உள்ளூர் செய்திகள்

மானாவாரியில் மாற்றுப்பயிர் சாகுபடி - அனுபவ விவசாயி

எங்களது நிலம் அருப்புக்கோட்டை அருகே நாகலாபுரம் அருகில் சின்னலநாயக்கன்பட்டி கிராமம். இப்பகுதி பெரும்பாலும் வானம் பார்த்த பூமி நிலமாகத்தான் உள்ளது. எனது தந்தை சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பே மாற்று விவசாயம் செய்ய எண்ணி அப்பகுதியில் முதன் முதலில் மக்காச்சோளத்தை பயிர் செய்து அதில் அமோக விளைச்சல் கண்டார். எனது தந்தை காலமான பின் நான் சிறிது காலம் தோட்டத்தை கட்டு குத்தகைக்கு விட்டேன். அவர்கள் நிலத்தை பராமரிப்பு சரியாக செய்யாததால் நானே விவசாயத்தை நடத்த முன் வந்தேன்.முதலில் விவசாயத் துறையில் மானியத்தில் சொட்டுநீர்ப்பாசனம் அமைத்து அதில் மிளகாய் சாகுபடி செய்தேன். அதில் வேலை ஆட்கள் பற்றாக்குறையும், மழை இல்லாததாலும், தண்ணீர் பற்றாக்குறையினாலும் மிகுந்த நஷ்டம் அடைந்தேன். மாற்று விவசாயம் என்ன செய்யலாம் என்று எண்ணி இருந்த போது தினமலர் விவசாயப் பகுதியில் சிவகாசியைச் சேர்ந்த விவசாயி கரிசல் மண்ணில் சவுக்கு மரம் சாகுபடி செய்து சாதனை செய்ததை படித்தேன். பிறகு நேரில் சென்று அவரிடம் விளக்கம் கேட்டு நானும் எனது தோட்டத்தில் சுமார் 13 ஏக்கரில் 40,000 சவுக்கு மரக்கன்றுகளை நடவு செய்தேன். 1 1/2 ஏக்கரில் 600 தேக்கு மரக்கன்றுகளையும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் நடவு செய்தேன்.இடையிடையே உள்ள காலி இடங்களில் 20 மலைவேம்பும், 30 நாட்டு வேம்பும், 10 மகா கனியும், 10 குமிழ் தேக்கும் நடவு செய்துள்ளேன். இப்போது தேக்கு மரமும், சவுக்கு மரமும் சுமார் முப்படி அடி உயரம் வளர்ந்து உள்ளது. 8X8 தேக்கு மரம் இடையே இரண்டு மாதத்திற்கு முன் மரவள்ளி கிழங்கு குச்சிகளை சுமார் 1500 குச்சிகளை நடவு செய்து உள்ளேன். மழை கடந்த மூன்று வருடமாக பொய்த்து விட்டதால் எனக்கு சொட்டுநீர் பாசனம் நன்கு கை கொடுத்து உதவுகிறது.மழை நன்றாக பெய்து இருந்தால் நான் இப்பொழுது சவுக்கு மரத்தை அறுவடை செய்து இருப்பேன். மழை இல்லாததால் இன்னும் ஒரு வருடம் கழித்து தான் அறுவடை செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனக்கு இன்னும் ஒரு வருடம் கழித்து சவுக்கு மரம் நல்ல லாபத்தை கொடுக்கும் என்று நம்புகிறேன்.ஆகவே விவசாயிகள் மாற்று விவசாயமாகிய மரபயிர் விவசாயம் செய்தால் வேலை ஆட்கள் பிரச்னை இல்லை. பராமரிப்பு செலவும் குறைவு. வறட்சி பகுதியில் மரசாகுபடி செய்து விவசாயிகள் அதிக லாபம் பெறலாம்.- ஆர்.வெங்கடேஷ்,94882 46447


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !