திருந்திய நெல் சாகுபடி - சாதனை படைத்தது மதுரை
தமிழக அளவில் முதல் முறையாக மதுரை மாவட்ட கிழக்கு வட்டாரம் கொல்லங்குளம் கிராம விவசாயிகள் நுாறு சதவிகித அளவில் திருந்திய நெல் சாகுபடியில் ஈடுபட்டு சாதனை படைத்துள்ளனர். இக்கிராமத்தில் 70 எக்டேர் விவசாய நிலம் உள்ளது. 100 விவசாயிகள் உள்ளனர். வைகை அணையில் தண்ணீர் திறந்தால் நெல், கரும்பு சாகுபடி செய்வது வழக்கம். வைகை நீர் கிடைப்பதல் 25 எக்டேர் குறுவை நடவாக நெல் சாகுபடி செய்துள்ளனர். இதில் 19 எக்டேர் பரப்பளவில் 'டி.கே.எம்.-13' (திருவாரூர் குப்பம்) மற்றும் 'ஏ.எஸ்.டி.-16' (அம்பாசமுத்திரம்) ஆகிய ரகங்களை தேர்வு செய்து திருந்திய நெல் சாகுபடி முறையில் முன்னோடி விவசாயிகள் பூமிநாதன், நல்லபிச்சான், பாஸ்கரன், கணபதி செட்டியார், ஞானம், ஆறுமுகம் ஆகியோர் 20 நாட்களுக்கு முன் நாற்று நடவு செய்தனர்.ரூ.5,000 மானியம் கிடைக்கும்கிழக்கு வட்டார வேளாண் உதவி இயக்குனர் செல்வம் கூறியதாவது: திருந்திய நெல் சாகுபடி முறையில் கடைபிடிக்க வேண்டிய 12 தொழில்நுட்பத்தை பின்பற்றுகின்றனர். 10 முதல் 14 வயதான இள நாற்றுகளை நடவு செய்தனர். நடவு வயல் துல்லியமாக சமன் செய்யப்பட்டது. இடைவெளிக்கு 'மார்க்கர்' கருவியை பயன்படுத்தினர். 22.5 செ.மீ., இடைவெளியில், குத்துக்கு ஒரு நாற்று வீதம் நடவு செய்தனர். காய்ச்சலும், பாய்ச்சலும் முறையில் நீர்பாசனம் செய்வதால் குறைந்த தண்ணீர் போதும். கோனாவீடர் கருவி மூலம் 10ம் நாள் முதல் முதல் பத்து நாட்களுக்கு ஒரு முறை வீதம் நான்கு முறை களையெடுக்க வேண்டும். இலை வண்ண அட்டையை பயன்படுத்தி தேவையான தழைச்சத்துக்களை மேல் உரமாக இட வேண்டும். ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றினால் மகசூல் அமோகமாக இருக்கும். இயந்திர நடவுக்கு எக்டேருக்கு 5,000 ரூபாய் மானியம் வழங்கப்படும். பாய் நர்சரி மூலம் நாற்றுகளை நடவு செய்ய ஏக்கருக்கு 3,500 ரூபாய் செலவு மட்டுமே. சம்பள ஆட்களை நியமித்தால் கூடுதல் செலவு பிடிக்கும்.செலவு குறைவு; அதிக லாபம்யூரியாவை அதிகம் இடக்கூடாது. இதனால் கரும்பச்சை அதிகரித்து பூச்சி தாக்குதல் ஏற்படும். பவர் டில்லர் இயந்திரம் மூலம் துல்லியமாக நடவு செய்தனர். கூட்டுப்பண்ணையம் மூலம் வெள்ளியங்குன்றம் விவசாயிகளுக்கு வழங்கிய பவர் டில்லர் இயந்திரம் கொல்லங்குளம் திருந்திய நெல் விவசாயிகளுக்கு குத்தகை அடிப்படையில் வரவழைக்கப்பட்டது. நடப்பாண்டில் திருந்திய நெல் சாகுபடி 60 சதவிகிதம் என்பதை நடப்பாண்டுக்கு 75 சதவிகிதமாக வேளாண்மைத்துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி அறிவித்துள்ளார். தமிழகத்தின் முதல் திருந்திய நெல் சாகுபடி கிராமம் கொல்லங்குளம். இத்திட்டம் சில ஆண்டுகளாக விரிவடைந்து தற்போது 100 சதவிகிதம் என்ற இலக்கை எட்டியுள்ளது. இக்கிராமத்தை சென்னை வேளாண் இயக்குனர் அலுவலகத்தின் வேளாண் அலுவலர் வெங்கடாஜலம், மதுரை இணை இயக்குனர் குமார வடிவேல், துணை இயக்குனர் (மத்திய திட்டம்) விஜயலட்சுமி ஆகியோர் ஆய்வு செய்தனர். திருந்திய நெல் சாகுபடி முறையால் மிகக்குறைந்த தண்ணீர், இரண்டொரு சம்பள ஆட்கள் மட்டுமே தேவை, மகசூல் இரட்டிப்பு என பல்வேறு லாபம் கிடைக்கிறது, என்றார். தொடர்புக்கு 70103 86804.