சின்னச்சின்ன செய்திகள்
இயற்கை சாய மரம் (பிக்சா ஒரல்லானா): 'பிக்ஸின்' என்ற ஆரஞ்சு நிறமியானது இந்த மரத்திலிருந்து பிரித்தெடுக்கப் படுகிறது. உதட்டுச்சாயம் மரம் (அ) ரோகான் (அ) ஆண்டோ என்று அழைக்கப்படுகிறது. மரம் 3 முதல் 4 மீட்டர் உயரம் வளரக் கூடியது. மைசூரு, கேரளம், மேற்குவங்கம், கிழக்குகடற்கரை, ஆந்திரா, மகாராஷ்டிரா, அசாம் ஆகிய இடங்களில் பயிரிடப் படுகிறது. தமிழகத்தில் கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் வளர்க்கப்படுகிறது.இந்த மரத்தின் விதையைச் சுற்றிலும் மெலிந்த சதைப்பற்றுள்ள அமைப்பைக் கொண்டது. அதிலிருந்து ஆரஞ்சு நிற பிக்ஸின் (அ) அனட்டோ சாயம் பிரித்தெடுக்கப்படுகிறது. ஒரு மரத்திலிருந்து 0.5 கிலோ வரை விதைகள் பெறலாம். இரண்டாம் ஆண்டு முடிவில் ஒரு எக்டருக்கு 300 - 550 கிலோ வரை விதைகள் அறுவடை செய்யலாம். மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியில் 34 வேறுபட்ட இடங்களிலிருந்து சேகரிக்கப் பட்ட விதையில் உள்ள பிக்ஸின் அளவானது 1.15 சதம் முதல் 3.13 சதம் வரை பெறப்பட்டது. பிரேசில் நாடானது 3000 முதல் 10,000 டன்கள் வரை விதைகளை ஏற்றுமதி செய்கிறது.பிக்ஸின் ஆரல்லின் என்ற இரண்டு சாய மரங்களின் நிறமிகள் விதையிலிருந்து பிரித்தெடுக்கப்படுகின்றன. கேரமல் (இளஞ்சிவப்பு மஞ்சள் நிற சாயமேற்றி) நிறமிக்கு பிறகு அனட்டோவானது உலகிலேயே இரண்டாவது சிறந்த சாயமேற்றியாக பயன்படுகிறது. அனட்டோ சாயமானது உணவுப் பொருட்களிலும், துணிகளுக்கு சாயமேற்றவும், சோப்பு, வெண்ணெய், செயற்கை வண்ணம், உதட்டுச்சாயம், உடம்பில் வர்ணம் பூசவும் நிறமேற்றியாக பயன்படுகிறது. விதையைச் சுற்றியுள்ள சதைப்பற்றுள்ள பகுதியானது மூலிகை மருத்துவத்தில் பயன்படுகிறது. (தகவல்: முனைவர் க.குமரன், மா.கிருபா, முனைவர்.பெ.துரை, வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், மேட்டுப்பாளையம்-641 301. 04254-222 010)நிலக்கடலையை தாக்கும் அப்லா வேர் நோய்: மஞ்சள் பூசணம் (அ) அப்லா வேர் நோய் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மஞ்சள் பூசணம் நோய் அல்லது அஸ்பெர்ஜில்லஸ் பிளேவஸ் என்ற பூஞ்சாண நோய்க்காரணி மூலம் உண்டாகிறது. இந்நோய் இளம் பருவத்திலேயே அதாவது விதை முளைக்கும் பருவத்தில் ஏற்படுவதால் அதிக விளைச்சல் இழப்பை நிலக் கடலையில் ஏற்படுத்துகிறது. அப்லா டாக்சின் என்ற நச்சுப் பொருள் இந்நோயினால் தோன்றுவதால் அவ்வாறான நிலக்கடலைகளை உட்கொள்ளும் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் கேடு விளைவிக்கிறது.இப்பூஞ்சாண விதைகளைத் தாக்கி அவற்றை முளைக்காமல் செய்கிறது. இதனால் இலைகள் வெளிவராமல் விதைகள் கருகிவிடுகின்றன. இப்பூஞ்சாணம் பாதி முளைத்தும் முளைக்காத விதையிலைகளைத் தாக்குவதால் விதையிலைகள் சுருங்கி சிறுத்துவிடுவதுடன் கருகியும் விடுகின்றன. விதையிலிருந்து முளைவேர், விதையிலை ஆகியவை வெளிவரும் முன்பாகவே அழுகிவிடுகின்றன. பாதிக்கப்பட்ட விதைகளை மஞ்சள் கலந்த பச்சைநிற பூஞ்சாண நூல் மூடியிருக்கும். இப்பூஞ்சாணம் மண்ணுடன் தொடர்பு கொண்டுள்ள இளம் செடிகளில் தண்டுப்பகுதியைத் தாக்கி மடியச் செய்கின்றன. பாதிக்கப்பட்டவிதையிலைகளில் காய்ந்த புள்ளிகள் பழுப்பு நிற கருஞ்சிவப்பு ஓரங்களுடன் காணப்படும். பாதிக்கப்பட்ட இளஞ்செடிகளின் வளர்ச்சி குன்றியும் இலைகளின் அளவு குறைந்தும் வெளிறிய பச்சை நிறத்துடனும் காணப்படும். பாதிக்கப்பட்ட செடிகளைப் பிடுங்கிப் பார்த்தால் இரண்டாம் நிலை வேர்கள் உருவாவது பாதிக்கப் பட்டிருப்பதைக் காணலாம்.இந்நோயைக் கட்டுப்படுத்த: நல்ல தரமான நோய் பாதிக்கப் படாத விதைகளைப் பயன்படுத்த வேண்டும். விதைகளைச் சேமித்து வைப்பதற்கு முன் அதிகமான ஈரம் இல்லாமல் நன்கு காயவைக்க வேண்டும். திரம் 3 கிராம் / கிலோ (அ) கார்பண்டசிம் 2 கிராம் / கிலோ விதை என்ற அளவில் கலந்து விதைநேர்த்தி செய்ய வேண்டும். விதைக்கும் முன் விதைகளை டிரைகோடெர்மா விரிடி 4 கிராம்/ கிலோ விதை (அ) சூடோமோனாஸ் புளோரசன்ஸ் 10 கிராம்/ கிலோ விதை என்ற அளவில் கலந்து விதைநேர்த்தி செய்யவும். (தகவல்: முனைவர் ப.லதா, ப.சாந்தி, சி.நடராஜன், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், பட்டுக்கோட்டை-614 602. 94864 18661)-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.