முள் இல்லா மூங்கில் நாற்றுக்கள் தயாரிக்கும் முறை
நவீன தொழில்நுட்பம்கழிகளைப் பயன்படுத்தி நாற்றுக்களை உற்பத்தி செய்தல்: நன்கு வளர்ந்த தரமுள்ள மூங்கில் தூர்களிலிருந்து கழிகளை வெட்டியபிறகு பக்கக்கிளைகளை கழியிலிருந்து ஒரு அங்குலம் விட்டு வெட்டி எடுக்க வேண்டும். இவ்வாறு தயார் செய்ய முழு கழிகளை நீண்ட தாழ்வான பாத்திகளில் மணல், மண் 2:1 என்ற அளவில் இட்டு கழிகளைப் பதித்து கழிகள் மூடும் அளவிற்கு மண்கலவை கொண்டு மூடவேண்டும். காலை, மாலை நேரங்களில் நீர் பாய்ச்ச வேண்டும். இவ்வாறு நட்ட கழிகளின் உயிர் மொட்டுக்களில்இருந்து முதலில் புதிய தண்டுகள் 10-20 நாட்களில் தோன்றும். பிறகு வேர் தோன்ற ஆரம்பித்த 2 மாதங்களில் கன்றுகளைப் பிடுங்கி நடுவதற்கு ஏற்ற நிலையை அடையும். இவ்வாறு வேருடன் உள்ள தண்டுகளைக் கொண்ட கணுக்களை தனித்தனியாக வெட்டி பிரிக்க வேண்டும். பிறகு தண்டுகளை பவிஸ்டின் 2 சதம் கரைசலில் முக்கி பிறகு 25 செ.மீ. X 15 செ.மீ. பாலிதீன் பைகளில் மண்கலவை மண், மணல், மக்கிய தொழு உரம் (2:1:1) நிரப்பி நட்டு 50 சதம் பசுமைக்கூண்டில் ஒரு மாதம் வைக்க வேண்டும். பிறகு வெட்டவெளியில் 1 மாதம் வைத்திருந்து 5-6 மாதம் வயதுடைய நாற்றுக்களை வயலில் நடலாம்.இதுதவிர கழிகளில் உள்ள உயிர் கணுக்களைத் தனித்தனியாக வெட்டியெடுத்து ஐ.பி.ஏ.200 பி.பி.எம். கரைசலில் இரவு முழுவதும் ஊறவிட்டு பிறகு 2 சதம் பவிஸ்டின் கரைசலில் நனைத்து நேரடியாக 25 செ.மீ. X 15 செ.மீ. பாலிதீன் பைகளில் மண்கலவையை நிரப்பி நட்டு, நீர் பாய்ச்சி 4 முதல் 5 மாதங்களில் தரமான கன்றுகளை உருவாக்கலாம்.இது தவிர மூங்கில் கழிகளை 2 அல்லது 3 கணுக்களைக் கொண்ட பாகங்களாக வெட்டி ஒவ்வொரு கணுக்களின் இடையில் ஒரு சிறிய துவாரமிட்டு ஐ.பி.ஏ. 100-200 பி.பி.எம். கரைசலை ஊசி மூலம் உட்செலுத்த வேண்டும். துவாரமிட்ட பகுதியை அடைத்து, பின் மேற்கூறப்பட்ட முறையில் பாத்திகளில் நட்டு நாற்றுகளை உற்பத்தி செய்யலாம்.பக்கக் கிளைகளைக் கொண்டு நாற்றுகளை உற்பத்தி செய்தல்: ஒன்றரை - இரண்டு ஆண்டுகள் வயதுடைய கழிகளில் பக்கக்கிளைகள் கழிகளுடன் இணையும் பகுதிகளில் கணுக்களில் வேர் முடிச்சுக்கள் காணப்படும். இந்த வேர் கொண்ட பக்கக்கிளைகளை கழிகளிலிருந்து அடிபடாமல் அகற்றி 1 அ 2 கணுக்கள்விட்டு வெட்டி 400-2000 பிபிஎம் ஐ.பி.எம். கரைசலில் முக்கி ஒரு மணி நேரத்திற்குப் பிறகு 2 சதம் பெவிஸ்டினில் நனைத்து பாலிதீன் பைகளில் நட்டு பசுமைக் கூடாரத்தில் வைத்து நீர் ஊற்றி கன்றுகளை வளர்க்கலாம்.கன்றுகளின் தண்டுகளைப் பிரித்து நடும் முறை: விதை, விதையில்லா முறையின் மூலம் உற்பத்தி செய்த தரமான கன்றுகளைக் கொண்டு குறுகிய காலத்தில் அதிகளவு கன்றுகளை உற்பத்தி செய்ய இயலும். தேர்வு செய்த கன்றுகள் ஊட்டச்சத்து மிக்க பாத்திகளில் மண், மணல், மக்கிய தொழு உரம் 2:1:1 விகிதத்தில் கலந்து டி.ஏ.பி. 50 கிராம்/ச.மீ., பொட்டாஷ் 25 கிராம், பாஸ்போ பாக்டீரியா 25 கிராம் மற்றும் வாம் 50 கிராம் இட்டு நன்றாக கலக்க வேண்டும். 1 X 1 அடி இடைவெளியில் கன்றுகளை நடவேண்டும். காலை மாலை நேரங்களில் நீர் ஊற்ற வேண்டும். 4 முதல் 5 மாதங்களில் பக்கக்கிளைகள் தோன்றும். அப்பொழுது இக்கன்றுகளைத் தோண்டி எடுத்து தண்டுகளை வேருடன் பிரித்து ஒரு தண்டை மட்டும் மீண்டும் தயார் செய்த பாத்திகளில் நட்டு மீத முள்ள தண்டுகளை தயார்செய்த பாலிதீன் பைகளில் 2 சதம் பெவிஸ்டின் கரைசலில் ஊறவைத்து வேருடன் நட்டு, பசுமைக்குடிலில் வைத்து நீர் பாய்ச்சி புதிய கன்றுகளை 2 மாதங்களில் உருவாக்கலாம். பாத்திகளில் நட்ட கன்றுகளை மீண்டும் 4 முதல் 5 மாதங்களில் எடுத்து பிரித்து நாற்றுகளை உற்பத்தி செய்யலாம். இவ்வாறாக 4 முதல் 5 முறை செய்தபின் புதிய நாற்றுகளைப் பயன்படுத்த வேண்டும்.நாற்றுக்களின் வயது: மூங்கில் நாற்றுக்கள் நடவு வயலில் நடுவதற்கு குறைந்தது 6 மாதங்களாவது நாற்றங்காலில் வளர்க்கப்பட்டிருக்க வேண்டும். 10 முதல் 12 மாதங்கள் வளர்க்கப்பட்ட வாளிப்பான கன்றுகளை நடுவது மிக நல்லது. (தகவல்: சுரேஷ், ஐ.சேகர், கி.பரணீதரன், வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையம்-641 301. போன்: 04254-222 010).-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.