புழுதி விதைத்த இறவை நெல் சாகுபடி:
புழுதியில் விதைத்த இறவை நெல் என்பதை புழுதிவிதைத்த சேற்றுநெல் என்றும் கூறலாம். இவ்வகையான நெல் சாகுபடி காவிரி ஆற்றுப்பாசன பகுதிகளான நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பிரபலமாகி வருகிறது. இம்முறையில் ஆற்றில் நீர்வரத்து காலதாமதம் ஆகும் காலத்தில் அல்லது எதிர்பாராத மழை கிடைத்த தருணத்தில் அல்லது எதிர்பார்த்த மழை கிடைக்காத தருணத்தில் வயலை புழுதி வயலாக தயார் செய்து நெல்லை நேரடியாக விதைத்து பின்னர் நீர்வரத்து கிடைத்தஉடன் சேற்று நெல்லாக மாற்றி பராமரிப்பு செய்ய வேண்டும். இம்முறையில் சாகுபடி செய்ய சம்பா, பின்சம்பா பருவங்கள் மிகவும் ஏற்றவை. நீரின் அளவு குறைவாக உள்ள இடங்களிலும் இம்முறையில் சாகுபடி செய்யலாம்.வயல் தயார் செய்ய கோடை உழவு அவசியம். மண் இறுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ள இடங்களில் அடியுர மாக ஒரு டன் ஜிப்சம் இட்டு கடைசி உழவு செய்யப்பட வேண்டும். ஆகஸ்ட் மாதத்தில் மத்திய கால ரகங்கள், செப்டம்பர் கடைசி எனில் குறுகிய கால ரகங்களை தேர்வு செய்யலாம்.
மத்திய கால ரகங்கள்:
கோ(ஆர்)48 - 135 நாட்கள்; கோ (ஆர்) 49 - 135 நாட்கள், கோ (ஆர்) 50 - 135 நாட்கள்; ஏடிடீ39 - 125 நாட்கள்; ஏடிடீ(ஆர்)46 - 135 நாட்கள்;
குறுகிய கால ரகங்கள்:
ஏஎஸ்டி 16 - 115 நாட்கள்; கோ 47 - 120 நாட்கள்; ஏடிடீ 45 -110 நாட்கள்;இம்முறையில் விதைப்பு செய்ய ஒரு எக்டருக்கு 25 கிலோ விதை தேவைப்படும். நெல் விதைகளை 10 சதம் பொட்டாஷ் உரத்துடன் விதைநேர்த்தி செய்து விதையைக் கடினப்படுத்தி பின்னர் விதைப்பு செய்யலாம். விதைக்கருவி கொண்டு விதைப்பது சிறந்தது. இவ்வாறு விதைப்பதற்கு ஒரு அங்குல ஆழத்தில் விதைகள் விதைக்கப்படுகின்றன. மேல்மண்ணில் சற்று குறைந்த ஈரத்தன்மை இருப்பினும் ஏற்படும் வளர்ச்சியைத் தாங்கி வளர்கிறது. மேலும் தகுந்த பயிர் இடைவெளியும் பயிர் எண்ணிக்கையும் பராமரிக்கப் படுகிறது. இவ்வாறு விதைப்பு செய்வது பருவமழைக்கு முந்தையதாக இருக்க வேண்டும்.பின்செய் நேர்த்தியாக எக்டருக்கு 10 பாக்கெட் அசோஸ்பைரில்லம், 10 பாக்கெட் பாஸ்போ பாக்டீரியா (அ) 20 பாக்கெட் அசோபாஸ் ஆகியவற்றுடன் 25 கிலோ தொழு உரம், 25 கிலோ வயல்மண் கலந்து வயலில் முதல்மழை வந்தவுடன் தெளிக்க வேண்டும். பயிர்களைவதும் பாடு நிரப்புதலும் பயிர் முளைத்த 14 முதல் 21 நாட்களுக்குள் செய்வது சிறந்தது.குறுகியகால ரகங்களுக்கு 75:25:37.5 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துக்கள் கொண்ட உரங்களையும், மத்தியகால ரகங்களுக்கு ஒரு எக்டருக்கு 100:25:50 கிலோ அளவில் உரங்களை இடவேண்டும். குறுகியகால பயிருக்கு தழைச்சத்து 25 கிலோ, சாம்பல் சத்து 12.5 கிலோ 3 முறை பயிர் முளைத்த 25, 40-45, 60-65 நாட்களிலும், மத்திய கால பயிர்களுக்கு தழைச்சத்து 25 கிலோ, சாம்பல்சத்து 12.5 கிலோ 4 முறையும் இடவேண்டும். எங்கெல்லாம் இரும்புச் சத்து பற்றாக்குறை காணப்படுகிறதோ அங்கு விதைக்கும் முன்பு எக்டருக்கு 50 கிலோ இரும்பு சல்பேட் இடுதல் அவசியம்.முதல் கைக்களை பயிர் முளைத்த 15-21 நாட்களுக்குள்ளும், 2ம் கைக் களை 30-35 நாட்களுக்குள்ளும் எடுக்க வேண்டும். ஆள் பற்றாக்குறை உள்ள இடங்களில் களைக் கொல்லியைக் கொண்டு களைகளைக் கட்டுப் படுத்தலாம். அதற்கு பயிர் முளைத்த 10 நாட்களுக்குள் பெண்டிமெத்தலின் 10 கிலோ/ எக்டர் என்ற அளவும் மழை பெய்தவுடன் அளித்தும், பின்னர் 30-35 நாட்களில் ஒரு களை பறித்தும் களைகளைக் கட்டுப் படுத்தலாம். விதை முளைத்த 30-35 நாட்களில் நீர்வரத்து கிடைத்தவுடன் ஒவ்வொரு பாசனமும் 5 செ.மீ. அளவில் அளிக்கப்பட வேண்டும். நீர் மறைய நீர் கூடுதல் சிறந்தது. (தகவல்: முனைவர் செ.ராதா மணி, ப.ஜெயபிரகாஷ், ச.ராணி, நெல் இனவிருத்தி நிலையம், த.வே. பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003. போன்: 0422-247 4967)-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்