உள்ளூர் செய்திகள்

கால்நடைகளுக்கு இன்சூரன்ஸ் அவசியம்

மனிதர்கள் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் எவ்வளவு தொகைக்கு தங்களை காப்பீடு செய்கிறார்களோ, அதற்கான பிரிமியம் எனப்படும் தொகையை காலாண்டுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுக்கொருமுறை என்ற கணக்கில் செலுத்தி விடுவர்.இறுதியில் அவர்கள் செலுத்திய தொகை வட்டியும் முதலு மாக திரும்ப பெற்று கொள்வார்கள். ஆனால், கால்நடைகளை ஓராண்டு, மூன்றாண்டு என்ற கணக்கில் மட்டுமே காப்பீடு செய்ய முடியும். ஓராண்டு பிரிமியத்தொகை முழுவதையும் ஒரே தவணையில் செலுத்தி விடுவது தான் இதில் உள்ள நடைமுறை. இந்த காலகட்டத்துக்குள் கால்நடைகள் இறந்தால் மட்டுமே இன்சூரன்ஸ் தொகை முழுவது மாக கிடைக்கும். கால்நடை இறப்பு ஏற்படவில்லையெனில் கட்டிய பிரிமியத்தொகை கிடைக்காது.கால்நடைகளை இன்சூரன்ஸ் செய்ய கால்நடை மருத்துவர் ஒத்துழைப்புடனே மேற்கொள்ள முடியும். கால்நடைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யும் கால்நடை மருத்துவர், அதன் உயரம், நிறம், கொம்புகளின் நீளம், இரண்டு கொம்புகளுக்கு இடையே உள்ள துாரம் இனம், வயது, அடையாள எண் ஆகிய விவரங்கள் அடங்கிய மருத்துவ சான்றிதழை கால்நடை மருத்துவரிடம் இருந்து பெற வேண்டும். பின்னர் கால்நடையின் சொந்தக்காரர் பற்றிய விவரங்கள் கொண்ட விண்ணப்பத்துடன் இன்சூரன்ஸ் முகவர்கள் வசம் கொடுக்க வேண்டும். அத்துடன் பிரிமியத் தொகையையும் செலுத்தி விட்டால் இன்சூரன்ஸ் நிறுவனம் அதற்கான பாலிசி வழங்கும். இதுதான் இன்சூரன்ஸ் செய்வதில் கால்நடைகளுக்கான நடைமுறை.இன்சூரன்ஸ் செய்யப்பட்ட கால்நடைகள் நோய் வசப்பட்டால் விவசாயிகள் தகுதியுள்ள கால்நடை மருத்துவர்களை கொண்டே மருத்துவம் செய்ய வேண்டும். தகுதியற்ற நபர்கள் செய்யும் வைத்தியத்தை இன்சூரன்ஸ் நிறுவனம் ஏற்காது. கால்நடைகள் இறந்தால் முதலில் கால்நடை மருத்துவருக்கே தகவல் சொல்ல வேண்டும். ஏனெனில் அவர்தான் இறப்பு சான்றிதழ் வழங்கத்தகுதி உடையவர் ஆவார். அவரது அறிக்கையின் அடிப்படையில் மட்டும் தான் இன்சூரன்ஸ் பணத்தை திரும்ப பெற முடியும். நம்நாட்டில் யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி, ஒரியண்டல் பயர் அண்ட் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி, நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் கம்பெனி, நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆகிய அரசுத்துறை நிறுவனங்கள் விவசாயிகளுக்காக இன்சூரன்ஸ் திட்டத்தில் பணியாற்றுகின்றன.தற்போது தமிழக அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் விவசாயிகள் பலன் பெறும் பொருட்டு பிரிமியத் தொகையில் 50 சதவீதத்தை மானியமாக வழங்குகிறது. இத்திட்டத்தில் பங்கு பெறும் உழவர்கள் 30 ஆயிரம் ரூபாய் வரை தங்கள் கால்நடையை இன்சூர் செய்து கொள்ளலாம். ஒரு நபருக்கு இரண்டு கால்நடைகள் மட்டும் என்ற உச்சவரம்பும் உண்டு. தொடர்புக்கு 94864 69044.- டாக்டர் வி.ராஜேந்திரன்முன்னாள் இணை இயக்குனர்கால்நடை பராமரிப்புத்துறை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !