மரப்பயிர் ஓர் பணப்பயிர்
மரங்கள் இல்லாமல் மனிதர்களின் வாழ்க்கையும் இல்லை; மழையும் இல்லை. மரங்கள் மனிதர்களின் உயிர் மூச்சு. சுவாசிக்க மட்டுமில்லாமல் பல்வேறு தேவைகளுக்கு மரத்தை சார்ந்தே இருக்கிறோம். மரம் வளர்ப்பில் பின் தங்கிய நிலையில் நம் நாடு உள்ளது. மொத்த நிலப்பரப்பில் 33 சதவீதம் மரங்கள் இருக்க வேண்டும். நெல், மக்காச்சோளம், தென்னை, பருத்தி போன்ற விவசாயம் செய்வதைப்போல் மரங்களையும் சாகுபடி செய்யலாம்.ஐக்கிய நாடுகள் சபையின் கணக்கெடுப்பின்படி பூமியில் 3 லட்சத்து 4 ஆயிரம் கோடி மரங்கள் உள்ளன. ஆனால், மனித நாகரீகம் தோன்றிய காலத்தில் இருந்து தற்போது வரை 46 சதவீதம் மரங்கள் வெட்டப்பட்டு விட்டன. மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால் உலகில் ஒவ்வொரு மனிதனுக்கு ஈடாக 405 மரங்கள் உள்ளன. இந்த கணக்கீட்டுடன் ஒப்பிட்டால் இந்தியாவின் நிலை மிகவும் பரிதாபம். ஒவ்வொரு மனிதனுக்கும் ஈடாக வெறும் 28 மரங்கள் மட்டும் தான் உள்ளன. காடுகள் அனைத்தும் பறவைகள், வன விலங்குகள் மற்றும் நீரோட்டத்தின் மூலம் உருவாகி இருக்கிறது.கலப்பு மர சாகுபடிஒற்றை மரச்சாகுபடியை விட கலப்பு மர சாகுபடி லாபகரமானதாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் உள்ளது. கலப்பு மர சாகுபடியில் பூச்சி நோய் தாக்குதல் குறைவாக உள்ளது. தனி மர சாகுபடியை விட கலப்பு மரங்கள் சாகுபடி செய்வதால் குறைந்த காலத்தில் அதிக வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. அவரவர் பகுதிகேற்ப எந்தெந்த மரங்கள் நன்றாக வளர்கிறதோ, அந்த மரங்களை வளர்க்க வேண்டும். மானாவாரி நிலங்களில் தேக்கு போன்ற மரங்களை வளர்க்கக்கூடாது. வேம்பு, புங்கன், புளி போன்றவைகள் வளர்க்கலாம். விதைகள் மூலமாகவும், கன்றுகளை நடவு செய்தும் வளர்க்கலாம். சிறிய கன்றாக நடவு செய்யும்போது ஆணி வேர் மண்ணில் ஆழமாக செல்லும் மரக்கன்றுகளை பையிலேயே உயரமாக வளர்த்தால் ஒரு சுருள் போல மாறி விடும். இக்கன்றை நடவு செய்வதால் ஆணி வேர் வளராது. மரம் வளர்ப்பை ஒரு கலை போல் செய்ய வேண்டும்.இயற்கை உரங்கள்கன்றுகளை நடும்போது ரசாயன உரங்களை இடுவதை விட இயற்கை உரங்களான மக்கிய தொழு உரம், மண் புழு உரம் இட வேண்டும். பக்கக் கிளைகள் துளிர்க்கும் போதே அவற்றை கிள்ளி விட வேண்டும். மரப் பயிர்களை முறையாக கவாத்து செய்வது அவசியம். மரம் வளர்த்தால் மட்டும் போதாது. அது தேவையான பருமனுடன் இருக்க வேண்டும். அப்போது தான் நல்ல விலை கிடைக்கும். இயற்கை சீற்றங்களில் இருந்து மரங்களை பாதுகாக்க பண்ணையை சுற்றி உயர் வேலி