தாவரத்தடுப்புப் படிமட்டம்
மலைப்பிரதேசங்களில் 16 முதல் 33 சதவீதம் சரிவு உள்ள பகுதிகளில் மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்புக்கு படிமட்டம் அமைப்பது பரிந்துரை செய்யப்படுகிறது. இத்தொழில்நுட்பத்தைக் கடைப்பிடிப்பதால் சரிவான பூமியில் உருளைக்கிழங்கு போன்ற பயிர்களை மேலும் கீழும் சாகுபடி செய்வதைக் காட்டிலும் மழைநீர் ஓட்டம் 50 சதவீதமும் மண் அரிப்பு 98 சதவீதமும் குறைகிறது.படிமட்டங்களை வெவ்வேறு முறைகளில் அமைக்கலாம். அவைகள்1. இயந்திரங்களைக் கொண்டு மேடான பகுதியில் இருந்து மண்ணை வெட்டி பள்ளமான பகுதியில் இட்டு சமன் செய்வது.2. படிப்படியாக அ) இயந்திரத் தடுப்புகள், ஆ) தாவரத் தடுப்புகள் அமைப்பதன் மூலமாக படிப்படியாக படிமட்டம் அமைத்தல்.தாவரத் தடுப்புகளைக் கொண்டு சில ஆண்டுகளில் படிப்படியாக படிமட்டம் அமைப்பதற்கு தாவரப் படிமட்டம் அல்லது பியூரோடோரிகன் படிமட்டம் எனப் பெயர். இம்முறையில் படிமட்டங்கள் அமைப்பது பொருளாதார ரீதியில் உகந்தது. இயற்கை வளங்களான மண் மற்றும் நீர்வளம் காக்கப்படுவதுடன் பயிர் மகசூலும் அதிகமாக கிடைக்கின்றது. இத்தகைய பலன்கள் சரிவான பூமியில் சாகுபடி செய்யும் போது நமக்குக் கிடைப்பதில்லை.இயந்திரங்கள் மூலமாகப் படிமட்டம் அமைப்பதற்கு அதிக செலவு ஆகும். மேல்மண் மிகுந்த அளவில் பாதிக்கப்படுகிறது. எனவே இம்முறையில் படிமட்டம் அமைக்க முன்வருவதில்லை. ஆனால் இந்த தாவரத் தடுப்பு முறையில் படிமட்டம் அமைப்பதற்கு மிகக் குறைந்த செலவு தான் ஆகும். படிப்படியாக படிமட்டங்கள் அமைக்கப்படுவதால் மேல் மண் அதிக அளவில் பாதிக்கப்படுவதில்லை. எனவே துவக்கத்தில் மகசூல் குறைவும் இல்லை.மகேந்திரன் மற்றும் ரகு ஆகிய விவசாயிகள் மேல்கவட்டி கிராமத்தில் தங்களது சரிவான பூமியில், தீட்டுக்கல்லில் உள்ள மத்திய மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தின் தொழில்நுட்ப உதவியுடன் இந்த தொழில்நுட்பத்தை கடைப்பிடித்து உள்ளார்கள்.அவர்கள் சம உயரக் கோடுகளில் இரு வரிசைகளில் வரிøகு வரிசை 50 செ.மீ. புல்லுக்கு புல் 50 செ.மீ. இடைவெளியில் இருகரணைகள் கொண்ட கோ-4 புற்களை இடைவிட்ட முறையில் நடவு செய்தார்கள். இவ்வாறு நடப்பட்ட இரண்டு தாவரத் தடுப்புகளுக்கு இடையே கிழங்கு, பீன்ஸ், கேரட், முட்டைகோஸ் போன்ற காய்கறிப் பயிர்களை மேலும், கீழும் சாகுபடி செய்யும் முறையின் மூலம் பயிரிட்டார்கள். இதனால் மண் மெதுவாக தாவரத் தடுப்பு நோக்கி நகர்ந்து படிந்து கொண்டே வந்தது. இதனால் படிப்படியாக 4 ஆண்டுகளில் படிமட்டம் உருவாகி விட்டது. இதனால் மண், இடப்படுகின்ற உரம் மற்றும் நீர் பூமியில் இருந்து வெளியேறுவது குறைந்தது. நல்ல ஈரப்பதம் கிடைத்தது. தடுப்புகளுக்கு இடையே போடப் பட்ட காய்கறிப் பயிர்களின் மகசூல் அதிகரித்தது. புற்கள் நன்கு வளர்ந்த பிறகு அவற்றை அறுவடை செய்து கறவை மாடுகளுக்குக் கொடுக்க முடிந்தது.இத்தொழில் நுட்பத்தைக் (ஒரு ஹெக்டேர் சரிவான நிலத்தில்) கடைப்பிடிப்பதற்கு ஆகும் மொத்த செலவு ரூ.1790/- (கோ-4 புற்களைக் கொண்டு தாவரத் தடுப்புகள் அமைக்கப் பயன்படுத்திய புற்கரணைகளின் எண்ணிக்கை 2800, அதற்கான செலவு ரூ.420/- (1000 கரணைகளுக்கு ரூ.150/- வீதம்), கரணைகளை நடுவதற்கான செலவு ரூ.1000/- (ஒரு ஆளுக்கு ரூ.250/- வீதம் 4 ஆட்களுக்கு), இரண்டாம் ஆண்டில் பாடுவாசியான கரணைகளுக்கு பதிலாக மீண்டும் நடுவதற்குத் தேவைப்பட்ட கரணைகளின் எண்ணிக்கை 800, அதற்கான செலவு ரூ.120/- கரணைகளை நட ஆன செலவு ரூ.150/-) காய்கறி பயிர்களில் கூடுதல் மகசூல் கிடைத்தது மட்டுமின்றி கோ-4 புற்கள் அறுவடை மூலம் ஒரு வருடத்திற்கு ஒரு ஹெக்டேரில் அமைக்கப்பட்ட தாவரத் தடுப்புகளில் இருந்து சுமார் 22.63 டன் தீவனமும் கிடைத்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.21263/-இதர நன்மைகள்: மண் அரிப்பு, மழைநீர் ஓட்டம் மற்றும் சத்து இழப்பு குறைந்தது. மண் ஈரப்பதம் காக்கப்பட்டது. அதனால் தாவரத்தடுப்புகளுக்கு இடையே வளர்க்கப்பட்ட பயிர்களின் மகசூலும் அதிகரித்தது.இத்தொழில் நுட்பத்தை மிகச்சிறந்த முறையில் கடைப்பிடித்து வெற்றியடைந்தமைக்காக இவ்விரு விவசாயிகளும் புதுமைப் பண்ணையாளர் விருதைப் பெற்றுள்ளனர்.பொருளாதார ரீதியான பலன்கள்வ.எண் - பயிர் - கூடுதல் மகசூல் (டன் / ஹெக்டேர்) - கூடுதல் வருவாய் (ரூபாயில்)1. உருளைக்கிழங்கு (ரூ.10/ கிலோ) - 6.5 - 65000 2. கேரட் (ரூ.12/ கிலோ) - 5.0 - 600003. பீன்ஸ் (ரூ.20/ கிலோ) - 3.75 - 750004. முட்டைகோஸ் (ரூ.3/ கிலோ) - 17.5 - 52500முனைவர் ப.சுந்தராம்பாள், முனைவர் கூ.கண்ணன், முனைவர் து.ச.சாகுமுனைவர் மா.மது மற்றும் பெ.சந்திரன், உதகமண்டலம்.