மல்பெரியில் இலைச் சுருட்டுப் புழு
டையபானியா பல்வெருலண்டாலிஸ் என்னும் இலைச் சுருட்டுப்புழு மல்பெரி இலைகளை அதிக அளவில் சேதப்படுத்துவதால் பட்டுப் புழு வளர்க்கும் விவசாயிகள் தங்களது மல்பெரி தோட்டத்தில் இலை சுருட்டுப்புழுக்களின் தாக்குதல் இல்லாதவாறு பாதுகாக்க வேண்டும். பொதுவாக இவை எல்லா மாதங்களிலும் தென்பட்டாலும் ஆகஸ்டு முதல் மார்ச்சு வரை புழுக்களின் தாக்குதல் அதிகமாக இருக்கும். இதன் தாய் பூச்சிகள் 1செ.மீ. நீளத்தில் சாம்பல் கலந்த பழுப்பு நிறத்திலும் இறக்கைகளில் கறுப்பு நிற அலைகள் போன்று கோடுகள் காணப்படும். பெண் பூச்சிகள் மல்பெரி செடியின் ஒவ்வொரு கிளையின் நுனி குருத்துப் பகுதியில் 1 அல்லது 2 முட்டைகள் இடுகின்றது. இதுபோல் ஒரு பூச்சி 100 முட்டைகள் வரை இடும். முட்டையில் இருந்து இளம்புழுக்கள் 3-4 நாளில் வெளிவரத் தொடங்கும். இளம்புழுக்கள் நன்கு விரிவடையாத இளம் தளிர் இலைகளின் விளிம்புகளை ஒருவித இழையால் பிணைத்துக் கொண்டு உள்ளே இருந்து தளிர் இலைகளை சேதப்படுத்துகின்றது. சற்று வளர்ந்த புழுக்கள் பசுமை கலந்த பழுப்பு நிறத்துடனும் பக்கவாட்டில் கறுப்பு நிற புள்ளிகளுடனும் காணப்படும். புழுப்பருவம் 10-15 நாட்கள் வரை இருக்கும். சற்று வளர்ந்த புழுக்கள் இளந்தளிர்களுடன் கூடிய தண்டுப் பகுதியையும் சேர்த்து சேதப்படுத்துவதால் செடிகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகின்றது. நீர்ச்சத்து நிறைந்த தளிர் இலைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதால் புழுவளர்ப்பில் நமக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகின்றது. இப்புழுக்களின் பாதிப்புகளில் இருந்து தோட்டத்தை பாதுகாக்க கீழ்க்கண்ட தடுப்பு முறைகளை கையாளலாம்.1.பாதிப்பு மிகவும் குறைவாக இருந்தால் பாதிக்கப்பட்ட செடிகளின் நுனிப்பகுதிகளை பாதுகாப்பாய் கிள்ளி ஒரு பாலிதின் பையில் சேகரித்து அதை எரியும் நெருப்பில் இட்டு அழித்து விட வேண்டும்.2.தோட்டத்தின் உள்ளே சிறிய பறவைகள் வந்து உட்காரும் வண்ணம் சில குச்சிகளை தோட்டத்தின் நடுவே அங்காங்கே ஊன்றி வைத்தால் சிறிய பறனைகள் இந்த இளம் புழுக்களை உணவாக்கி கொள்கின்றது.3.பாதிப்பு அதிகமாக இருந்தால் பூச்சி மருந்துகளை பயன்படுத்த வேண்டும். இதற்கு தோட்ட கவாத்து பணிகள் ஆரம்பித்து 20நாள் கழித்து நுவான் (76இசி) என்ற மருந்தை 2 மிலி/1 லிட்டர் நீரில் கலந்து செடிகள் நன்றாக நனையும் படி தெளிக்க வேண்டும். 10 நாட்கள் கழித்து மீண்டும் ஒருமுறை ரோகர் (30இசி) 3 மிலி/1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 1 ஏக்கர் தோட்டத்திற்கு 150 லிட்டர் மருந்து கரைசல் தேவைப்படும். மருந்து தெளித்து 15 நாட்கள் கழித்து இலைகளைப் பறித்து புழுக்களுக்கு உணவாக கொடுக்கலாம்.4. பூச்சி மருந்து தெளித்து ஐந்து நாட்கள் சென்ற பிறகு ட்ரைகோக்ரம்மா கைலோனிஸ் என்னும் முட்டை ஒட்டுண்ணியை 1 ஏக்கருக்கு 4சிசி என்ற அளவில் 7 நாள் இடைவெளியில் இரண்டு முறை பயன்படுத்த வேண்டும். ஒட்டுண்ணி அட்டைகளை தோட்டத்தில் கட்டிய பிறகு பூச்சி மருந்து அடிப்பதை கண்டிப்பாக தவிர்த்து விட வேண்டும்.5. புழு ஒட்டுண்ணிகளை (பிரகான் குளவி) ஒரு ஏக்கருக்கு 200 குளவிகள் வீதம் கவாத்து செய்த 30 நாட்கள் கழித்து விடவும்.6. இரவு நேரங்களில் (7 மணி முதல் 10 மணி வரை மட்டும்) 200 வாட்ஸ் பல்புகளை விளக்குப் பொறியாக அமைத்து அந்தப்பூச்சிகளை கவர்ந்திழுத்து எளிதில் அழிக்கலாம்.மேற்கண்டவாறு ஒருங்கிணைந்த தடுப்பு முறைகளையும் அனைத்து பட்டு விவசாயிகளும் தங்களது தோட்டத்தில் கடைபிடித்தால் இப்பூச்சியின் தாக்குதலில் இருந்து தோட்டத்தை பாதுகாத்து தரமான இலைகளை புழுக் களுக்கு உணவாக அளித்து தரமான பட்டுக் கூடுகளை நாம் அறுவடை செய்ய முடியும்.தகவல்:- அ.ஞானகுமார் டேனியல்,த.சிவசுப்ரமணியன், விஞ்ஞானிகள், மதுரை-625 402.தொலைபேசி எண் : 0452-246 3455, 94884 00952, 94868 56814.