வடிப்பாலை வடிநீரில் தீவனப்பயிர் வளர்ப்பு:
இந்தியாவில் சுமார் 319 தொழிற்சாலைகள் 3.3 மில்லியன் லிட்டர் எரிசாராயத்தை தயாரிப்பதற்கு 40 மில்லியன் லிட்டர் கழிவுநீரை ஒரு வருடத்திற்கு வெளியேற்றுகின்றன. தமிழகத்தில் 19 தொழிற்சாலைகள் கரும்பு அதிகமாக விளையும் இடங்களில் அமைந்துள்ளன. இவை குறைந்தது 12 மில்லியன் லிட்டர் கழிவுநீரை ஒரு வருடத்திற்கு வெளியேற்றுகின்றன. மக்களின் மனதில் இக்கழிவு நீரைப்பற்றி தவறான கருத்து நிலவுகின்றது. இக்கழிவு நீரில் உப்புக்கள், உயிர் பிராணவாயு பற்றாக்குறை, வேதி பிராணவாயு பற்றாக்குறை, அதிக அளவில் உள்ளதால் இதை மண்ணில் இடும்போது மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் பாதிக்கப்பட்டு மண்ணின் தரம் குறைந்துவிடுகிறது. எனவே இதனை சாண எரிவாயு உற்பத்திக்கு உட்படுத்தி, உயிர், வேதி பிராணவாயு பற்றாக்குறை அளவு குறைக்கப்படுவதுடன் பாசனத்திற்கு உகந்ததாக மாற்றப்படுகிறது. இதன்மூலம் வெளிவரும் கழிவுநீர் எரிசாராய வடிப்பாலை கழிவுநீர் என்று அழைக்கப்படுகிறது.
பயிர் சத்துக்கள்:
வடிநீரில் அதிக அளவு கரிமச்சத்து (13,110 மி.கி/லி), சாம்பல்சத்து (8,376மி.கி/லி), தழைச்சத்து (2,116 மி.கி/லி), சுண்ணாம்புச்சத்து (2,072மி.கி/லி), மெக்னீசியச்சத்து (1284மி.கி/லி), கந்தகச்சத்து(5,232 மி.கி/லி); நடுத்தர அளவில் மணிச்சத்து (52.8மி.கி/லி), குறைந்த அளவில் நுண்ணூட்டச் சத்துக்களும், தாவர வளர்ச்சி ஊக்கிகளான ஜிப்ரலினுரம், இண்டோல் அக்டிக் அமிலமும் இருக்கின்றன. மேலும் இவ்வாறு வெளிவரும் வடிநீரில் எவ்வித நச்சுத்தன்மையும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.வீணாக வெளியேற்றப்படும் வடிப்பாலை கழிவு நீரைப் பயிர்களுக்கு பயன்படுத்துவதன்மூலம் உரம், பாசனநீர் தட்டுப்பாட்டினை ஓரளவிற்கு குறைக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது.கம்பு நேப்பியர் தீவனப்பயிர் கோ.கே.என்.4 [CO(CN)4], கினியா தீவனப்பயிர் கோ(ஜி.ஜி)3 [CO(GG)3], மற்றும் பல தட்டு தீவனச்சோளம் கோ.(எப்.எஸ்.)29 [CO(FS)29], ஆகிய 3 தீவனப் பயிர்களில் வடிப்பாலை வடிநீர், உயிர் உரம், வடிப்பாலைச் சாம்பல் ஆகியவற்றைக் கொண்டு ஆராய்ச்சி (2009-2011) மேற்கொள்ளப்பட்டது.இவ்வாராய்ச்சி ஈரோடு மாவட்டம், சத்தியமங்கமலம் ஏலூரிலுள்ள பண்ணாரி அம்மன் எரிசாராய தொழிற்சாலையின் உயிர் உரம் தயாரிப்பு பிரிவில் அமைந்துள்ள ஆராய்ச்சி விரிவாக்கப் பண்ணையில் மேற்கொள்ளப்பட்டது. பயிர் நடுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக எக்டருக்கு 50,000 மற்றும் 37,500 லிட்டர் என்ற அளவில் வடிப்பாலை வடிநீர் நிலத்தில் தெளிக்கப்பட்டு பின்னர் அந்நிலத்தில் தீவனப்பயிர் கரணைகள் நடப்பட்டன. அந்நிலத்தில் பயிரின் விளைச்சல், நிலத்தடி நீரின் தரம், மண்ணின் தன்மை ஆராயப்பட்டன.
ஆராய்ச்சி முடிவுகள்:
மண்ணின் பவுதீகப் பண்புகளான நீர் கடத்தும் திறன், நீர் பிடிப்புத்திறன் ஆகியவை வடிநீரை தெளிப்பதன் மூலம் அதிகரித்து பேரூட்ட, நுண்ணூட்டச் சத்துக்கள் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்தது. ஒரு எக்டருக்கு 50,000 லிட்டர் வடிநீரை கம்பு நேப்பியர் தீவனப்பயிருக்கு பயன்படுத்தியபோது 422 டன் விளைச்சல் கிடைத்தது. அதேபோல் எக்டருக்கு 37,500 லிட்டர் அளவில் கினியாப்புல், பலதட்டு தீவனச் சோளத்திற்கு அளித்தபோது 416 டன், 176 டன் முறை விளைச்சல் கிடைத்துள்ளது. வடிநீரைப் பயன்படுத்தியதால் ஆக்ஸாலிக் அமிலம், ஹைட்ரஜன் சயனைடு என்ற நச்சுப் பொருள்களின் அளவு குறைவது கண்டறியப்பட்டுள்ளது. பயிர்களின் தரம், பயிர் வினையியல் பண்புகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் உருவானது கண்டறியப் பட்டுள்ளது. நிலத்தடி நீரின் கார அமிலத்தன்மை, உப்புச் சத்துக்களின் அளவு, நேர் அயனியின் அளவானது பரிந்துரைக்கப்பட்ட அளவிற்குள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கவனத்திற்கு:
வடிநீரை பரிந்துரைக்கப்பட்ட அளவில் மட்டும் தெளிக்க வேண்டும். இரண்டாண்டுக்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். (தகவல்: முனைவர் ப.லதா, பே.தங்கவேல், சிவகுமார், சுற்றுப்புற சூழ்நிலை இயல் துறை, த.வே.ப.கழகம், கோயம்புத்தூர்-641 003. 96264 23012)-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்