திருந்திய நெல் சாகுபடி முறை பரவுகின்றது
பெரியார், வைகை பாசனத் திட்டத்தின்கீழ் 1,45,000 ஏக்கர் பரப்பில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் நடவு வயல் தயார் செய்துகொண்டு இருக்கின்றனர். கொட்டும் மழையில் விவசாயப் பணிகள் நடந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பள்ள வயல்களில் கழனிகளில் மழைநீர் தேங்கிக் கொண்டு உபரியாக இருப்பதை வடித்து விடுகின்றனர் விவசாயிகள்.விவசாயிகள் இரண்டாம் போக சாகுபடி செய்ய எடீடி 36, எடீடி 45, எடீடி 16(பெருவெட்டு ரக நெல்) வெள்ளைப்பொன்னி மற்றும் குச்சி நெல் இவைகளை தேர்ந்தெடுத்து நாற்றுக்களை நட்டுக்கொண்டு இருக்கின்றனர். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடி முறையை அனுசரித்துக் கொண்டு இருக்கிறார்கள். முற்போக்கு விவசாயிகள் கூறுவது யாதெனில் இந்த புதிய முறை நெல் சாகுபடி எங்களுக்கு சாகுபடியில் கணிசமான அளவு லாபம் தருவதோடு கூலிஆட்கள் கிடைக்காத பிரச்னையும் இல்லாமல் செய்து விடுகின்றது. விவசாய இலாகா மற்றும் மதுரை வேளாண்மை கல்லூரியில் பணி செய்யும் பேராசிரியர்களும் இப்புதிய முறை பரவ விவசாயிகளை ஊக்குவித்து வருகின்றனர்.மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை மாவட்ட விவசாயிகள் சாகுபடி செலவு ஏக்கருக்கு ரூ.11,000லிருந்து ரூ.12,000 வரை செய்கிறார்கள். 32 மூடை நெல் மகசூல் எடுக்கிறார்கள். ஒரு மூடை நெல் விலை ரூ.650/-. 32 மூடை மகசூல் எடுக்கின்றனர். இதன் மதிப்பு ரூ.20,800. சாகுபடி செலவு ரூ.11,000 போக ரூ.9,800லிருந்து ரூ.10,000 வரை லாபம் எடுக்கிறார்கள்.வறட்சி பகுதியான ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் ஏக்கரில் 25 மூடை மகசூல் எடுத்து வந்தார்கள். தற்போது இந்த விவசாயிகள் வரும் பட்டத்தில் 32 மூடை மகசூல் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பெய்யக்கூடிய மழை சூழ்நிலையில் விவசாயிகள் தங்கள் பணியை சந்தோஷமாக செய்வது குறிப்பிடத்தக்கது. முற்போக்கு விவசாயிகள் தற்போது தங்களது அனுபவத்தின் அடிப்படையில் திருந்திய நெல் சாகுபடியில் கீழ்க்கண்ட நன்மைகளையும் தெரிந்து கொண்டனர்.* உற்பத்தி செலவு சற்று குறைகின்றது.* ஜனப்பெருக்கம் அதிகரித்து வரும் சூழ்நிலையில் நெல் உற்பத்தியை பன்மடங்கு அதிகரிக்க புதிய முறை உதவுகின்றது.* சாதாரண நீர் பாசன முறையைவிட புதிய முறை சாகுபடியில் தேவைப்பட்ட பாசனம் பாதியளவுதான்.* புதிய முறையில் மண்ணில் காற்றோட்டம் அதிகரித்து வேர் வளர்ச்சியும் கணிசமான அளவு அதிகரித்து நெல் மகசூல் அதிகரிக்கின்றது.மதுரைப்பகுதியில் இந்த இரண்டாம் போகத்தில் 100 நாட்கள் வயதுடைய குச்சி நெல் என்று அழைக்கப்படும் ஜே13 நெல்லினையும் சாகுபடி செய்துள்ளனர். இதன் சாகுபடிக்கு குறைந்த செலவே ஆகின்றது. சாகுபடிக்கு ஒரு சென்ட் நாற்றங்கால் செலவே ஆகின்றது. நாற்றங்காலுக்கு 100 கிலோ மக்கிய தொழு உரம் இடப்படுகின்றது. இதோடு 2 கிலோ டிஏபி உரம் இட்டு உழவு செய்யப்படுகின்றது. விதை நெல் நாற்றங்காலில் டிசம்பரில் விதைக்கப்படுகின்றது. நடவு வயலுக்கு இரண்டு ட்ரெய்லர் லோடு தொழு உரம் இடப்படுகின்றது. கடைசி உழவில் 17:17:17 காம்ப்ளக்ஸ் உரம் ஒரு மூடை 50 கிலோ இடப்படுகின்றது. பரம்படிக்கும்போது வயலில் இரண்டரை கிலோ நுண்ணூட்டச்சத்துக்கள் மணலுடன் கலந்து நடவு வயலில் தூவப்படுகின்றது. நடவு வயலில் ''ரீபீட்'' என்ற களைக்கொல்லி 250 மில்லி மணலுடன் கலந்து 50 சென்ட் பரப்பில் இடப்படுகின்றது. பயிர் நடவு செய்த 10ம் நாள் யூரியா 10 கிலோ, யூரியாவுடன் இரண்டு கிலோ வேப்பம் பிண்ணாக்கு கலந்து இடப்படுகின்றது. 99 நாட்களாக பயிரின் வயது இருக்கும்போது (சாகுபடி பரப்பு 50 சென்ட்) அறுவடை செய்யப்பட்டது. அறுவடையில் 50 சென்ட் பரப்பில் (அரை ஏக்கர்) 17 மூடை மகசூல் கிடைத்தது. நெல்லின் மதிப்பு ரூ.10,200. சாகுபடி செலவு ரூ.3,735. அரை ஏக்கரில் லாபம் ரூ.6,465. ஜே-13 சாகுபடியில் செலவு குறைவு. அரிசி சன்னமாக இருக்கும். புழுங்கல் அரிசி இட்லி செய்ய ஏற்றது. நெல் பொரி செய்வதற்கு ஏற்றது. வைக்கோல் விற்பனையிலும் வருவாய் உண்டு. விவசாயிகள் விஞ்ஞான தொழில் நுட்பங்களை அனுசரித்தால் எக்காலத்திலும் நன்மை பெறலாம்.-எஸ்.எஸ்.நாகராஜன்.