உள்ளூர் செய்திகள்

நவீன தொழில்நுட்பம்

கறிக்கோழிகளில் சிறந்த தீவன மாற்றுத்திறனைப்பெற...: கோழியின் மரபணு, ஊட்டச் சத்துக்கள், குடிநீரின் தரம் மற்றும் அளவு, தட்பவெப்பநிலை, நோய்கள், பண்ணை பராமரிப்பு, குஞ்சு பராமரிப்பு முறை, கோழித்தீவன மூலப் பொருட்களாகிய மக்காச்சோளம், சோயா புண்ணாக்கு, மீன்தூள், தாவர எண்ணெய், எண்ணெய் நீக்கிய அரிசித்தவிடு போன்றவற்றின் தரம் ஆகிய பலவும் முக்கிய காரணிகளாகும்.தீவன மாற்றுத்திறன் என்பது 'ஒரு கோழி ஒரு கிலோ எடையை அடைய உண்ணும் தீவன அளவை தீவன மாற்றுத்திறன்' என்கிறோம். அதாவது ஒரு இறைச்சிக்கோழி 6 வாரம் 4 கிலோ தீவனம் உட்கொண்டு 2 கிலோ உடல் எடை அடைந்தால் அதன் தீவன மாற்றுத்திறன் 1:2 (1 கிலோ உடல் எடை 2 கிலோ தீவனம்) என்பதாகும். உட்கொண்ட தீவன அளவை உடல் எடை கொண்டு வகுத்தால் தீவன மாற்றுத்திறன் வீதம் கிடைக்கும்.கடந்த 50 ஆண்டுகளில் தீவன மாற்றுத்திறன் 1:5லிருந்து 1:1.7 வரை முன்னேற்றம் அடைந்துள்ளது. இவ்வாறு குறைந்த மாற்றுத்திறனை அடைவதன்மூலம் குறைந்த தீவனத்தைக்கொண்டு அதிக இறைச்சியைப் பெறமுடியும். இது பண்ணையாளர்களுக்கு அதிக லாபத்தைக் கொடுக்கிறது.வென்காப், ராஸ் ஹைப்ரோ, ஆர்பர்ரக்கர் போன்ற பல்வேறு இன இறைச்சிக் கோழிகள் இந்தியாவில் வளர்க்கப்படுகின்றன. இவை அனைத்திற்கும் ஒரே வகையான மரபணுக்கள் உடலில் இருக்காது. எனவே ஒவ்வொரு வகை கோழிகளுக்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் மாறுபடும். எனவே பிரத்யேகமாக பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச்சத்துக்கள் கொண்ட தீவனத்தை அளிக்க வேண்டும்.ஊட்டச்சத்துக்கள் 6 வகைப்படும். எரிசக்தி அளிக்கவல்ல மாவுச்சத்து, புரதசக்தியை அளிக்கவல்ல கச்சாப்புரதம், நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கவல்ல கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள் (சுண்ணாம்புச்சத்து, எலும்புச்சத்து, மணிச்சத்து போன்றவை), உயிர்ச்சத்து எனப்படும் வைட்டமின்கள் மற்றும் உடலில் அனைத்து வேதிவினைக்கும் தேவை யான தண்ணீர், அமினோ அமிலங்கள், 20க்கும் மேற்பட்ட வைட்டமின்கள், 15க்கும் மேற்பட்ட தாது உப்புக்கள், 20 வகையான கொழுப்பு அமிலங்கள் என ஊட்டச் சத்துக்கள் மொத்தமாக சுமார் 50 பிரிவுகளைக் கொண்டது. பற்றாக் குறையாகும் ஒவ்வொரு ஊட்டச் சத்தும் வளர்ச்சிக் குறைபாட்டை ஏற்படுத்தும். எனவே அனைத்து ஊட்டச் சத்துக்களும் சரிவிகிதத்தில் கொண்ட தீவனமாக அளிப்பது அவசியம்.கோழிகள் பொதுவாக நாளொன்றுக்கு திண்ணும் தீவன அளவைவிட 2 மடங்கு தண்ணீர் அருந்தும். அதாவது 5000 கோழிகள் கொண்ட இறைச்சிக்கோழி பண்ணைக்கு ஒரு நாளைக்கு சுமார் 1300 முதல் 1500 லிட்டர் தேவைப் படும். சுத்தமான தண்ணீர் கொடுக்க வேண்டும். குளிர்ந்த தண்ணீரை 24 மணி நேரமும் கொடுப்பது அவசியம்.குளிர்காலங்களில் கோழிகள் நன்குதீவனம் உட்கொண்டு சிறந்த தீவன மாற்றுத்திறனைப் பெறுகின்றன. வெயில்காலங்களில் கோழிகள் 4 மடங்கு தண்ணீர் அருந்துவதால் தீவனம் உண்பது குறைந்து தீவன மாற்றுத்திறன் பாதிப்படையும். எனவே வெப்ப அயற்சியைத் தடுக்க வேண்டிய வழிமுறைகளைப் பின்பற்றி தீவன மாற்றுத்திறனை அதிகரிக்கலாம்.தீவன மாற்றத்திறனை பாதிக்கக் கூடிய நோய் ரத்தக்கழிச்சல் நோயாகும். இந்நோய் வராமல் தடுக்க தீவனத்தில் தொடர்ந்து ரத்தக்கழிச்சல் தடுப்பு மருந்து கலந்து அளிக்க வேண்டும். கோழிக்குஞ்சுகள் குஞ்சு பொரிப்பகத்திலிருந்து பண்ணைக்கு வந்தவுடன் எவ்வளவு சீக்கிரம் நீர் மற்றும் தீவனம் உண்ணுகிறதோ அவ்வளவு நல்லது. 25 கோழிக் குஞ்சுகளுக்கு ஒரு தீவனக்கலனும், 50 கோழிக்குஞ்சுகளுக்கு ஒரு தண்ணீர் தொட்டியும் வைக்க வேண்டும்.கோழித் தீவனத்தில் மக்காச்சோளம் 40-70 சதம் வரை உபயோகப்படுத்தப் படுகிறது. பூஞ்சையினால் பாதிக்கப் படாத தானியமாக இருப்பது அவசியம். நன்கு பதப்படுத்தப்பட்ட சோயாபீன்ஸ் புண்ணாக்கு மற்றும் தீவன மீன்தூள் (அ) உப்பில்லாத கருவாடு அதிகபட்சம் 10 சதம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். தாவர எண்ணெய் பயன்படுத்தும் போது அது கெட்ட வாடை அடிக்காததாக இருக்க வேண்டும். கலப்படம் இல்லாத எண்ணெய் நீக்கிய அரிசித் தவிடுவாங்கி உபயோகிக்க வேண்டும்.சுமார் 10,000 இறைச்சிக்கோழிகள் கொண்ட பண்ணையில் தீவன மாற்றுத்திறன் 1:1.7லிருந்து 1: 1.6 அடையும்போது தீவனச்செலவு சுமார் ரூ.40,000 வரை குறையும். (தகவல்: ரா.பாலமுருகன், ஆ.சுந்தரேசன், அர.கிருபாகரன், சி.பாண்டியன், மா.ராமச்சந்திரன், ஏ.கவிதா, கோ.பால கிருஷ்ணன், விலங்கியல் உணவியல் துறை, சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி, சென்னை)-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !