ஒருங்கிணைந்த வேளாண் பண்ணை
தமிழகத்தில் விவசாய தொழிலுக்கான பணியாளர்கள் குறைந்து வருகின்றனர். முள் வெட்ட, விதைக்க, அறுவடை செய்ய, களை எடுக்க என விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. நாற்று நடுவது முதல் அறுவடை வரை அனைத்தும் கருவிகள் உதவியுடன் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பலர் கால்நடை வளர்ப்பு, மரங்கள் நடுதல், ஊடு பயிர் சாகுபடி, மீன் வளர்த்தல், பால்பண்ணை என பல தொழில்களை தொடங்கி லாபகரமாக நடத்துகின்றனர். வங்கிகள், நபார்டு போன்ற அரசின் விவசாய வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் 'ஒருங்கிணைந்த கூட்டு விவசாய பண்ணைகள்' நிறுவ கடன் கொடுப்பதால் பலர் இதில் இறங்கி நல்ல வருமானம் பெறுகின்றனர். விவசாயம், ஆடு, மாடு வளர்ப்பு, இறைச்சி மீன் வளர்ப்பு ஆகிய தொழில்களை பண்ணையில் செய்கின்றனர். தீவனத்தை பயிரிடுகின்றனர். சிலர் மரங்களை நடுதல், ஊடு பயிர், விவசாயம், கோழி வளர்ப்பு, அலங்கார மீன் வளர்ப்பு, மண்புழு உரம் தயாரிப்பு ஆகியவற்றை செய்கின்றனர். காம்பவுண்ட் சுவர் கட்டி ஆடு, மாடு, கோழி, முயல், பன்றி, மீன், உயிராற்றல் உரம் தயாரிப்பு, சூரிய ஒளி சக்தி, சாண எரிவாயு அடுப்பு, என தங்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொள்ளும் தற்சார்பு பண்ணையாக அமைத்து சாதனை படைக்கின்றனர்.பல காரணங்களால் விவசாயம் நின்று போன இடங்களில் கூட 'கூட்டுப் பண்ணைகள்' தொடங்கப்படுகின்றன. மண் பரிசோதனை மூலம் மண் வளம் மாற்றப்பட்டு ஆழ் குழாய் கிணறுகள் மூலம் தண்ணீர் எடுத்து அதிக இடங்களில் புதிய தீவனப் பயிர்களை விவசாயம் செய்கின்றனர். தென்னை, வேம்பு, சந்தன மரங்கள், ஊடு பயிர், நீடித்த நிலைத்த விவசாயம் செய்து கால்நடைகளை வளர்க்கின்றனர். நாட்டுக்கோழி வளர்ப்பு, மண்புழு உரம் தயாரிப்பு, காளான் வளர்ப்பு போன்றவை லாபகரமான ஒருங்கிணைந்த பண்ணைய பணிகளாகும். விவசாய கடன் பெற நபார்டு வங்கி www.nabard.org எனும் இணைய தளத்தை பயன்படுத்தலாம். தொடர்புக்கு 95662 53929.- எம்.ஞானசேகர், விவசாய ஆலோசகர்,சென்னை