உள்ளூர் செய்திகள்

மாநில தீவன அபிவிருத்தி திட்டம்: செலவு குறைவு

அரசு கால்நடை பராமரிப்புத்துறையின் கீழ் இயங்கும் கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி திட்டம் சார்பில் மண்ணின்றி பசுந்தீவனம் வளர்க்கும் பயிற்சி விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. ஒரு கிலோ பசுந்தீவனம் உற்பத்தி செய்ய இரண்டு அல்லது மூன்று லிட்டர் தண்ணீர் போதும். நிலத்தில் வளர்க்க 80 முதல் 90 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். எனவே குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தி பசுமைக்குடில் மூலம் அதிக பசுந்தீவனத்தை உற்பத்தி செய்யலாம். ஆயிரம் கிலோ உற்பத்திக்கு ஒரு பணியாளர் 3, 4 மணி நேரம் பணி புரிந்தால் போதுமானது. மீதமுள்ள நேரத்தில் வேறு பணிகளை செய்யலாம். ஆண்டு முழுவதும் அனைத்து பருவ நிலையிலும் தொடர்ச்சியாக தரமான பசுந்தீவனம் உற்பத்தி செய்ய முடியும்.பசுந்தீவனத்தை சேமித்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை. பால் உற்பத்தி 10 முதல் 15 சதவீதம் உயரும். பாலின் தரமும் உயர்ந்து விடும். மக்காச்சோளம், கோதுமை, பார்லி, காராமணி போன்றவற்றை பசுமைகுடில் முறையில் வளர்க்கலாம். இதில் மக்காச்சோளம் ஆண்டு முழுவதும் கிடைக்கிறது. கோதுமை, பார்லி விலை அதிகம். இளம் சோளப் பயிரில் நச்சுத்தன்மை உள்ளது. எனவே இதை தவிர்க்க வேண்டும். சிறு தானியங்களான கம்பு, ராகி போன்றவற்றில் போதிய அளவு தழை உற்பத்தி இல்லை. எனவே ஆண்டு முழுவதும் பயிரிட மக்காச்சோளம் சிறந்தது.செயல்முறைதானியங்கள் நன்கு முற்றி முளை விடக்கூடியதாகவும், ஈரப்பதம் 12 சதவீதத்திற்குள்ளாகவும், காரீய துகள்கள் அற்றதாகவும் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் மக்காச்சோளத்தை தண்ணீரில் சுமார் 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் மக்காச்சோள விதைகளை ஈரமான சணல் சாக்கு பைகளில் 24 மணி நேரம் கட்டி வைக்க வேண்டும். மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை சாக்கு பைகளை நீரினால் நனைக்க வேண்டும். மூன்று நாள் விதைகளை அரை அங்குலம் உயரத்திற்கு பிளாஸ்டிக் தட்டில் வைத்து ஹைட்ரோபோனிக் பசுமை சீட்டில் வைக்க வேண்டும்.மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை ஐந்து நிமிடத்திற்கு தானியங்கு நீர் தெளிப்பான் மூலம் நீரை விதைகளின் மேல் தெளிக்க வேண்டும். பொதுவாக எட்டு நாள் பசுந்தீவன வளர்ச்சி போதுமானது. இந்நாட்களில் 25, 35 சென்டி மீட்டர் உயரத்திற்கு வளர்ந்து விடுகின்றன. பொதுவாக ஒரு கிலோ விதைக்கு ஏழு முதல் எட்டு கிலோ பசுந்தீவனம் உற்பத்தியாகும். இவற்றை கால்நடைகள் விரும்பி உண்ணும். கறவை மாடுகள் அதிக பால் சுரக்கும். தீவன செலவு, தண்ணீர் செலவு வெகுவாக குறையும். சத்துமிக்க இயற்கையான பசுந்தீவனம் கால்நடைகளுக்கு ஒரு வரப்பிரசாதம்.கால்நடை பராமரிப்பு துறை சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !