உள்ளூர் செய்திகள்

சின்ன சின்ன செய்திகள்

முறையான பால் கறக்கும் முறைகள் : பொதுவாக கறவை மாடுகளில் பால் கறப்பதற்கு அனைத்து விரல்களையும் பயன்படுத்தி பால் கறத்தல், கட்டை விரலினை உட்புறமாக மடக்கி கறத்தல், கட்டை விரல், ஆள்காட்டி விரல்களை மட்டும் பயன்படுத்தி கறத்தல் ஆகியமுறைகளில் பால் கறக்கப்படுகிறது. பிற முறைகளை ஒப்பிடும் போது அனைத்து விரல்களையும் பயன்படுத்தி கறக்கும்முறை மிகவும் சிறந்ததாகும். இம்முறையில் பால்காம்புகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை.மடிநோய் பாதிக்கப்பட்ட கால்நடைகளில் இறுதியாக பால் கறப்பதின் மூலம் பிற கால்நடைகளுக்கு நோய் பரவுவதை தடுக்க முடியும். பால் கறவைக்கு முன்னால் கறவையாளர்கள் தங்கள் இரு கைகளையும் சோப்பு கொண்டோ அல்லது கிருமி நாசினி கலந்த தண்ணீர் கொண்டோ கழுவ வேண்டும். பால் கறவை இயந்திரங்களைப் பயன்படுத்துவோர் இயந்திர தயாரிப்பாளர்களின் பரிந்துரை செய்யும் தொழில்நுட்ப ஆலோசனைகளை முறையாக பின்பற்ற வேண்டும். மடி நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளில் பால்கறக்க கறவை இயந்திரங்களை பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு பயன்படுத்தும் போது பாதிக்கப்பட்ட கால்நடைகளில் மடிகளில் வலி உண்டாவதுடன் பால் கறவை இயந்திரம் அசுத்தப்பட வாய்ப்புள்ளது. கறவை மாடுகளில் தினசரி இரண்டு கறவைகளுக்கு இடையேயான இடைவெளி சமமாக இருக்க வேண்டும்.பால்வற்றும் காலம்: பால் வற்றும் காலம் என்பது சினையாக உள்ள பசுக்களில் எட்டுமாத காலத்தில் பால் கறவையை நிறுத்தி அடுத்த கன்று பிறக்கும் வரை ஓய்வளிப்பதாகும். சினைப்பசுக்களுக்கு ஓய்வளிப்பதால் பிறக்கப்போகும் கன்று ஆரோக்கியமாக வளர்வதுடன் அடுத்த கறவையில் பால் உற்பத்தி முறையாக இருக்கும். அதிக பால் கரக்கும் பசுக்களில் கறவையை நிறுத்தும் சமயத்தில் பால் கறவையை நிறுத்தக்கூடாது. இவ்வாறு நிறுத்துவதால் பால் மடியில் பாதிப்புகள் ஏற்படும். எனவே இத்தகைய பசுக்களில் பால் கறவையை படிப்படியாக நிறுத்த வேண்டும். முதலில் சில நாட்கள் ஒருசேர கறவையை நிறுத்தும் சமயத்தில் அவற்றிற்கான தீவனத்தினைச் சற்று குறைப்பதன் மூலம் பால் உற்பத்தியை குறைக்க முடியும்.நெல்லுக்கு மேல் உரமாக இயற்கை உரங்களில் பயன்படுத்துதல் : இரண்டுமுறைகளில் மேல் உரமாக ஒரு ஏக்கர் நிலத்துக்கு 400 கிலோ முதல் 700 கிலோ தொழுஉரம் அல்லது மண்புழு உரத்தோடு 80 கிலோ வேப்பம்புண்ணாக்கு, ஒருகிலோ அசோபாஸ் அல்லது தலா 500 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா ஆகியவற்றைக் கலந்து ஒருநாள் வைத்திருந்து தூவ வேண்டும். மேல் உரம் கொடுத்து 10 முதல் 15 நாட்களுக்கு பிறகு, வேளாண்மைத்துறை வெளியிட்டிருக்கும் 'பச்சைவண்ண அட்டையைப் (லீப் கார்டு) பயன்படுத்தி இலைகளின் நிறத்தைப் பார்க்க வேண்டும். அதில் மூன்றாம் எண்ணுக்கு குறைவாக இருந்தால் மட்டும் மீண்டும் ஒருமுறை அதே உரக் கலவையைத் தெளிக்க வேண்டும்.நெற்பயிரின் வளர்ச்சிக்கு இயற்கை முறை: மாதம் ஒருமுறை 20 லிட்டர் அமுதக்கரைசல் அல்லது 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை தண்ணீருடன் கலந்து விடலாம். பயிரின் வளர்ச்சியைப்பொறுத்து 25 மற்றும் 30ம் நாட்களில் மட்டும் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மிலி 'பஞ்சகவ்யா' என்ற அளவில் கலந்து தெளிக்கலாம்.அமுதக்கரைசல் தயாரிக்கும் முறை: மாடு ஒருதடவை போட்ட சாணம் (எந்த மாடாக இருந்தாலும் பயன்படுத்தலாம்). ஒரு தடவை பெய்த மாட்டுச் சிறுநீர் இவற்றை ஒரு பிளாஸ்டிக் வாளியில் எடுத்துக் கொண்டு அதில் ஒரு கைப்பிடி வெல்லம், ஒரு குடம் தண்ணீர் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். 24 மணி நேரம் நிழற்பாங்கான இடத்தில் வைக்க வேண்டும். இப்போது அமுதக்கரைசல் தயார். ஒரு பங்கு அமுதக்கரைசலுடன் 10 பங்கு தண்ணீர் சேர்த்து பயிர்களுக்கு தெளிக்கலாம். தெளிப்பானில் (டேங்க்) ஒருமுறை தெளிப்பதற்கான அளவு ஒரு ஏக்கருக்கு 10 தெளிப்பான் தெளிக்க வேண்டும். வாய்க்கால் நீரிலும் கலந்து விடலாம்.- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !