"இரும்புச் சத்துடன் வருமானமும் உண்டு - கீரை சாகுபடிக்கு யோசனை
கோடையில் கீரை சாகுபடி செய்து, அதிக வருவாய் பெறலாம் என, நீர்மேலாண்மை பயிற்சி நிலைய துணை இயக்குனர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: தினமும் 50 கிராம் அளவு நாம் உணவில் கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் குறைந்தளவு கொழுப்பு, கார்போ ஹைட்ரேட், அதிகளவில் வைட்டமின் ஏ சத்து, தாது உப்புகள், குறிப்பாக இரும்புச் சத்து அதிகம் உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட செடிகளை, கீரைகளாக பயன்படுத்தலாம் என்றாலும், சில செடிகளின் இலைகள் மட்டுமே சாகுபடி செய்து, கீரையாக பயன்படுத்தப்படுகின்றன. அதில் முக்கியமானவை தண்டுக்கீரை, அரைக்கீரை, சிறுகீரை.தண்டுக்கீரை: எல்லா மண் வகையிலும் சாகுபடி செய்யலாம். இதில் 4 ரகங்கள் உள்ளன. கோ4 தானியக்கீரை. கோ 1, 2, 5 ஆகிய ரகங்கள் விதைத்த 5 நாட்களில் முளைக்கீரையாகவும், 35 முதல் 40 நாட்களில் தண்டுக்கீரையாகவும் பயன்படுகிறது.அரைக்கீரை: இது கிள்ளுக்கீரை பிரிவைச் சேர்ந்தது. இதில் கோ 3 என்ற ரகத்தை, விதைத்த 20 முதல் 25நாட்களில் ஒருமுறையும், பின், வாரம் ஒருமுறையும் அறுவடை செய்யலாம்.சிறுகீரை: கீரை வகைகளிலேயே மிகவும் குறுகிய கால பயிர் இது. விதைத்த 18 முதல் 21 நாளில் வேருடன் பிடுங்கி விற்பனை செய்யலாம். இது எல்லா பருவத்திற்கும், பலவகை மண் வகையிலும் பயிரிட ஏற்றது.விதை உற்பத்தி: கீரைகளில் ஆக்சலேட் என்ற நச்சுப் பொருளின் அளவு குறைவாக உள்ளது. விதை உற்பத்தியை பொறுத்தவரை 55 நாட்களில் அறுவடைக்கு தயாராகும். ஒரு எக்டேரில் 200 கிலோ விதை உற்பத்தி செய்யலாம். இதன் மூலமும் வருவாய் பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.