உள்ளூர் செய்திகள்

மிளகு, கிராம்பு, தேக்கு, தென்னை, கொய்யா, கத்தரி - அத்தனையும் ஒரே நிலத்தில்

தேனி மாவட்டம் போடி நாயக்கனுார் ஸ்டேட் வங்கி துணை மேலாளர் முத்துவேல் பாண்டியன். விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். போடிநாயக்கனுார் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தந்தை செல்லையாவுக்கு 65 ஏக்கரில் மாந்தோட்டம் இருந்தது. மா மட்டுமே விவசாயம் செய்து வந்தார். ஊடு பயிர், பல வகை பயிர்களை பயிரிடவில்லை. விவசாயத்தில் அதிக ஈடுபாடு கொண்ட முத்துவேல் பாண்டியன் ஓய்வு நேரங்களில் விவசாயம் செய்தார். எனினும் இயற்கை முறையில் தோட்டத்தை முழுமையாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். இதற்காக வங்கி வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். மலை பிரதேசங்களில் மட்டுமே விளையும் மிளகு, பலா போன்ற மரப்பயிர் ரகங்களை சமவெளியில் முற்றிலும் இயற்கை முறையில் விளைவித்துள்ளார். அவரது தோட்டத்தில் தென்னை, தேக்கு, குமுல், பலா, நெல்லி, மிளகு, கிராம்பு, எலுமிச்சை போன்ற பலன் தரும் மரப் பயிர்கள், 'சிம்ரன்' ரக கத்திரிக்காய், வெண்டைக்காய், பச்சை மிளகாய், கீரைகள் உள்ளிட்ட காய்கறி பயிர்கள், மா, கொய்யா, 'ரெட்லேடி' ரக பப்பாளி, சப்போட்டா, அன்னாசி, ஆரஞ்சு போன்ற பழப்பயிர்கள், என அனைத்தையும் ஒரே இடத்தில் பயிரிட்டு நாள், வாரம், மாதம், ஆறு மாதம், ஓராண்டு, என காலத்திற்கு ஏற்ப வருவாய் ஈட்டி வருகிறார். அவர் கூறியதாவது: முன்பு மா தோட்டம் மட்டுமே இருந்தது. காட்டு மாடுகள், பன்றிகள் அதிகளவு தோட்டத்துக்குள் புகுந்து மரங்களை பாழ்படுத்தி வந்தன. ஆண்டுதோறும் மா சீசனில் மட்டுமே வருவாய் கிடைக்கும். மா பயிரில் ஊடுபயிர் பயிரிட தேவையான இடவசதி வேண்டும். எனவே, மரத்துக்கு மரம் 'கவாத்து' செய்தேன். இதனால் தேவையில்லாத கிளைகள் அகற்றப்பட்டன. மரத்துக்கு மரம் நன்கு இடைவெளி கிடைத்தது. பூமிக்குள் சூரிய ஒளி படும்படி செய்தேன். இரண்டு இடத்தில் ஆழ்துளை கிணறு அமைத்தேன். 300 முதல் 350 அடியில் தண்ணீர் கிடைத்தது. தோட்டத்துக்கு தேவையான தண்ணீர் கிடைக்கிறது. தண்ணீர் தேவை பூர்த்தியாகி விட்டது. இட வசதியும் கிடைத்து விட்டது. அடுத்தது முழுமையான இயற்கை முறையிலான தோட்டமாக மாற்ற வேண்டும் என்பதே எனது கனவு.இதற்காக தினமும் 20 லிட்டர் கோமியம் வாங்குகிறேன். கோமியம், பால் தேவைக்காக ஐந்து பசு மாடுகளை தற்போது வளர்க்கிறேன். அதில் இருந்து 'பஞ்சகவ்யா' இயற்கை முறையிலான 'பூச்சி விரட்டி' மருந்து தயாரித்தேன். மக்க வைத்த கால்நடை கழிவுகள் மற்றும் மண்ணை பொன்னாக மாற்றும் கொழிஞ்சி மற்றும் தக்கைப்பூண்டுக்கு இணையான தலைச்சத்து, நுண்ணுாட்ட சத்து மிக்க 'கிளாரிட்டி' ரகத்தை சேர்ந்த செடிகளை வேலியாக அமைத்தேன். இவை கால்நடை தீவனமாகவும் பயன்படும். கீழே விழும் சரகுகள் பூமிக்கு இயற்கை உரமாக பயன்படும்.கேரள முட்ட வரிக்கா, பாலுரு 1,2, பார்லியர் 1,2 போன்ற பலா ரகங்கள், கேரள தென்னை வாரியத்தில் தென்னை மரக்கன்றுகள் வாங்கினேன். இரண்டரை ஆண்டில் கை மேல் பலன் கிடைத்து வருகிறது. இந்தாண்டு விளையும் பழங்கள், பயிர்களின் சாம்பிள்களை கோவை வேளாண் பல்கலைக்கு அனுப்பி 'இயற்கை வேளாண் பொருள் உற்பத்தி' சான்று பெற்று உள்ளூர், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவுள்ளேன். ரசாயன பூச்சிக்கொல்லி மருந்து, ரசாயன உரங்களை பயன்படுத்தியதால் மண் மலட்டுத் தன்மையாகி விட்டது. தற்போது மா விரைவில் பூக்க வேண்டும், என்பதற்காக தரையை சுத்தம் செய்யும் கெமிக்கலை மா வேரில் ஊற்றுகின்றனர். இதனால் விரைவாக பூத்து, காய்த்து விடுகிறது. இப்படி விளைவிக்கப்படும் மாம்பழத்தை உண்ணுவதால் அசல் ருசி இருக்காது. மேலும் ஒவ்வாமை, தொற்று நோய்கள் ஏற்படும். விவசாயத்தில் அவசரம் காட்டக்கூடாது. இயற்கை முறையில் விவசாயம் செய்தால் மீண்டும் பொன் விளையும் பூமியை பெறலாம். இதற்காக விவசாயிகள் ஒருங்கிணைய வேண்டும், என்றார். தொடர்புக்கு 93677 99887.- கா.சுப்பிரமணியன், மதுரை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !