நிலக்கடலைக்கு ஜிப்சம் இடுவது அவசியமா?
பொதுவாக நம் தமிழகத்தில் நீர் தேங்காத வடிகால் வசதியுடைய மணல் கலந்த கரிசல் மண் மற்றும் செம்மண் உள்ள பகுதிகளில் நிலக்கடலை சாகுபடி செய்யப் படுகின்றது. பொள்ளாச்சி, தேனி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், தென்காசி ஆகிய பகுதிகளில் டிஎம்வி-7, ஏஎல்ஆர்-3 ஆகிய ரகங்களை சித்திரைப்பட்டம் (ஏப்ரல்-மே)யில் மானாவாரியாக சாகுபடி செய்கின்றனர். இதுதவிர (ஜூலை -ஆகஸ்ட்) பின் ஆடிப்பட்டத்தில் டிஎம்வி-7, விஆர்ஐ-2, கோ-2 ஆகிய ரகங்களை பயிரிடுகின்றனர்.மேலும் நீர்ப்பாசன வசதியுடைய பகுதிகளில் கார்த்திகை அல்லது மார்கழிப் பட்டம் (டிசம்பர் - ஜனவரி) , மாசிப்பட்டம் (பிப்ரவரி - மார்ச்) மற்றும் சித்திரைப்பட்டம் (ஏப்ரல்-மே) ஆகிய பருவங்களில் நிலக்கடலை பயிரிடப்படுகின்றது. சாதாரணமாக நிலக்கடலை பயிருக்கு விதைத்த 20வது நாள் மற்றும் 40வது நாள் என 2 முறை களை எடுக்க வேண்டும். 2வது களைக்குப் பின்தான் நிலக்கடலை செடியானது தரையில் வேரூன்றி புதிய பிஞ்சுகளை தரையினுள் இறக்க ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் தரையானது கடினமாக இல்லாமல் இருந்தால்தான் பிஞ்சுகள் நன்கு வேரூன்றி மண்ணினுள் இறங்கி நல்ல விளைச்சலைப் பெறமுடியும். இல்லாவிட்டால் பிஞ்சுகள் சரிவர இறங்க முடியாமல் சிறுத்தோ அல்லது வெளியே தெரிந்து பின் பச்சை நிறமாகவோ மாறிவிடும். இதனைத் தவிர்க்க 2வது களைஎடுத்தபின் அல்லது 45வது நாளில் ஜிப்சம் (கால்சியம் சல்பேட்) 400 கிலோகிராம்/ஹெக்டேர் அல்லது சல்பா 40 கிலோகிராம்/ஹெக்டேர் (சல்பா 10 கிலோகிராம்/ஏக்கர்) என்ற அளவில் நிலத்தில் இட்டு நன்கு மண் அணைக்க வேண்டும். ஜிப்சம் அல்லது சல்பா இடுவதன் மூலம் நன்கு பருத்த, திரட்சியான, சோடைகளற்ற, நல்ல நிறமான நிலக்கடலைகளைப் பெறமுடியும்.மேலும் விபரங்களுக்கு: வேளாண்மை ஆலோசனைக் குழுமம், 172, வணிக வளாகம், பூ மார்க்கெட், மாட்டுத்தாவணி (பேருந்து நிலையம் அருகில்), மதுரை-625 007.போன்: 0452-258 5759.-கே.வடிவேல் குமார், (ஆராய்ச்சியாளர்) 88700 12101.