உள்ளூர் செய்திகள்

நவீன தொழில்நுட்பம்

காசினிக்கீரை: உலகளவில் குளிர்ச்சியான மலைப்பிரதேசங்களில் அதிகம் பயிரிடப்படுகிறது. இதன் வளர்ச்சிக்கு குளிர்ச்சியான தட்பவெப்பநிலை மிக அவசியமாகும். கொடைக்கானல், ஏற்காடு, சேர்வராயன் மலைப்பகுதிகளில் அதிகளவில் பயிர் செய்யப்படுகிறது. நல்ல குளிர்ச்சியான தோப்பு பகுதிகளிலும் பயிர் செய்யலாம். காசினிக்கீரையின் தாவரவியல் பெயர் சிக்கோரியம் இன்டைபன் என்பதாகும். இது ஆஸ்டிரேசியே குடும்பத்தைச் சேர்ந்தது.சிக்கரி பொதுவாக காப்பியின் சுவையைக் கூட்டுவதற்கு அதிகளவு பயன்படுகிறது. கசாயமானது கருமையான கசப்பு சுவையோடு இருக்கும். இதனை உட்கொள்வதால் உணவுப் பாதைக்கு நன்மை பயக்கும். காசினியிலுள்ள பிரிபையாரிக் பொருட்களான?இனுவின், ஒலிகோ, பிரக்டோஸ் ஆகியவை இயற்கையான நார்ச்சத்துக்களாக கருதப்படுகின்றன. உணவு செரித்தலை அதிகரிக்கச் செய்கிறது. நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிரிகளை அழிக்கின்றது. தீங்கிழைக்கும் கொழுப்பு சக்தியை குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.பொதுவாக காசினி செடிகள் விதைகள் மூலம் பயிர் பெருக்கம் செய்யப்படுகின்றன. ஒரு எக்டருக்கு 3-5 கிலோ விதை தேவைப்படும். செடிகள் விதைத்த ஒரு வாரத்தில் முளைத்துவிடும். 15-20 நாள் வயதுடைய நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகின்றன. பார்கள் அமைத்து பக்கவாட்டில் நடவேண்டும். வரிசைக்கு வரிசை 38செ.மீ. இடைவெளியும் செடிக்குச் செடி 30 செ.மீ. இடைவெளியும் கொடுக்க வேண்டும்.அறுவடை: வேர்கள் நன்கு முதிர்ச்சி அடைந்த பின்பே அறுவடை செய்ய வேண்டும். பொதுவாக நடவு செய்த 123 நாட்களில் அறுவடை செய்யலாம். வேர்ப்பாகம் முதலில் நன்றாக கழுவப்பட்டு துண்டு துண்டுகளாக நறுக்கப்பட்டு 13 சதம் ஈரப்பதத்தில் உலர்த்தப்படுகிறது. காசினி வேர்ப்பாகத்தில் 72 சதம் நீரும், 25-28 சதம் நைட்ரஜன் அல்லாத திடப் பொருட்களும், 15 சதம் புரதமும், 0.38 சதம் கொழுப்பும், 1.4 சதம் லேஷ்லோஸ், 7.8 சதம் இன்சுலின் மற்றும் மிகக் குறைவான இண்டிவின் உள்ளது.சிக்கோன் அளவு அடர்த்தி வேரின் தரத்தைப் பொறுத்தே அமையும். அறுவடையைத் தொடர்ந்து வேர்களை 0.20 செல்சியஸ் வெப்பநிலை மற்றும் 95-98 சதவீதம் ஈரப்பதமுள்ள குளிர்சாதன அறைகளில் 2 வாரங்கள் வைத்திருக்க வேண்டும். அறுவடை செய்தபின் 2 வாரங்களுக்கு 1 செல்சியஸ் வெப்பநிலையில் சேமித்து வைக்க வேண்டும். இதன்மூலம் தரமான சிக்கோன்களைப் பெறலாம். (தகவல்: முனைவர் பொ.பாலசுப்பிரமணி, முனைவர் அ.ராமன், பா.பானுபிரியா, தோட்டக் கலைத்துறை, வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை-625 104. 94860 86267)வில்வம்பழம்: மருத்துவ குணமுள்ள இம்மரத்தின் இலைகள் சிவ வழிபாட்டில் முக்கியமானதாக திகழ்கின்றன. இம்மரத்தின் வேர், பட்டை, இலை, பூ, காய், பிஞ்சு, பழம் அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்ததாக உள்ளன.வில்வம் பழத்தின் சுவையும் வழுவழுப்பும் மற்ற பழங்களைப்போல் நேரடியாக உட்கொள்ள முடிவதில்லை. எனவே இலை, பழங்களைப் பயன்படுத்தி, பல மதிப்பூட்டிய பொருட்களைத் தயாரிக்கும் முறைகள் ஆய்வின் மூலம் கண்டறியப் பட்டு வருகின்றன.பழத்தைப் பயன்படுத்தி உடனடி உணவு வகைகளான 'கேன்டி', ஸ்குவாஷ், வில்வ பழ பார், மிட்டாய், ஜாம், முரபா, சிறு தானிய பார், சத்துமாவு, வில்வ பழ மிக்ஸ், நூடுல்ஸ், வில்வ இலையைப் பயன்படுத்தி கோதுமை ரொட்டி, மிக்ஸ், அரிசி ரொட்டி மிக்ஸ், பலதானிய ரொட்டி மிக்ஸ், வில்வ இலை சூப் மிக்ஸ் போன்ற உணவு வகைகளைத் தொழில் ரீதியாக செய்வதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.வில்வ இலை, பழத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட உணவுகள் நுகர்வோருக்கு ஏற்ற வகையில் குறிப்பாக எல்லா வயதினரும் விரும்பி உட்கொள்ளும் வகையில் தொழில் ரீதியாகச் செய்ய விரும்புபவர்களுக்கு மதுரை மனையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உணவு பதப்படுத்தும் மையத்தில் பயிற்சி அளிக்கப் படுகிறது. பயிற்சி பெற்ற நபர்கள் பதப்படுத்தும் மையத்தில் உள்ள கருவிகளைப் பயன்படுத்தி அதிக அளவில் உற்பத்தி செய்து விற்பனை செய்யலாம். தொடர்புக்கு: முனைவர் சி.பார்வதி, பேராசிரியர் மற்றும் தலைவர், மனையியல் விரிவாக்கத்துறை, மனையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை-625 104. போன்: 0452-242 4684, 94422 19710.-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !