ராமநாதபுரத்தில் நெல் அறுவடை துவங்கியது
இந்த வருடம் ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு சாகுபடியில் 70,000 ஏக்கரில் பலன் பெற்றுள்ளனர். இவர்கள் மழைக்கு முன்பே தங்கள் நிலங்களில் கீழ்க்கண்ட பணிகளை செய்திருந்தனர். இம்மாவட்டத் தில் மண்ணின் தன்மை மணல் சார்ந்த இளக்கமான மண் ஆகும். விவசாயிகள் டிராக்டர் மற்றும் டில்லர் கருவி கொண்டு நிலத்தை உழுது புழுதியாக்கி விடுகின்றனர். இந்த கோடை உழவில் கிடைத்த புழுதியை அப்படியே விட்டுவிடுகின்றனர். இது சமயம் அடிக்கும் வெயிலின் காரணத்தால் மூன்று பங்கு புழுதி ஒரு பங்காக சுண்டி விடுகின்றது. இதனால் மண்ணிலுள்ள ஊட்டச்சத்துக்கள் அதிகரித்துவிடுகின்றன. இந்தக் கட்டத்தில் நன்கு மக்கிய இயற்கை உரத்தோடு பத்து பொட்டலங்கள் அசோஸ்பைரில்லம் என்ற நுண்ணுயிர் உரத்தை பக்குவமாக கலந்து விவசாயிகள் நிலத்திற்கு இட்டனர். இதுதான் விவசாயிகள் பயிருக்கு இடும் அடி உரமாகும். விவசாயிகள் இதுசமயம் ரசாயன உரங்களை இடுவதில்லை. இப் பணிகளை இந்த வருடம் மழைக்கு முன்பாகவே விவசாயிகள் செய்துமுடித்துவிட்டு காத்துக்கொண்டு இருந்தனர். அதிர்ஷ்ட வசமாக விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த நெல் ரகங்களை (செல்லப்பொன்னி, ஆடுதுறை 45, அம்பை 16, ஜோதி, ஜே-13 (குச்சி நெல்) போன்றவைகளை மழை வந்தவுடன் நேர்த்தியாக நிலத்தில் விதைத்துவிட்டனர் ஏக்கருக்கு 30 கிலோ விதை உபயோகித்தனர். விதை விதைத்தவுடன் கலப்பை ஓட்டி விதையினை மண்ணினால் மூடிவிடுகின்றனர். விதைவிதைத்த 15ம் நாள் மேலுரமாக 25 கிலோ யூரியா, 15 கிலோ பொட்டாஷ் இடப்பட்டன. விதைத்த 20ம் நாள் ஒரு கைக்களை எடுக்கப்பட்டது. களை எடுத்தவுடன் மழை வந்தது. உடனே 10 கிலோ யூரியா, 10 கிலோ பொட்டாஷ் உரங்கள் இடப் பட்டன. பயிரினை பூச்சிகள் தாக்கவில்லை. ஆனால் பூஞ்சாள நோய் தாக்கியது. விவசாய இலாகா அதிகாரிகள் உதவியுடன் நோய் கட்டுப்படுத்தப்பட்டது. பயிர் பூத்து 25 முதல் 30 நாட்களில் அறுவடை கட்டத்தை நெருங்கியது. அப்போது கதிரின் அடிப்பாகத்திலுள்ள 4, 5 நெல்மணிகள் முதிர்ச்சியடைந்து இருந்தன. உடனே அறுவடை தொடங்கியது. விவசாயிகளுக்கு பயிரில் தேவையான நேரத்தில் மழை பெய்தது ஒரு வரப்பிரசாதமாக இருந்தது. இந்த வருட அறுவடையில் பயிரில் நன்கு பழுத்த நெல்?குலைகள் இருந்தன. விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்தது. ராமநாதபுரத்தில் பார்த்த இடங்களில் எல்லாம் நெல் அறுவடையே. அறுவடையில் ஏக்கரில் 30 மூடை மகசூல் வரை கிட்டியுள்ளது. மூடைக்கு ரூ.600 வரை விலை எதிர்பார்க்கப்படுகிறது. சாகுபடி செலவு ரூ.8,000 போக ரூ.10,000 லாபம் கிட்டுவது நிச்சயமாக உள்ளது. வைக்கோலும் கணிசமான அளவு கிடைத்துள்ளது.மற்ற மாவட்டங்களான மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி மற்றும் திண்டுக்கல் பகுதிகளில் பெரியாறு, வைகை பாசனம் மற்றும் கண்மாய், கிணற்றுப் பாசன பகுதிகளில் இன்னும் ஒரு மாதத்தில் நெல் அறுவடை எதிர்பார்க்கப்படுகிறது. நெல் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.-எஸ்.எஸ்.நாகராஜன்