விவசாயிகளுக்கு வழிகாட்டும் மண் ஈரப்பதங்காட்டி
'நீரின்றி அமையாது உலகு' என்ற திருவள்ளுவரின் கருத்திற்கு ஏற்ப, நீரின் தேவை இன்றியமையாத ஒன்று என்பதில் சந்தேகமில்லை. மாறி வரும் தட்ப வெப்ப நிலை, அளவிற்கு அதிக பயன்பாடு காரணமாக நீர் ஆதாரங்கள் குறைந்து வருகிறது.உலகில் உள்ள பயன்பாட்டிற்குரிய மொத்த நீரில் விவசாயத்திற்காக 40 - 45 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என கண்டறியப்பட்டுள்ளது. நெல், கரும்பு, வாழை பயிர்களுக்கு அதிகம் நீர் தேவை. இந்தியாவில் 45 லட்சம் எக்டேர், தமிழகத்தில் 4 லட்சம் எக்டேர் கரும்பு பயிரிடப்படுகிறது.பொதுவாக நம் விவசாயிகள் பயிரின் தேவைக்கும் அதிகமான அளவில் தான் நீரை பயன்படுத்துகின்றனர் என ஆய்வுகள் கூறுகின்றன. பயிருக்கு தேவையான நேரத்தில், சரியான அளவு நீர் பாய்ச்சி, நீர் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்க வேண்டும்.மண்ணில் உள்ள ஈரப்பதத்தை அறிய கோவை கரும்பு இனப்பெருக்க நிலையத்தில் 'மண் ஈரப்பதங்காட்டி' கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மண்ணின் ஈரப்பதத்தை அறியலாம். இந்த கருவியில் நீளமான மின் கடத்தும் கம்பிகளும், ஒரு மின் இணைப்பு அட்டையும், பத்து வண்ண எல்.இ.டி., லைட்டுகள் உள்ளன. மண்ணின் ஈரத்தன்மையை பொறுத்து, வெவ்வேறு லைட்டுகள் ஒளிரும். ஒளிரக்கூடிய வண்ண லைட்டுகள் மூலம், விவசாயிகள் நீர் கட்டுவதா வேண்டாமா என முடிவு செய்யலாம்.கருவி செயல்படும் விதம்மண் ஈரப்பதங்காட்டியின் உள் எல்.இ.டி., லைட் நீல வண்ணத்தில் ஒளிர்ந்தால் அதிக ஈரப்பதம் உள்ளது, நீர் கட்ட அவசியம் இல்லை. பச்சை: தேவையான அளவு ஈரப்பதம் உள்ளது, உடனே நீர் கட்ட தேவையில்லை. ஆரஞ்சு: ஈரப்பதம் குறைவாக உள்ளது, நீர் கட்டுவது அவசியம். சிகப்பு: ஈரப்பதம் மிகவும் குறைவாக உள்ளது, உடனே நீர் பாய்ச்ச வேண்டும்.பயன்படுத்தும் முறைவிவசாய நிலம், வீட்டுத் தோட்டம், செடி வளர்க்கும் தொட்டிகளில் பயன்படுத்தலாம். அனைத்து மண் வகைகளுக்கு ஏற்றது. தேவப்படும் நேரத்தில் மட்டும் பயன்படுத்தி, ஈரப்பதத்தை தெரிந்து கொள்ளலாம். இதன் அடக்க விலை 500 ரூபாய். இதில் உள்ள நீளமான கம்பிகளை மண்ணிற்குள் தேவையான அளவு செலுத்த வேண்டும். கரும்பு பயிர்களின் வேர்களானது 60 செ.மீ., ஆழம் செல்வதால் இந்த கம்பிகளை 30 - 40 செ.மீ., ஆ ழம் வரை மண்ணிற்குள் செலுத்தலாம். அப்படி செய்யும் போது மண்ணின் ஈரப்பதத்திற்கு ஏற்ப லைட்டுகள் ஒளிரும். ஒளிரும் லைட்டின் வண்ணத்திற்கு ஏற்ப ஈரப்பதத்தின் அளவை தெரிந்து கொள்ளலாம்.-டி.யுவராஜ் தட்சிணாமூர்த்திவேளாண்மை ஆலோசகர். 94865 85997.