நவீன தொழில்நுட்பம்
இசப்கல் - சாகுபடி நுட்பங்கள்: இசப்கல் மருத்துவப் பயிர்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் விதை, உமி மருந்துப்பொருளாக பயன்படுகின்றன. குஜராத், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் இசப்கல் பணப்பயிராக பயிரிடப்படுகிறது. இசப்கல் உற்பத்தி ஏற்றுமதியில் இந்தியா முதன்மையானதாக உள்ளது.இசப்கல் செடியின் அமைப்பு: இசப்கல் மெல்லிய தண்டுடையது. ஓராண்டு வளரக்கூடிய தாவர வகையைச் சேர்ந்தது. செடிகள் 30-40 செ.மீ. உயரம் வளரக்கூடியது. வயது 4-6 மாதங்கள். இலைகள் ஒன்றுவிட்டு ஒன்றாக அல்லது குவிந்து வெளிப்புறம் சற்று வளைந்து காணப்படும். பூக்கள் வெள்ளை நிறத்தில் சிறிய அளவில் நான்கு பாகங்களாகக் காணப்படும்.காலநிலை, மண்: இசப்கல் வளர்ச்சிக்கு குளிர்ச்சியான, அதே சமயம் குறைவான காற்று, ஈரப்பதம் உள்ள இடங்கள் ஏற்றது. நவம்பர் பருவம் சாகுபடிக்கு ஏற்றது. டிசம்பர் இறுதிவரை சாகுபடி செய்யலாம். மணற்பாங்கான நிலங்கள் ஏற்றவை. கார அமிலத்தன்மை 7 முதல் 8க்குள் இருத்தல் வேண்டும்.ரகங்கள்: குஜராத் இசப்கல் 1, 2, டிராம்பே செலக்ஷன் (1-10) இசி 124345 போன்ற ரகங்கள் வணிக ரீதியாக சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.சாகுபடி நுட்பங்கள்: ஒரு எக்டருக்கு 7 முதல் 8 கிலோ விதைகள் தேவைப்படும். அதிக விளைச்சலைப் பெறுவதற்கு விதைப்பதற்கு முன் 1 எக்டருக்கு 25 கிலோ தழைச்சத்தும், 25 கிலோ மணிச்சத்தும் அடியுரமாக இடவேண்டும். விதைத்த 30 நாட்களில் 25 கிலோ தழைச்சத்தை மேலுரமாக இடவேண்டும். 15 டன் தொழு உரத்தை நிலத்தில் இட்டு இரண்டு முறை நன்கு உழுது தண்ணீர் பாய்ச்ச ஏதுவாக மேட்டுப்பாத்திகளை அமைக்க வேண்டும். விதைத்தவுடனும் பிறகு ஒவ்வொரு வார இடைவெளியிலும் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். விதைகளை பாத்திகளில் 15 செ.மீ. நேர் வரிசையில் அக்டோபர் கடைசி அல்லது நவம்பர் முதல் வாரத்தில் விதைக்க வேண்டும். விதைகளை மண்ணுடன் கலந்து சன்னமாக கோடுகளில் விதைத்து மணலால் மூடவேண்டும்.பயிர் பாதுகாப்பு - வெள்ளைக் கூண்வண்டு தாக்கம் இருப்பின் 5 சதம் லிண்டேன் கலவையை கடைசி உழவின்போது தெளிக்க வேண்டும்.அடிச்சாம்பல்நோய் - தாக்குதலைக் கட்டுப்படுத்த கார்பன்டசிம் (பவிஸ்டின்) மருந்தை 0.1 சத அளவில் தெளிக்க வேண்டும்.சாம்பல் நோய்: 12 சதம் நனையும் கந்தகத்தை 15 நாள் இடைவெளியில் 2-3 முறை தெளிக்க வேண்டும்.வாடல் நோய்: கேப்டான் 5 கிராம்/கிலோ விதையுடன் விதைநேர்த்தி செய்யலாம்.அறுவடை: விதைத்த 60 நாட்களில் பூக்கள் தோன்றும். பூக்கள் தோன்றிய 2 வாரத்திற்கு பின் விதைகளை அறுவடை செய்யலாம். அடி இலை மஞ்சள் நிறமாக மாறும்போது பயிரை அறுவடை செய்ய வேண்டும். நல்ல சூரிய ஒளியிலும் பகல் வேளையிலும் தட்டியெடுத்தால் உலர்ந்த பூக்காம்பிலிருந்து விதைகளை எளிதாக பிரித்தெடுக்க முடியும். காலை நேரத்தில் செடியை வேரோடு பிடுங்கி எடுக்க வேண்டும். அறுவடை செய்த பயிரை ஓரிரு நாட்களில் குவியலாக வைத்து பின் நன்கு தட்டியெடுத்து தூற்றி விதைகளைப் பிரித்தெடுக்க வேண்டும். எக்டருக்கு 800 முதல் 1000 கிலோ வரை விதைகள் விளைச்சலாகக் கிடைக்கும். இதில் 30 சதவீதம் உமி காணப்படும். குஜராத் இசப்கல் -1, 2 ரகங்கள் அதிக விளைச்சல் தரக்கூடியவை.மருத்துவ பயன்கள்: இசப்கலின் விதை, உமி 60 வகையான பாரம்பரிய நவீன மருந்துகள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. விதைகள் இனிப்புத்தன்மை உடையதாகவும், குளிர்ச்சியைத் தரக்கூடியதாகவும் உள்ளன. புற்றுநோயைக் குணப்படுத்துவதிலும் ரத்தத்தில் கொழுப்பின் அளவை குறைக்கவும் பயன்படுகிறது. (தகவல்: கோ.சதீஷ், ஜே.சுரேஷ், வி.செந்தமிழ், தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், த.வே.பல்கலைக்கழகம், கொடைக்கானல்-624 103)-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.