உள்ளூர் செய்திகள்

நவீன தொழில்நுட்பம்

அழகு புல்தரை அமைக்க தெரிவு செய்யப்பட்ட நிலத்தை முதலில் 45செ.மீ. ஆழத்திற்கு உழுது நன்கு கொத்தி புழுதியாக்கி, அதிலுள்ள சிறு கற்கள், பெரிய கட்டிகள், கோரைக் கிழங்கு, அருகம்புல்லின் கிழங்கு போன்றவற்றைச் சுத்தமாக பொறுக்கி எடுத்து அப்புறப்படுத்த வேண்டும். பின் மக்கிய எருவையோ, மக்கிய மாட்டுச்சாணத்தையோ ஒரு சதுர மீட்டருக்கு 2 கிலோ என்ற அளவில் இட்டு நிலப்பரப்பை சமன்படுத்த வேண்டும். சமப்படுத்தும்பொழுது மழைநீர் வடிவதற்காக 3 மீட்டர் பரப்புக்கு 15 செ.மீ. சரிவுகொடுத்து சமப்படுத்துதல் வேண்டும். இவ்வாறு தயார் செய்த நிலத்திற்கு இருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இவ்வாறு செய்தால் மண் நன்குபடிந்து அதில் உள்ள களைகள் முளைக்கும். அவற்றை எடுத்துவிட்டு மீண்டும் கொத்தி சமன்படுத்த வேண்டும்.அழகு புல் வகைகள்: புல்தரை அமைப்பதற்கு அருகம்புல், செயின்ட் அகஸ்டியன் புல், உப்பருகு, நீலப்புல், சங்கிலிப்புல், ஜப்பான்புல், மணிலாப் புல், கொரியன்புல், ஐதராபாத் புல், குட்டை பெர்முடா ஆகிய வகைகளை பயன்படுத்தலாம். ஒவ்வொரு வகை புல் இனத்திற்கும் வெவ்வேறு தனித்தன்மையும் பயன்பாடும் உண்டு.புல்தரை அமைக்கும் முறைகள்: புல்தரை விதைகள் புல்பாய் நடவு, மண் சாணி கலந்து நடுதல், கரணை அல்லது கிழங்கு ஊன்றும் முறை ஆகியவையாகும்.விதை: நன்கு தயார் செய்த நிலத்தில் ஒரு பங்கு விதைக்கு ஐந்து பங்கு மணல் கலந்து, 2 செ.மீ. ஆழத்தில் விதைக்க வேண்டும். ஒரு சதுர மீட்டருக்கு 2.5 கிராம் விதை தேவைப் படும். விதைக்கும் முன் மண்ணை முள்கொத்தால் நன்கு கிளறிவிட்டு விதைத்த பின் விதைகளைக் குளத்துமண் கொண்டு மூடவேண்டும். ஒரு மீட்டருக்கு 10 கிராம் லிண்டேன் மருந்து தூவி எறும்பு வராமல் தடுக்க வேண்டும். பின் பூவாளி கொண்டு தண்ணீர் தெளிக்க வேண்டும். விதை முளைக்க 5 வாரம் ஆகும். புல் 5 செ.மீ. உயரம் வளர்ந்தபின் அறுத்துவிட வேண்டும். இந்த நிலையில் புல்தரை கருவியைக்கொண்டு கத்தரிக்கக் கூடாது. பின் உருளை கொண்டு நன்கு உருட்டிவிட்டால் புல் நன்றாக படியும்.புல் பாய் நடவு: குறுகிய காலத்தில் புல்தரைகளை அமைக்க குளக்கரைகள், ஆற்றோரங்களில் ஏற்கனவே வளர்ந்த புல் தரைகளை சதுரவடிவ பத்தைகளாக வெட்டி எடுத்து வந்து தேவையான இடத்தில் மரக்கட்டைப் பிடி கொண்டு அப்பத்தைகளை ஒரே சீராகவும் சமமாகவும் படியுமாறு தட்ட வேண்டும். பின் சற்று கனமான கல் உருளையைக் கொண்டு (ரோலர்) சுமார் 5 முதல் 6 நாட்களுக்கு ஒரு முறை, 2 முதல் 3 தடவைகள் உருட்டிவிட வேண்டும்.நடவு: இந்த முறையில் புல்லின் வேர்களை 5 செ.மீ. நீளமுள்ளதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். நறுக்கிய வேர்களை ஒரு பங்கு மாட்டுச்சாணி கொண்ட கலவையில் கலந்து அதைத் தயார்செய்த நிலத்தில் பரப்பி அதன் மேல் வைக்கோல் கொண்டு மூடவேண்டும். பின்னர் பூ வாளியைக் கொண்டுதண்ணீர் தெளிக்க வேண்டும். அதன்பின் 2 நாட்களுக்கு ஒரு முறை நீர் தெளிக்க வேண்டும். அதன்பின் 3 நாட்களக்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும். புற்கள் 15 நாட்களுக்குள் துளிர்விட்டு வளர ஆரம்பிக்கும்.கரணை அல்லது கிழங்கு ஊன்றுதல்: அருகம்புல்லின் கிழங்குகளை 5 செ.மீ. இடைவெளி கொடுத்து நாற்று நடுவதுபோல் சமப்படுத்தப்பட்ட, எரு இட்ட நிலத்தில் நடவேண்டும். 15 நாட்களுக்குள் புல் துளிர்விட்டு வளர ஆரம்பிக்கும்.பராமரிப்பு: உருளை கொண்டு உருட்டுதல்-இதனால் மேடு பள்ளங்கள் சமமாக்கப்படும். தக்க ஈரப் பதம் உள்ளபொழுது உருளையைக் கொண்டு உருட்டவேண்டும். நிலம் மிகவும் ஈரமாகவோ, காய்ந்தோ இருக்கும்போது உருட்டுதல் கூடாது.வெட்டும் கருவி கொண்டு வெட்டுதல்: வளரும் புல்லை பூக்கவிடாமல் வெட்டிவிடுவது அவசியம். புல் தரைக் கருவியோ அல்லது வீச்சுக் கத்தி கொண்டோ 15 நாட்களுக்கு ஒரு முறை வெட்டிவிட வேண்டும்.உரமிடுதல்: வருடம் இருமுறை சதுரமீட்டருக்கு ஒரு கிலோ மாட்டு எரு, 30 கிராம் அம்மோனியம் சல்பேட், 16 கிராம் சூப்பர் பாஸ்பேட், 16 கிராம் மியூரியேட் ஆப் பொட்டாஷ் இடவேண்டும். உரமிட்டபிறகு நன்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.களைக்கட்டுப்பாடு: புல் தரையில் கோரை வகை களைகள் அதிகம் வளர்ந்து காணப்படும். இவற்றை கூர்மையான ஊசிகொண்டு கிழங்கு களைக் குத்தி அகற்றிவிடுவதன் மூலமும் அன்சார் என்ற களைக் கொல்லியை லிட்டருக்கு 3 மிலி என்ற அளவில் நீரில் கரைத்து தெளிப்பதன் மூலமும் கட்டுப் படுத்தலாம். அகன்ற இலைக் களைகளைக் கட்டுப்படுத்த 2, 4-டி என்ற களைக்கொல்லியை ஏக்கருக்கு 4 கிலோ என்ற அளவில் பயன்படுத்த வேண்டும். (தகவல்: முனைவர் பா.கண்ணன், மு.ஜவஹர்லால், ப.ரஞ்சனி, மலரியல் துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003. போன்: 0422-661 1230)-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !