உள்ளூர் செய்திகள்

குறைந்த உழவில் நிறைந்த விளைச்சல்

சமீபகாலமாக விவசாயிகள்இடையே மிகவும் வேகமாக பரவிவரும் நியதி குறைந்த உழவு அல்லது பாதுகாப்பு உழவு. குறைந்த உழவின் அடிப்படை உழவைக் குறைப்பதன் மூலம் மண்ணின் கலவையை அதிக அளவு மாற்றாமல், அறுவடைக்கு பிறகு மிஞ்சிய, முந்தைய பயிரின் எச்சத்தை அப்படியே விட்டு (30 சதம் வரை) அதில் புது பயிரை வளர்க்க முனைவது எனலாம். சில நேரங்களில் இந்த குறைந்த உழவு என்பதற்கு பதில் உழவே இல்லாமலேயே பயிரை வளர்க்கக்கூட முடியும்.குறைந்த உழவு செய்யும் முறை: முந்தைய பயிரை அறுவடை செய்தபின் ஒன்று அல்லது இரண்டு முறை டிராக்டர் வைத்து உழவேண்டும். அதற்கு பின் ஐந்து நாள் இடைவெளியில் உடனடியாக இரு முறை வயலுக்கு நீர் பாய்ச்ச வேண்டும். இது களை செடிகளை முளைக்க தூண்டும். களை செடிகள் முளைத்தவுடன் (2-3 இலை விட்டபின்) கிளைபோசேட்டை 1 லிட்டர் தண்ணீரில் 15 மில்லிலிட்டர் என கரைத்து நாப்சாக் ஸ்பிரேயரில் பிளட் ஜெட் நாசில் கொண்டு செடிகளுக்கு மேல் நன்றாக விரவி தெளிக்க வேண்டும். கிளைபோசேட் தெளித்த 48 மணி நேரத்திற்கு பிறகு வயலில் 5 நாட்களுக்கு நீர் தேக்கி வைக்க வேண்டும். இது மண்ணை மென்மைப்படுத்தும். வயலை சமப்படுத்தியபின் நெல் நாற்றை வயலில் நடலாம். களையை முளைக்கும் முன் கட்டுப் படுத்தும் களைக்கொல்லியைநடவு நட்ட 3 நாட்களுக்குப் பின் தெளிக்க வேண்டும். களைக் கொல்லியை தெளிக்கும்போது மண் முழுவதும் மூடி இருக்கும்படி மெல்லிய இழை அளவிற்கு தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும். பொதுவாக விவசாயிகள் 4 முதல் 5 முறை நடவு நடும் முன் வயலை நன்றாக உழுவார்கள். ஒரு உழுதலுக்கு 750 முதல் 900 ரூபாய் வரை ஆகும். குறைந்த அளவிலான உழவு மூலம் இதைக் குறைக்கலாம்.இந்த முறையால் ஏற்படும் நன்மைகள்:1. செடியின் வேருக்கு நன்கு பிடிப்பு கிடைக்கிறது.2. நடவு நட்ட வயலில் உயிர் பிழைக்கும் நாற்றுகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.3. நிலத்தில் போடும் உரம் பயி ருக்கு அதிக அளவு கிடைக்கிறது. ஆழ உழுதால் உரம் மண்ணில் மிக அதிக அளவு ஆழ செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே உரம் வீணாக வாய்ப்பு உள்ளது. ஆனால் இம்முறை உழவால் பயிரின் வேர் பகுதியிலேயே உரம் தங்கிவிடும்.4. உழவிற்கு செலவிடும் பணம் கணிசமாக (1750-2750/ஏக்கர்) சேமிக்கப்படுகிறது.5. மண்ணின் அங்கக சத்து அதிக அளவு காக்கப்படுகிறது.6. விளைச்சல் 350-425 கிலோ/ஏக்கர் அதிகரிக்கிறது.7. பூட்டாக்குளோர் மற்றும் கிளைபோசேட் போன்ற களைக் கொல்லிகள் மண்ணில் தங்குவது இல்லை என்று ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.-எம்.அகமது கபீர், தாராபுரம், 93607 48542.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !