உள்ளூர் செய்திகள்

நவீன தொழில்நுட்பம்

பயிறு உற்பத்தியை பெருக்க முக்கிய தொழில்நுட்பங்கள்: ரகம் தேர்வு: உளுந்து - வம்பன் 4, 5, 6, டி9, கோ5, ஏ.டி.டி.5, பாசிப்பயறு - வம்பன் 3, கோ.6, ஏ.டி.டி.3. துவரை - வம்பன் 2, 3, கோ.7, ஏ.பி.கே.1 ஆகிய மானாவாரிக்கு ஏற்ற ரகங்களைத் தேர்வு செய்தல் அவசியம்.விதையை கடினப்படுத்துதல்: உளுந்துக்கு ஒரு கிலோ விதைக்கு 500 கிராம் சாம்பலுடன் 3 சதம் பசையைக் கலந்து உலர வைப்பதன் மூலம் விதை நீண்டகாலம், மழையில்லாத காலங்களிலும் மண்ணில் நிலைத்து நிற்கும். பாசிப்பயறை மாங்கனீசு சல்பேட் 100 பி.பி.எம்.கொண்டு விதை கடினம் செய்ய வேண்டும். துவரையை துத்தநாக சல்பேட் 100 பிபிஎம் கொண்டு விதை கடினம் செய்ய வேண்டும்.விதைநேர்த்தி செய்வது அவசியம். சூடோமோனாஸ் 10 கிராம், டிரைகோடெர்மா விரிடி 4 கிராம், 1 கிலோ விதை என்ற அளவில் விதைநேர்த்தி செய்ய வேண்டும். ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா, ஒரு பாக்கெட் வீதம் வடிநீரில் கலந்து காற்றில் உலரவைத்து பின் விதைக்க வேண்டும்.ஒருங்கிணைந்த உர மேலாண்மை: அடியுரமாக தொழுஉரம், மக்கிய தென்னை நார்க்கழிவு, மண்புழு உரம் ஆகியவற்றில் ஒன்றை ஏக்கருக்கு 5-10 டன் என்ற அளவில் இடவேண்டும். ஏக்கருக்கு 5 கிலோ தழைச்சத்து, 25 கிலோ சாம்பல்சத்து அடியுரமாக இடவேண்டும். ஏக்கருக்கு 10 கிலோ மணிச்சத்தை 750 கிலோ தொழு உரத்துடன் கலந்து 30 முதல் 40 நாட்கள் வைத்திருந்து உரமேற்றப்பட்ட மணிச்சத்தை அடியுரமாக இடவேண்டும்.உயிர் உரமிடுதல்: ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா உயிர் உரத்தினை ஏக்கருக்கு 4 பாக்கெட் வீதம் அடியுரமாக இடுவதால் தழைச்சத்து, மணிச்சத்து பயறு வகைகளுக்கு சீராகக் கிடைக்கும்.நுண்ணூட்டச்சத்து - தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள நுண்ணூட்டக் கலவைய எக்டருக்கு 2 கிலோ வீதம் அடியுரமாக இடவேண்டும். இவ்வாறு இடுவதால் பயறுகளில் பூக்கும் திறனும் காய்பிடிப்பும் அதிகரிக்கிறது.இலைவழி உரம்: பூ உதிர்வதைக் குறைப்பதற்கும் அதிக காய் பிடிப்பதற்கும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டுள்ள 'பயறு ஒண்டர்' ஏக்கருக்கு 2.25 கிலோவை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து பூக்கும் தருணத்திலும் 15 நாட்கள் கழித்து மறுமுறையும் தெளிக்க வேண்டும். துவரையில் அதிக அளவு பூக்கள் உதிர்வதால் என்.ஏ.ஏ.40 பி.பி.எம்.கரைசலை பூக்கும் தருணத்திலும் 15 நாட்கள் கழித்தும் தெளிக்க வேண்டும்.ஒருங்கிணைந்த களை நிர்வாகம்: விதைத்த 3 நாட்களுக்கு பிறகு பெண்டிமெத்தின் 400 கிராம் களைக்கொல்லியை கையால் இயக்கப்படும் தெளிப்பானைக் கொண்டு தெளிக்க வேண்டும். பிறகு 25-30 நாட்களில் ஒரு களை பறிக்க வேண்டும்.ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு: காய்ப்புழு, பச்சைப்புழு, காய்த்துளைப்பான், அசுவினி ஆகியவை முக்கியமானவை. காய்ப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த என்.பி.வி.வைரஸ் நச்சுயிரியைப் பயன்படுத்தலாம். பொருளாதார சேதநிலை 10 சதவீதத்திற்கு அதிகமாக இருந்தால் காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்த புரோபனோபாஸ் 2 மிலி/ லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். வேப்பங் கொட்டைச்சாறு 5 சதம் அல்லது வேப்பெண்ணெய் 3 சதம் என்ற அளவிலும் தெளிக்கலாம்.வாடல் நோய்: விதைகளை டிரைகோடெர்மா விரிடி கொண்டு விதைநேர்த்தி செய்ய வேண்டும். செடியைச்சுற்றி கார்பெண்டாசிம் மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு 1 கிராம் என்ற அளவில் கலந்து ஊற்றலாம்.மஞ்சள் தேமல் நோய்: எதிர்ப்புத்திறன் கொண்ட வம்பன் 5, 6 ரகங்களைப் பயிரிடவும். மானோகுரோட்டோபாஸ் ஏக்கருக்கு 100 மிலி தெளிக்கவும். வேரழுகல் நோய், சாம்பல் நோய் ஆகியவற்றை சிபாரிசுப்படி கட்டுப்படுத்த வேண்டும். (தகவல்: முனைவர்கள் ப.கண்ணன், ப.பாலசுப்பிரமணியன், ப.அருணாசலம், மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், செட்டிநாடு. 99764 06231)-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !