உள்ளூர் செய்திகள்

பட்டுப்புழு வளர்ப்பு கழிவை உரமாக்கலாம்

பட்டுப்புழு வளர்ப்பு பண்ணைகளில், வளர்ப்பு படுக்கைகளில் மீதியாகும் மல்பெரி இலைகள், இதர கழிவுகள், பட்டுப்பூச்சியின் கழிவுகளை தொழில் நுட்பத்தை பின்பற்றி உரமாக மாற்றலாம். ஒரு ஏக்கருக்கு பண்ணை கழிவுகளை சேகரிக்க இரண்டு குழிகள் போதும். பட்டுப்புழு கழிவு, படுக்கையில் மீதியாகும் இலைகள், களைகள் இவற்றை ஒவ்வொரு நாளும் ஒரு மெல்லிய படுகையாக சேகரிக்க வேண்டும். அதன் மீது புது மாட்டு சாணம், சாம்பல், நீர் தெளிக்க வேண்டும். பட்டுப்புழு வளர்ப்பு முடிவில், தோட்டத்தில் மீதியாகும் இலைகள், இளம் மல்பெரி கிளைகள் இவற்றையும் உர குழியில் சேர்க்க வேண்டும். ஒரு எக்டேரிலிருந்து பட்டுப்புழு வளர்ப்பு கழிவாக 12 -- -15 டன் மல்பெரி உருவாக்கப்படும். இதில் 280 முதல் 300 கிலோ நைட்ரஜன், 90 கிலோ பாஸ்பரஸ், 750 கிலோ பொட்டாசியம் உள்ளது. சூப்பர் பாஸ்பேட்டும் உரத்தை வளப்படுத்துவதற்காக சோக்கப்படுகிறது. குழி நிறைந்து தரைமட்டத்திலிருந்து 30 முதல் 40 செ.மீ உயரம் வரும்போது மாட்டு சாணம் மற்றும் மண்ணை 2.5 செ.மீ அளவிற்கு ஒரு அடுக்காக உருவாக்க வேண்டும். குழியை நேரடி சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்க வேண்டும். உரத்தை மட்க செய்வதற்கு அஸ்பார்ஜில்லஸ் எஸ்பி, டிரைக்கோடெர்மா எஸ்பி, மற்றும் பேலோரோமைசிஸ் என்ற பூஞ்சாண கொல்லி கலவையை ஒரு டன்னுக்கு ஒரு கிலோ என்ற அளவில் பட்டுப்புழு வளர்ப்பு பண்ணை இயற்கை கழிவுடன் சேர்க்க வேண்டும். காற்று மற்றும் காற்றில்லா முறையில் ஒரு எக்டேர் பட்டுப்புழு வளர்ப்பு பண்ணையிலிருந்து 10 முதல் 15 டன் மட்கிய ஊட்டச்சத்து நிறைந்த உரத்தை ஆண்டுதோறும் உருவாக்கலாம். பண்ணை எருவுடன் ஒப்பிடும் போது இதில் அதிக சத்துகள் உள்ளன. கூடுதல் விவரங்களுக்கு கோவை வேளாண் பல்கலையின் அக்ரிடெக் போர்ட்டலை (TNAU Agritech Portal) அணுகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !