அரிவாள்மனை பூண்டு
அரிவாள்மனை பூண்டு சிடாஅக்யூட்டா என்ற தாவரவியல் பெயரில் மால்வேசி குடும்பத்தில் காணப்படும் மூலிகையாகும். இந்தியா மற்றும் இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் கிடைக்கின்ற ஒரு களையாகும். இது சாலை ஓரங்களில் தென்னை தோப்புகளில் அதிகம் காணப்படும். 30செ.மீ. வரை வளரக் கூடியது. இத்தாவரத்திற்கான பருவம் அக்டோபர், நவம்பர் என்றாலும் ஆண்டு முழுவதும் கிடைக்கும்.இதனுடைய இலைகள் கூர்மையாகவும், பற்போன்ற இலை அமைப்புடையது. இது வியாபார ரீதியாக பாலா என்று அழைக்கப்படுகிறது. அதிக கசப்புத்தன்மை கொண்டுள்ளதால் வயிற்றுப் போக்குக்கு முக்கிய மருந்தாகும். மேலும் நரம்பு மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கும், சிறுநீரக குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற ரத்தபோக்கு போன்றவற்றுக்கும் பயன்படுகிறது.பயன்படும் பகுதிகள்: இலை, தண்டுகள் இந்தியா மற்றும் ஆப்ரிக்காவின் பாரம்பரிய மருத்துவத்தில் இம்மூலிகை முக்கிய பங்காற்றுகிறது. நைஜீரியாவின் பாரம்பரிய வைத்தியத்தில் மலேரியா, கருக்கலைதல் முதலியவற்றுக்கு நிவாரணியாக பயன்படுத்துகின்றனர்.சந்தை நிலவரம்: அரிவாள்மனை பூண்டு பாலா என்ற வியாபாரப் பெயரால் அழைக்கப்படுகிறது. இது தமிழகம் மற்றும் ஆந்திராவில் மூலிகை சேகரிப்போரால் தரிசு நிலங்களிலும், விவசாய நிலங்களிலிருந்தும் சேகரிக்கப்பட்டு காய வைத்து மூலிகை வியாபாரிகளிடம் விற்பனை செய்யப்படுகிறது.தமிழகத்தில் மதுரை, விருதுநகர், திண்டுக்கல், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்திலும், ஆந்திராவில் அனந்தப்பூர் மாவட்டத்திலும் அதிக அளவில் சேகரிக்கப்படுகிறது.இந்தியாவில் கால்நடை மருந்துகள் மற்றும் மனித மருந்துகள் தயாரிக்கும் மூலிகை கம்பெனிகள் நிறைய அளவில் கொள்முதல் செய்கின்றன. விவசாயிகள் இதன் பலனை அறியாத காரணத்தால் இதனை களை நிர்வாகம் செய்ய அதிக அளவில் செலவு செய்கின்றன. இதனுடைய காய்ந்த முழு தாவரமானது ஒரு டன் ரூ.8,000 முதலும், இலைகள் மட்டும் கிலோ ரூ.50 வரையும் கொள்முதல் செய்யப்படுகிறது.அறுவடை: அக்டோபர், நவம்பர் மாதங்களில் இத்தாவரம் இலைகள் நிறைந்து காணப்படும் இச்சமயத்தில் வேர் பாகம் தவிர்த்த மேல் பகுதியை அறுவடை செய்து தார்பாலின் கொண்டு காய வைக்க வேண்டும். விரைவாக காய துண்டாக வெட்டி காய வைக்கலாம். 3 நாள்கள் காய்ந்த பின் விற்பனைக்கு அனுப்பலாம். இதனுடைய உற்பத்தி விதைகள் மூலமே நடைபெறுகிறது.காய்ந்த மூலிகையில் ஈரப்பதம் 8%க்கு மிகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். காய வைக்கும் முன் அதனுடன் கலந்துள்ள வேறு தாவரங்களை நீக்கி விடவேண்டும். சரியான பருவத்தில் அறுவடை செய்தால் மருந்துப் பொருளின் அளவு கணிசமாக காணப்படும். இலைகள் அதிகள் இருப்பது நல்லது. சந்தைக்கான தேவைகளின் அடிப்படையில் அறுவடை செய்வது நல்லது.குறிப்பு : அரிவாள்மனை பூண்டு சார்ந்துள்ள மால்வேஸி குடும்பத்தில் காணப்படும் சிடா கார்டிபோலியா என்ற தாவரமும் கம்பெனிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. இது குறுந்தொட்டி என்று அழைக்கப்படுகிறது. இது மஞ்சள் நிறப் பூக்களுடன் சிறிய இலைகளைக் கொண்டு காணப்படும். இந்த இரண்டு தாவரங்களுக்கான வேறுபாட்டை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.கணபதிசாமி, திருமங்கலம்-625 706. செல் : 88700 12396.