நவீன தொழில்நுட்பம்
பயறுவகைப் பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம்:* செடிகளின் இடைவெளிகளை அதிகரிப்பதன் மூலம் துவரையில் காய்ப்புழுவின் சேதத்தைக் குறைக்கலாம்.* விதைக்கும் காலத்தை மாற்றுவதன்மூலம் செப்டம்பர் முதல் நவம்பர் வரை பயிரிடப்படும் உளுந்தில் தண்டு ஈ குறைவாகக் காணப்படும்.* விதையளவை 25 சதவீதம் அதிகப்படுத்தி தண்டு ஈ தாக்கிய செடிகளைக் களைந்து எடுக்க வேண்டும்.* டிசம்பர் முதல் மார்ச் வரை விதைக்கப்படும் தட்டைப்பயிரில் அசுவினியின் சேதம் அதிகரிக்கும். அக்டோபரில் விதைக்கப்படும் அவரையில் காய்ப்புழுவின் சேதம் அதிகமாகக் காணப்படும். எனவே இப்பருவங்களில் விதைப்பதைத் தவிர்த்தல் நல்லது.* பயறுவகைப் பயிர்கள் சாகுபடி செய்யும் வயல்களில் இடையிடையேயும், ஓரங்களிலும் மக்காச்சோளம், சூரியகாந்தி, ஆமணக்கு போன்ற பயிர்களை வரிசையில் வளர்ப்பதால் காய்ப்புழுக்களையும், இலை தின்னும் புழுக்களையும் கட்டுக்குள் வைக்க முடியும்.* துவரையைத் தாக்கும் புள்ளி காய்ப்புழு, பச்சைக் காய்ப்புழு போன்றவற்றின் அந்துப்பூச்சிகள் இரவில் விளக்கு வெளிச்சத்திற்கு நன்கு கவரப்படக்கூடியவை. எனவே இரவில் 7 மணி முதல் 11 மணி வரை 5 ஏக்கருக்கு ஒரு விளக்கப்பொறி வீதம் வைத்து அந்துப்பூச்சியை அழிப்பதனால், ஏறக்குறைய 200 புழுக்களை அழித்த பயன் கிடைக்கும்.* இனக்கவர்ச்சிப் பொறி ஏக்கருக்கு ஐந்து என்ற வீதத்தில் பயிரின் வளர்ச்சிப்பருவத்தில் வைத்து, காய்ப்புழுக்கள் இலை தின்னும் புழுக்களின் தாய் அந்துப்பூச்சி நடமாட்டத்தைக் கண்காணிக்கலாம்.* இனக்கவர்ச்சிப்பொறி கண்காணிப்பின்படி தாய்ப்பூச்சிகள் அதிகம் காணப்படும் சமயங்களில் டிரைகோகிரம்மா முட்டை ஒட்டுண்ணி அட்டைகளை ஏக்கருக்கு 2.3 சிசி எண்ணிக்கையில் முட்டைப் பருவத்திலேயே கட்டுப்படுத்தலாம்.* தேயிலைப் புழுவின் நடமாட்டம் இரவில் அதிகமாக இருப்பதால் வளர்ந்த புழுக்களை நச்சுத்தீனி வைத்து கவர்ந்து அழிக்கலாம். நச்சுத்தீனி தயார் செய்வதற்கு ஒரு ஏக்கருக்கு அரிசித்தவிடு 5 கிலோ, நாட்டுச்சர்க்கரை 500கிராம், கார்பரில் 50 சதம் 500 கிராம், தண்ணீர் 3 லிட்டர் ஆகியன தேவை. தவிடு, சர்க்கரை, கார்பரில் மருந்து ஒன்றையும் தண்ணீரில் கலந்து கோலிக்குண்டு போல் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, மாலை வேளையில் வயலில் வைக்கலாம். வரப்பு போன்ற இடங்களில் வைக்க வேண்டும். இரவில் சர்க்கரை வாசத்தில் மண்ணுக்குள் இருக்கிற புழுக்கள் வெளியில் வந்து நச்சுத் தீனியைத் தின்று இறந்துபோய்விடும்.* இளம் புழுக்கள் தென்பட்டால் ஏக்கருக்கு 200 புழுக்கள் சமன் அளவில் என்.பி.வி. என்ற நச்சுயிரியினைத் தெளிக்கலாம். (அதாவது 600 நோயுற்ற புழுக்களை சேகரித்து கிடைக்கும் அளவு) மாலை வேளையில் தெளிப்பான்களைக் கொண்டு தெளிக்க வேண்டும்.* புற ஒட்டுண்ணி, கூட்டுப்புழு ஒட்டுண்ணிகளாகிய பிராக்கானிட், ஈசோபிட், ஒட்டுண்ணிகளை ஏக்கருக்கு 800 எண்கள் என்ற அளவில் 10-15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை இடலாம்.* பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் என்ற எதிர் உயிர் பாக்டீரியாவை ஏக்கருக்க 400 முதல் 600 கிராம் வரை நீரில் கலந்து தெளிக்கலாம்.* தண்டு ஈ, தண்டுப் பூ வண்டு போன்றவற்றை கட்டுப்படுத்த விதைகளுடன் வேப்ப எண்ணெயை கிலோவிற்கு 2.5 மில்லி கலந்து விதைக்கலாம். வேப்பம்புண்ணாக்கைப் பொடிசெய்து பயிரின் தூர்களில் இடலாம். இறவைப் பயிர்களில் அடியுரமாகவும் இடலாம்.* நோய்களைக் கட்டுப்படுத்த 5 சத வேப்பங்கொட்டைக் கரைசல் அல்லது வேலிக்கருவையின் இலைச்சாறு அல்லது நெய்வேலி காட்டாமணக்கு இலைச்சாறு தெளிக்கலாம்.* பூண்டுகள் (கைகளில் உறை அணிந்து) பச்சைக் காய்ப்புழுக்கள், காய்ப்புழுக்களின் வளர்ந்த புழுக்கள், பூச்சி தாக்கப்பட்ட பாகங்கள், நோய் தாக்கப்பட்ட செடிகள் ஆகியவற்றைப் பிடுங்கி அழிக்க வேண்டும்.* காய் துளைப்பானைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு கார்பரில் 10 சதத் தூள் (அ) மானோ குரோட்டோபாஸ் 1250 மில்லி (அ) வேப்பங்கொட்டைச்சாறு 5 சதம் (அ) எக்டருக்கு இண்டாக்ஸா கலவை-50 மில்லி (அ) குளோர்பைரிபாஸ் 1000 மிலி (அ) டைகுளோர்வாஸ்-500 மிலி என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம். (தகவல்: முனைவர் வெ.கோ.மதிராஜன், முனைவர் ரா.ராஜேந்திரன், தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம், ஆடுதுறை-612 101.-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.