அமைப்பது அவசியம். இதற்கு சவுக்கு, கத்தாலை போன்ற மரங்களை நடவு செய்யலாம். தென்னையில் ஊடுபயிராக மகாகனி, காயா ஜாதிக்காய் போன்ற மரங்களை கலப்பு மரங்களாக வளர்க்கலாம். ஊடு பயிர் சாகுபடி செய்வதால் தென்னைக்கு பாதிப்பு இல்லை. அதன் இலைகள் உதிர்ந்து மக்கி தென்னைக்கு உரமாகிறது. பல மரங்களில் வாசனை இருப்பதால் தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் குறைய வாய்ப்பு உள்ளது.பட்டியல் மரங்கள்மரப்பயிர்களை நடவு செய்தவுடன் ஓராண்டுக்கு பின் எத்தனை மரங்கள் உயிருடன் இருக்கிறது என்ற விவரத்தை கிராம நிர்வாக அலுவலரிடம் அடங்கலில் பதிவு செய்ய வேண்டும். மரத்தை வெட்ட விரும்பும் போது கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்து சிட்டா, அடங்கல் போன்ற சான்றிதழ்களை பெற வேண்டும். பட்டியல் மரங்களில் சந்தனம், செஞ்சந்தனம், ஈட்டி, கருங்காலி, தேக்கு போன்ற மரங்களை வனத்துறையின் அனுமதி பெற்றே வெட்ட வேண்டும். இவற்றை வெட்டும் போது படிவம் 2 விண்ணப்பத்துடன் கிராம நிர்வாக அலுவலரிடம் சிட்டா, அடங்கல் போன்ற ஆவணங்களையும் இணைத்து வனத்துறை அதிகாரிக்கு அனுப்பி அனுமதி வாங்க வேண்டும். தேக்கு மரத்திற்கு அனுமதி பெற்ற பின் வெட்டி கொள்ளலாம். சந்தனம், செஞ்சந்தனம் நன்றாக முற்றியிருந்தால் வனத்துறையே வெட்டி எடுத்து கொண்டு 80 சதவீதம் பணத்தை விவசாயிகளுக்கு கொடுப்பர். பட்டியல் மரங்களை தவிர மற்ற அனைத்து மரங்களையும் கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று பெற்று வெட்டி கொள்ளலாம்.மரப்பயிர் மானியம்மரங்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு கொண்டு செல்லும் போது இந்த சான்றிதழ் மிக அவசியம். மரத்தை நல்ல விலைக்கு விற்பனை செய்ய விவசாயிகள் மரத்தை நேரிடையாக விற்பனை செய்ய வேண்டும். மரத்தை மர அறுவை மில்களில் அறுத்து சைஸ் வாரியாக தனியாக விற்பனை செய்ய வேண்டும். அவ்வாறு விற்பனை செய்வதன் மூலம் கூடுதல் வருமானம் பெறலாம். வேளாண் துறையில் செயல்படுத்தப்படும் எண்ணெய் வித்து மரப்பயிர் சாகுபடி திட்டத்தின் கீழ் ஒரு எக்டேருக்கு வேப்ப மரத்திற்கு 17 ஆயிரம் ரூபாய், புங்கன் மரத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. மரம் வளர்ப்பை ஊக்குவிக்க பல திட்டங்களை வனத்துறை செயல்படுத்தி வருகிறது. வனத்துறை மூலம் மரக்கன்றுகள் இலவசமாக நட்டு பராமரிக்க உதவி செய்யப்படுகிறது. அதிகளவில் நிலங்கள் உள்ள விவசாயிகள் மரக்கன்றுகள் இயற்கைக்கு உதவலாம். தொடர்புக்கு 94435 70289.- எஸ்.சந்திரசேகரன்வேளாண் ஆலோசகர்அருப்புக்கோட்டை.