குட்டை ரகத்தில் கொத்தவரை
தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ் மதுரை வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் கொத்தவரையில் எம்.டி.யு. 2 என்ற புதிய ரகம் வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து கல்லுாரியின் தோட்டக்கலைத் துறைத்தலைவர் ஆனந்தன், அருப்புக்கோட்டை வறண்ட நில பழப்பயிர்களுக்கான மண்டல ஆராய்ச்சி நிலைய இணைப்பேராசிரியர் பாலசுப்ரமணியன் கூறியதாவது:தமிழ்நாடு வேளாண் பல்கலையில் 2015 வரை கொத்தவரைக்கு புதிய ரகம் வெளியிடவில்லை. முதன்முறையாக 2015 ல் எம்.டி.யு., 1 ரகம் வெளியிடப்பட்டது. கொத்தவரையை பொறுத்தவரை இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் (ஐ.சி.ஏ.ஆர்.,) வெளியிட்ட ரகத்தை தான் விவசாயிகள் அதிகம் பயிரிட்டு வந்தனர். மதுரை வேளாண் கல்லுாரி தோட்டக்கலை துறை மூலம் 2015 ல் எம்.டி.யு. முதல் ரகம் வெளியிடப்பட்டது. ஐ.சி.ஏ.ஆர்., டில்லியில் இருந்து வெளியிட்ட 'பூசா நவ்பகர்' ரகத்தை விட மதுரை ரகத்தில் 17 முதல் 20 சதவீத மகசூல் கூடுதலாக கிடைத்தது. நீண்ட பச்சை நிற காய்களுடன் அதிக நார்ச்சத்து உள்ளது கூடுதல் சிறப்பு. எம்.டி.யு. 1 ரகம் அதிகளவில் விவசாயிகளால் பயிரிடப்பட்டதால் மத்திய அரசின் அங்கீகாரத்துடன் மத்திய அரசு ரகமாக மாற்றப்பட்டது. எம்.டி.யு. 1 ரகம் 120 நாள் வயதுடையது. ராஜஸ்தானில் இருந்து பெறப்பட்ட ரகத்தில் இருந்து எம்.டி.யு. 1 ரகம் உருவாக்கப்பட்டதால் செடி மிக உயரமாக (ஆறடி உயரம்) வளர்ந்து அதை தாங்கிப்பிடிக்க முட்டுகட்டை கொடுக்க வேண்டியிருந்தது.இதன் தொடர்ச்சியாக எம்.டி.யு.2 ரகத்தை உருவாக்க நினைத்தோம். உயரத்தையும் வயதையும் குறைக்கும் முயற்சியில் கதிரியக்கம் மூலம் மரபணுவில் மாற்றம் செய்தோம். அதிலிருந்து கிடைத்த ரகங்களை தொடர்ச்சியாக பயிரிட்டு ஆய்வு செய்து சிறந்த ரகத்தை மட்டும் தேர்வு செய்தோம். ஆறு முறை பயிரிட்டு சீரான ரகத்தை உருவாக்கினோம். இந்த விதைகளை காமா கதிரியக்கம் மூலம் மாற்றினோம். இப்படியாக நெட்டை ரகம் குட்டை ரகமாகவும் 120 நாள் ரகம் 75 நாள் வயதாகவும் குறைக்கப்பட்டு எம்.டி.யு. 2 ரகத்தை 2023 ல் உருவாக்கினோம்.இந்த ரகத்தில் ஒரு எக்டேருக்கு 16 டன் கிடைக்கும். ஒருநாள் உற்பத்தி திறன் 194 கிலோ, அதாவது தினமும் 194 கிலோ காய்களை அறுவடை செய்ய முடியும். தக்கைப்பூண்டு, கொளிஞ்சி போன்ற பசுந்தாள் உரச்செடிகள் வேர்முடிச்சுகளுடன் காணப்படுவதால் நைட்ரஜனை மண்ணில் நிலைநிறுத்தும் தன்மையுடையவை. கொத்தவரை செடியை பொறுத்தவரை மண்ணின் வளத்தையும் காக்கும், காய்களாகவும் அறுவடை செய்யலாம். விவசாயிகளுக்கு இரட்டை லாபம் கிடைக்கும் என்பதால் இந்த ரகத்தை வெளியிடும் போது வேளாண் துறை கமிஷனர் அபூர்வா இதை வரப்பு பயிராக பயிரிட பரிந்துரை செய்தார்.அதிகளவு விளைச்சல் கிடைக்கிறது என்பதால் விவசாயிகள் மட்டுமின்றி மாடித்தோட்டம், வீட்டுத்தோட்டத்திற்கும் இந்த ரகம் ஏற்றது. எம்.டி.யு., 2 ரகம் விதைத்த 25 வது நாளில் பூக்க ஆரம்பித்து 48 வது நாளில் முதல் அறுவடைக்கு தயாராகும். தினமும் அறுவடை செய்யும் போது 75 நாளில் காய்ப்பு முடிந்து விடும். இது எல்லா மண்ணுக்கும் ஏற்றது. மிகக்குறைந்த தண்ணீர் போதும் என்பதால் மானாவாரி சாகுபடிக்கும் ஏற்றது. இதை ஊடுபயிராக சாகுபடி செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும். இந்த விதைகள் மதுரை வேளாண் கல்லுாரி தோட்டக்கலைத்துறையில் விற்பனைக்கு உள்ளது.- எம்.எம்.ஜெயலெட்சுமி, மதுரை