப்புகள், சாலைஓரங்கள், தரிசு மற்றும் விவசாய நிலங்களில் அதிக அளவில் காணப்படுகிறது. இத்தாவரத்தின் வேர்கள் பூமியினுள்ளே எப்போதும் இருக்கும். ஜூன் மாதம் முதல் நவம்பர் வரை சேகரிக்கலாம்.சேகரிக்கப்பட்ட வேரானது நீரில் கழுவி காயவைக்க வேண்டும். இதனுடைய வேர் மற்றும் முழுச்செடியும் மூலிகை கம்பெனிகளால் காய்ந்த நிலையில் கொள்முதல் செய்யப்படுகிறது. காய்ந்த வேர் மற்றும் முழுச்செடியும் வெவ்வேறு விலைகளில் வாங்கப்படுகிறது. மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஏராளமான மக்கள் இதனை சேகரித்து விருதுநகர் மற்றும் மதுரையில் உள்ள நாட்டு மருந்து வியாபாரிகளிடம் விற்பனை செய்கிறார்கள்.இத்தாவரம் பொதுவாக எல்லா இடங்களிலும் காணப்பட்டாலும் மருந்து கம்பெனிகளின் தேவைகளுக்கு போதுமானதாக இல்லை. பல இடங்களில் அதனுடைய பயன் மக்களை அடையாததால் மக்கள் அதனை பறித்து விற்பனை செய்வதில்லை. சில இடங்களில் வேரை விற்பனை செய்துவிட்டு தாவரத்தை வீணே எரித்துவிடுகின்றனர்.மேற்கூறிய தாவரங்கள் நிலைத்த அறுவடை மூலம் சேகரிக்கப்பட்டு நேர்த்தியாக தயார் செய்து விற்பனைக்கு அனுப்ப வேண்டும். இது விவசாயிகள் மற்றும் மூலிகை சேகரிப்போருக்கு நல்ல வருவாய் தரும் என்பதில் ஐயமில்லை.என்.கணபதிசாமி,மதுரை-625 706. 88700 12396.